Thursday, September 22, 2022

சீனாவில் உள்ள சிவன் கோயில்


சோழர் காலத்தில் சென்று, சீனாவில் நிரந்தரமாக தங்கி வணிகம் புரிந்து வந்த தமிழ் வணிகர்கள் செங்கிஸ்கானின் பேரன் குப்லாய் கானின் வேண்டுகோளுக்கிணங்க கட்டப்பட்ட சீனாவில் உள்ள சிவன் கோயில் இது.

பட உரிமம்: அனந்த நாராயணன்

இந்தியாவுக்கு எதிராக எப்பொழுதுமே அரசியல் பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்கும் சீனர்கள் கூட இந்த சிவன் கோயில் எப்போது இடிந்து விழும் என்று கேட்டதில்லையே!!!

சிவன் கோயில் கட்டிய குப்லாய்கான்
சீனர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவித்த போதிதர்மன் போன்ற பலர் பற்றி அரியத் தகவல்கள் இன்னும் ஏராளம் வெளிவராமல் உள்ளன.

தாஜ்மகால் என்பது தேஜோ மகால் என்ற சிவன் ஆலயத்தின் மீது கட்டப்பட்ட கல்லறை, என்ற சர்ச்சை அண்மையில் கிளம்பி வருகிறது. இன்னும் நிறுவப்படாத அந்த கூற்று ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஒரு வேளை தாஜ்மகால் இடிந்தால் சிவன் கோயிலும் அழிந்து விடும் பரவாயில்லையா?

உண்மையில் தாஜ்மகால் கட்டுமானத்தின் பின்னணியில் மிக மோசமான குருதிக் கறைகள் படிந்த வரலாறு உள்ளது. இந்தாண்டு ஃபிஃபா கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக கத்தார் நாட்டில் கட்டப்பட்ட கால்பந்து மைதானங்களால் ஏற்பட்ட மரணங்களை விட, தாஜ்மகால் கட்டுமான மரணங்கள் அதிகம்.

அதுவும் பெரும் உணவுப் பற்றாக்குறை பஞ்சம் நிகழ்ந்த 17 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது இந்தக் கல்லறை.

எது எப்படி இருந்தாலும் தாஜ்மகால் தற்போது இந்தியாவின் சொத்து. மேற்குலகத்தில் காந்தியைப் போல தாஜ்மகாலும் இந்தியாவை நினைவு கூறும் ஒரு அடையாளமே! அவற்றால் ஈர்க்கப்பட்டு இந்தியாவைப் பற்றி மேலும் படிப்பவர்களும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வரும் மேற்குலக சுற்றுலாப் பயணிகளும் அவற்றை மிதமிஞ்சிய அளவிலான, அதுவும் தாஜ்மகாலின் காலத்திற்கும் மிகவும் முற்பட்ட ஆயிரக்கணக்கான கோயில்கள் மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை உண்மையை நேரில் கண்டு உணர்கின்றனர்.

"அடுத்தவனுக்கு குழி தோண்டும் நேரத்தில் உனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்" —

சீனப் பழமொழி

முகலாயக் கட்டுமானங்கள் மீது காட்டும் அக்கறையை மூத்த குடிகளான தமிழ் குடிகளின் கட்டுமானங்கள் நாசமாய் போய்க் கொண்டிருப்பதன் மீது செலுத்தினால் நல்லது.

உலகின் மிகப் பழமையான கோயில்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

நன்றி : india.in.pixels

இறையியல் கோட்பாடுகளுக்கான கட்டுமானங்களை பிரம்மாண்டமாகவும், கலை நுணுக்கங்களுடனும் நிறுவுவதில் தமிழ் சைவர்களே ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். மூவேந்தர்களின் அரசு மரபுகளும் இதில் பங்கு வகித்தனர்.

தொழில்நுட்பமும் அறிவியல் வளர்ச்சியும் நன்கு ஏற்பட்ட இந்த காலகட்டத்தில், அது போன்ற கோயில்களை எழுப்ப நமக்கு வக்கில்லாத நிலையில் அவற்றை மூர்க்கத்தனமாக அழிப்பதில் போட்டி போடுகிறோம்.

மேற்கண்ட மூன்று புகைப்படங்களும் நான் எடுத்தது தான்.

முதலாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மலைக் கோயிலில் பழமையான கோயில் துணை தகர்த்து படிக்கட்டாக வைத்துள்ள அவலம். நானும் என் நண்பரும் பார்த்து விட்டு அறநிலைத்துறை அதிகாரியைக் கேட்டால் அலட்சியமாகத் தான் பதில் சொல்கிறார்கள். அர்ச்சர்களிடம் கேட்டால் "கோயிலுக்கு வந்த வேலையை மட்டும் பாரு" என்று அன்புடன் உபசரிக்கிறார்கள்.

அடுத்த இரு புகைப்படங்களும் மதுரை அழகு மலையான் கோயிலின் அவலம். இப்போது சரி செய்து விட்டார்கள்.

இங்கே மாயக்கண்ணன் படுத்துக் கொண்டிருக்கிறாரே இது பல்லவர் காலத்து கட்டுமானம். தொண்டூரில் வயல்வெளியின் நடுவில்.

பட உதவி: சே. கனி

அது இப்போதும் இருக்கிறதா இல்லை ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்று விட்டு, இடித்து தூளாக்கி வீடு கட்டி விட்டார்களா என்று தெரியவில்லை?

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் திருக்கோவிலில்,1864-இல், ஒரு வட இந்தியக் குடும்பம் அமர்ந்து கொண்டிருக்கும் இந்தத் துல்லியமான கலை நுணுக்க வேலைபாடுகளைக் கொண்ட நந்தி சிலையை அந்த நந்தி பகவானே பூமிக்கு வந்தாலும் காண முடியாது!!! ஏனென்றால் இந்த சிலை இப்பொழுது அங்கே இல்லை எங்கே போனது முற்று முழுதாக என்று யாருக்குமே தெரியவில்லை!!!!

பட உதவி : ஓசூர் சிவா

முன்னோர்கள் முட்டாள் இல்லை என்று சொல்கிறோம். ஏனென்றால் நாம் தான் முட்டாள்கள். இவ்வளவு அழகிய பண்பாட்டுப் பெருமிதங்களை தொலைத்துக்கொண்டே, 300 ஆண்டுகள் பழமையான முகலாயர் கட்டுமானங்கள் எப்போது இடிந்து விழும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.

இது தமிழ்நாட்டில் உள்ள கோயில் தான். எந்தக் கோயில் என்று தெரியவில்லை. தஞ்சாவூரில் என் நண்பனுடைய நண்பன் புகைப்படம் எடுத்ததாகச் சொல்லி அனுப்பி வைத்தான். (அந்த ஜட்டியையும் நைட்டியையும் காயப் போடுவதற்கு அவர்களுக்கு தஞ்சாவூரில் வேறு இடமே கிடைக்கவில்லை என்பது பெரும் துயரம்)

பட உதவி : என்னுடைய நண்பன் தமிழ்ச்செல்வன்

சென்னிமலை முருகன் கோயில் முதல் தமிழ்நாட்டின் எத்தனையோ கோயில்களில் சிலைகளில், மண்டபத்தில் சுவர்களில் தன் பெயரைக் கிறுக்கி வைக்கும் பைத்தியக்காரத்தனமான பிறவிகளை நீங்கள் உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது.

ஊத்துக்குளி, கதித்த மலை மேலுள்ள முருகன் கோவிலின் பழமையான மண்டப முற்றத்தில் ஒரு காதல் இணையர் இவ்வாறு தம் பெயரை எழுதிக் கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரத்துடன் கேள்வி கேட்டால் "ஏன் உனக்கு ஆள் இல்லையேன்னு பொறாமையா என்று பொறுப்புணர்வு மற்றும் பொதுநலனுடனும் பதில் வருகிறது.

தொல் தமிழ்நாட்டு கட்டிடக்கலை மீது தீராத காதல் கொண்டவர்கள் தயவு செய்து இந்த 1:30 நிமிடங்கள் அளவுள்ள காணொளியைப் பார்க்க வேண்டாம். அது உங்கள் மனதை சிதைத்து விடும். (சோழர் கட்டிடக்கலை என்றால் என்னவென்றே தெரியாமல் சமூக ஊடகங்களில் பெருமை பேசி உளறும் தமிழர்கள் ஒரு பக்கம், தமிழ்நாடு தொல்லியல் துறை மறுபக்கம், இந்தியத் தொல்லியல் துறை இன்னொரு பக்கம் இத்தனை பேரும் எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை? பழந்தமிழர் கட்டிடக்கலைக்கு திவசம் செய்யவா இருக்கிறார்கள்?)

நன்றி : தி இந்து

நாம்தான் கேவலமாக இருக்கிறோம் என்று பார்த்தால் தென்னிந்தியா முதல் வட இந்தியா வரையில் இதைவிடவும் கேவலமாக இருக்கிறது.

இது கர்நாடக அவலம்.

பட உதவி: vedism Facebook page

வட இந்தியாவில், ஒய்சாளர் பேரரசு (Hoysala Empire) பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் சேர்த்து ஆண்டு வந்தது. இந்த அரச மரபின் சிற்பங்களை எவ்வளவு அழகாகக் குப்பைத் தொட்டியில் வைத்து பராமரிக்கிறார்கள்.

பட உதவி: Sunday Indian times

முறைகேடான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட பிறகு, அதற்கு பட்டாசு வெடிக்கிறேன் என்று சொல்லி அதிமுகவினர் காளையார் கோயிலைக் கொளுத்தி விட்டார்கள். உடனே தீ அணைக்கப்பட்டது.

எத்தனையோ சோழர் காலத்து கோவில்களில் தூண்கள் மீது ஆணி அறையப்பட்டு, கல்வெட்டுகள் மீது சிமெண்ட் வைத்து பூசப்பட்டு அறநிலையத்துறை செய்யும் மாற்றங்கள் படு பயங்கரம்.கோயிலின் அர்ச்சகர்கள் மற்றும் ஆச்சாரியார்கள் ஏன் அதைக் கேள்வி எழுப்புவதில்லை?

இன்னும் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு.

  1. தாஜ்மகால் எல்லாம் ஒரு அதிசயமே இல்லை என்று சொல்லுமளவிற்கு, தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு 20 கிலோமீட்டர்களுக்கும் பழமையான கோயில்கள் அதிசயங்களாக உள்ளன.
  2. 38,000 கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், குறைந்தது 2000 கோயில்களையாவது அதிசயங்களாக அறிவிக்கலாம். தெருவுக்கு தெரு தமிழரின் கட்டுமானங்கள் வியக்க வைக்கும் அளவுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட கலை நுணுக்கங்களுடன் உள்ளன.
  3. டிஸ்கவரி சேனல் மற்றும் மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் அவற்றை ஆராயுமளவுக்குக் கூட நாம் செய்யவில்லை.
  4. நாம் வெற்றுப் பெருமிதம் பேசுவதிலும் திருநள்ளாறு கோயிலுக்கு மேல் செயற்கைக்கோள் செயல் இழந்து போகும் என்று முட்டாள்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதையும் தாண்டி ஆழ்மன வன்மத்துடனும் வக்கிரத்துடன் அவற்றின் இருப்பையும் அழிக்கவே துணிந்து விட்டோம்.
  5. உண்மையில் நேற்று தோன்றிய யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் உலக அதிசயத்திற்கு தகுதியாக நிர்ணயித்
  6. துள்ள வரையறைகளைத் தாண்டிய பெரும் சாதனைகள் தான் நமது கட்டுமானங்கள். அவர்களுடைய எல்கேஜித்தனமான விதிமுறைகளை தாண்டிய பேரதிசயம் நமது கோயில்கள் மற்றும் கல்லணை போன்றவை.
  7. அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றதே நமது எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்.
  8. 16 கிலோமீட்டர் நீளமுள்ள, 985 ஆம் ஆண்டு ராஜாதித்ய சோழனால் கட்டப்பட்ட வீராணம் ஏரியை விட, அண்மையில் கட்டுப்பட்ட வெறும் 8 கிலோமீட்டர் நீளமுள்ள வெஸ்டர்ன் பராய் ஏரியைத் தான் வரலாற்று ஆய்வாளர்கள் மனிதனால் வெட்டப்பட்ட முதல் பெரிய ஏரி என்று சொல்லி வருகிறார்கள்.
  9. இதையெல்லாம் கேள்வி எழுப்பாமல், இதையெல்லாம் பாதுகாத்துப் பராமரிக்காமல், இதன் நீட்சியை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் எப்படி மேலும் மெருகேற்றுவது என்று சிந்திக்காமல், 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லறை எப்போது இடியும் என்று உட்கார்ந்து கொண்டிருப்பது என்ன வகையான மனநிலை?

"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை"

No comments:

Post a Comment

இந்தியாவின் முதல் வார இதழா

  ரஸ்ஸி கரஞ்சியா என்பவரால் 1941 Blitz , பிளிட்ஸ் சிறுபத்திரிகை தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் வார இதழாகும். இது புலனாய்வு பத்திரிகை ம...