Tuesday, February 21, 2023

காஷ்மீர் பண்டிட்டுகளின் வரலாறு

 

காஷ்மீர் பண்டிட்டுகளின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை பற்றி விரிவாக எழுத முடியுமா?

மிக நீண்ட வரலாறு…விரும்பும் அன்பர்கள் தொடரலாம்…

சொந்த மண்ணில் அகதிகளாகிப் போன அவலம்:

பூவுலகின் சொர்க்கம் காஷ்மீர்.

காஷ்மீர் பண்டிட்டுகள்.

காஷ்மீரில் தழைத்தோங்கி இருந்த சைவ சமயம் ' 'ப்ரத்யபீஜனா ' எனப்பட்டது.பல்வேறு சாதி இந்துக்கள்.ஆனால் அவர்களின் ஒரே கடவுள் சிவன்.பிராமணர்கள் செல்வாக்குடன் இருந்தார்கள்.வேத காலத்தில் சரஸ்வதி நதிக்கரையில் இருந்து இடம் பெயர்ந்து காஷ்மீர் வந்து வசிக்கத் தொடங்கியதாக ஒரு நம்பிக்கை அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிந்திருந்தது.பிரம்மனின் வழி வந்தோர், வேதம், கல்வியில் சிறந்தோர். பட்டாக்கள் Bhattas என்றும் , பின் பண்டிட்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர்.

பிராமணர்கள் மட்டுமே பண்டிட்டுகள் என்று அழைக்கப்பட்டு , பின் இஸ்லாம் நுழைந்த பிறகு, முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் பண்டிட்டுகள் எனப்பட்டனர்.

காஷ்மீரில் புத்தமதம்:

லடாக். புத்தமதம் பரவிய பகுதி.

கி மு 3- ம் நூற்றாண்டில் புத்த மதத்தை பரப்ப அசோகர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய பௌத்த துறவிகள் போகும் வழியில் காஷ்மீரிலும் புத்த மதத்தை பரப்ப ஆரம்பித்தனர்.கிட்டத்தட்ட 5000 வருடங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் பண்டிட்டு களின் பங்களிப்பு அபரிமிதமானது. அசோகர், கனிஷ்கர் போன்ற மன்னர்களின் ஆதரவு இருந்ததால் புத்த மதத்தை வெறுக்க முடிந்ததே தவிர..எதிர்க்க முடியவில்லை.மாபெரும் பௌத்த ஞானி நாகார்ஜுனர் இங்கே தான் இருந்தார்.பார்க்கப் போனால் காஷ்மீர் நகரையே அசோகர் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்ததால் கல்வி நிர்வாகம், பொதுப்பணித்துறை என அனைத்திலும் பண்டிட்டு களின் கையே பள்ளத்தாக்கில் ஓங்கி இருந்தது.மிகப்பெரிய நிலங்கள் கையில் இருந்ததால் செல்வத்தில் கொழித்தனர் . இந்துக்களில் பலர் பௌத்த மதத்திற்கு மாறிக்கொண்டிருந்தனர்.பௌத்த மடாலயங்கள் உருவாகின.புத்த மதத்தில் அதிகமானோர் இணையவும் செய்தனர்.

வேலியில் போன ஓணான்.. காஷ்மீர் வேலிக்குள்…

அப்போது காஷ்மீரை ஆண்ட சுகதேவா 1301–1320 என்ற பௌத்த மன்னன் இந்துக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தான்.பௌத்தர்களூக்கு கிடையாது.மேலும் இந்துக்களை மட்டம் தட்ட முஸ்லிம்களை வரவழைக்க முடிவு செய்தான்.ஆப்கனிலிருந்து புல்புல் ஷா , ஸ்வாட் பகுதியில் இருந்து ஷா மிர் மற்றும் திபெத்தில் இருந்து ரிச்சனா ( பௌத்தத்திலிருந்து முஸ்லிமாக மாறியவர் ) தங்கள் பரிவாரங்களுடன் , மன்னரால் தங்களுக்கென்று தனித்தனியாக அளிக்கப் பட்ட கிராமங்களில், சம்மனமிட்டு அமர்ந்தார்கள்.இஸ்லாம் உள்ளே நுழைந்தது தெரிந்ததும் செங்கிஸ்கான் வழிவந்த துலுச்சா காஷ்மீர் மீது படையெடுத்து, கொலை ,கொள்ளை, பாலியல் வன்முறை என அறுபதாயிரம் வீரர்களோடு காஷ்மீரைச் சூறையாடினான்.50 ஆயிரம் பண்டிட்டு களை அடிமையாக்கி அழைத்துச் செல்லும் வழியிலேயே அனைவரும் உயிரிழந்தனர்.

பல்கிப்பெருகிய இஸ்லாம்.

அக்பர் முதல் ஔரங்கசீப் வரை காஷ்மீர் மீது படையெடுத்ததன் மூலமாக காஷ்மீரில் இஸ்லாம் தழைத்து வளர்ந்தது. ஷியா, ஸன்னி, சூஃபி பிரிவுகள் காலப்போக்கில் தங்களுக்கென்று தனித்தனியான இடங்களில் வாழ ஆரம்பித்தனர்.காஷமீரில் சன்னி முஸ்லிம்கள் , வடமேற்கில் கில்கிட் , பால்டிஸ்தான் பகுதியில் ஷியா , மேலும் வடமேற்கில் லடாக் பகுதியில் பௌத்தர்கள் என பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.ஜம்முவில் இந்து முஸ்லிம் கலந்திருந்தனர்.

சூஃபி நல்லிணக்கம்.

இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபியிசம் உள்ளே நுழைந்து மத நல்லிணக்கம் என்றால் என்று அம்மக்களுக்கு கற்றுக் கொடுத்தது.இந்து முஸ்லிம் பௌத்தர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , வேறெங்கிலும் காணாத அளவுக்கு ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.எனவே தான் 14 ம் நூற்றாண்டுக்குப் பிறகு பல காலம் முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட போதும் , இந்துக்களும், பௌத்தர்களும் எந்தவித ஆட்சேபனையோ வருத்தமோ இன்றி சந்தோஷமாக வாழ முடிந்தது.

அக்பர் முதற்கொண்டு பல்வேறு முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தாலும், ஆட்சியாளர்களால் பிரச்சினை வந்ததே தவிர, மக்கள் ஒருவருக்கொருவரால் அல்ல.. இதன் பின்னர் பஞ்சாப்பை ஆண்ட ராஜா ரஞ்சித் சிங் காஷ்மீரை பிடித்தார்.சீக்கியருக்கும் ஆங்கிலேயருக்கும் லாகூரைப்பிடிக்கும் யுத்தத்தில் காஷ்மீரின் குறுநில மன்னரான குலாப் சிங் ஆங்கிலேயருக்கு உதவியதால் காஷ்மீர் டோக்ரா வம்சத்தில் வந்த அந்த மன்னன் குலாப் சிங் குக்கு பரிசளிக்கப்பட்டது.

பிரச்சினையின் நாயகன் ஹரிசிங்.1925- 1947 வரை.

குலாப் சிங்கின் தலைமுறையில் வந்த ராஜா ஹரிசிங் மக்களின் பிரச்சினை குறித்து அலட்டிக் கொள்ளாத கடைந்தெடுத்த சுயநலவாதியாக இருந்தார்.தனது நாட்டில் இருப்பது பெரும்பான்மை முஸ்லிம்கள் என்ற எண்ணம் கூட இல்லாதவர்.சமஸ்தானத்தின் பதவிகள் அனைத்திலும் இந்துக்கள் நியமனம் செய்யப்பட்டனர்.பெருவாரியான நிலங்களும் இந்துக்களுக்கே.அதிகாரம் முழுவதும் இந்துக்கள் கைகளில் குவிந்திருந்தன.

பெரும்பாலான முஸ்லிம்கள் கால்நடைகளை மேய்த்தும், கம்பளி நெய்தும், இந்துக்களின் நிலங்களில் கூலி வேலை செய்தும் மிகக்குறைந்த கூலி பெற்று, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.எனவே பள்ளத்தாக்கில் இருந்த அனைத்து முஸ்லிம்களும் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர்.

மக்கள் தலைவன் ஷேக் அப்துல்லா.

ஹரிசிங் கிற்கு 10 வயது இளையவர்.. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பட்டப்படிப்பு முடித்தவர்.மதசாசார்பற்ற கொள்கைகளுக்காகவும் காஷ்மீரின் ஒட்டுமொத்த மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தன்னை வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டவர்.அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், என அனைத்து மக்களும் நம்பிய தலைவர். நேருவின் நம்பிக்கைக்குரிய நண்பர். ஹரிசிங்கின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற மக்களைச் சேர்த்துக் கொண்டு, மன்னரது மாளிகை நோக்கி சென்ற போது , அவர்கள் மீது அரசுப்படை நடத்திய தாக்குதலில், 50 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஷேக் அப்துல்லா மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால்.. கட்சியின் வழியாக அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.

புதிய கட்சி உதயம்.

மன்னரை அகற்றி மக்களாட்சி கொண்டு வரவேண்டும் என்பதற்காக புதிய கட்சியான தேசிய மாநாட்டு கட்சி யை ஆரம்பித்தார். மதவேறுபாடின்றி அனைத்து மக்களும் அவருடன் இணைந்து போராடியதால் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் பாக்கிஸ்தான் காஷ்மீர் மேற்கு எல்லையை ஒட்டிய பூஞ்ச் பகுதி மக்களின் உதவியுடன் பதான் என்ற ஆதிவாசி முஸ்லிம்களுக்கு ஆயுதம் மற்றும் பல்வேறு உதவிகளை செய்து காஷ்மீருக்குள் ஊடுருவச்செய்தது.. மன்னன் ஹரிசிங் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவின் உதவியைக் கோரினார்.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்படும்.அதன் தன்னாட்சி உரிமைகள் மதிக்கப்படும். மேலும் அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி. அவர்களின் முடிவைப்பொறுத்து காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டுமா ? இல்லையா? என்று தீர்மானிக்கப்படும்.மேலும் பழைய பிரதமரை நீக்கி விட்டு ஷேக் அப்துல்லா பிரதமராக வேண்டும்..இதை ராஜா ஹரிசிங் ஏற்றுக் கொண்டதும்..இந்திய ராணுவம் அதிரடியில் இறங்கியது.

1948 ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் முதல் யுத்தத்தில், ராணுவத்தினர் உள்ளே நுழைந்தோர்களை முசஃபராபாத் வரை விரட்டி அடித்தனர்.காஷ்மீரின் புவியியல் அமைப்பை அறிந்திராத ராணுவத்தால் மேற்கொண்டு செல்ல இயலவில்லை. பிரச்சனை ஐ நா வரை சென்று, எல்லைக்கோடு வரையப்பட்டது.பதான் படையினர் ஆக்கிரமித்த பகுதி போக எஞ்சிய பகுதி காஷ்மீர் ஆனது..மற்றது

370 பிரிவால் வந்த முரண்பாடு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்.( நமக்கு ) ஆசாத் காஷ்மீர் ( அவர்களுக்கு) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 370 ல் இரண்டாவதாக இணைக்கப் பட வேண்டிய பொது வாக்கெடுப்பு என்ற விவரம் குறிப்பிடப்படாதது, காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.அவர்களைப் பொறுத்தவரை இந்தியாவும் பாகிஸ்தானும் தேவையில்லை. முழுமையான சுயச்சார்புள்ள சுதந்திர காஷ்மீர்.. வேண்டும்.

ஆர் எஸ் எஸ்..நுழைகிறது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது , பஞ்சாப் இரண்டாகப் பிரிந்து கிழக்கு பஞ்சாப் இந்தியாவுடன் இணைந்தது.அதோடு பஞ்சாப் காஷ்மீரை இணைக்கும் முக்கிய சாலையும் சேர்ந்தே வந்தது.பாக்.பகுதியிலிருந்து கிளம்பிய இந்துக்களின் ஒரு பிரிவினர் இப்பாதை வழியாக பஞ்சாப் எல்லையில் இருந்த ஜம்மு வில் பெரும்பாலோரும் காஷ்மீர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவினரும் குடியேறினர். இந்துக்களை பாதுகாக்க என்று பின்னாலேயே ஆர் எஸ் எஸ் ம் நுழைந்தது. காஷ்மீரில் முஸ்லிம்களின் எழுச்சியை தடுக்க ஆர் எஸ் எஸ் ஐ பயன்படுத்த நினைத்தார் மன்னர்.பூஞ்ச் கலவரத்தை போல மற்ற இடங்களில் பரவாமல் இவர்கள் ஜம்மு , ஊரி , முசஃபராபாத் போன்ற இடங்களில் பரவி ஆயுதம் ஏந்தி காவல் காத்தனர்.இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் முடிந்த அளவு முஸ்லிம்களை கொல்ல வாய்மொழி உத்தரவை மன்னர் பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது .இதனால் பல இடங்களிலும் இந்து முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பித்தன. எப்படியும் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் முற்றிலும் இணைத்து விடுவார் என எண்ணினர்.ஆர் எஸ் எஸ் க்கு மன்னரது ஆதரவு.மற்றும் இந்துக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள்.இரு பிரிவினரிடையே விரோதத்தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது.

ஜம்மு பிரஜா பரிஷத்.:

இன்னொரு பிரச்சினை ஜம்மு பிரஜா பரிஷத் என்ற புது அமைப்பு , இந்து மதம் , இந்திய தேசியம் என தீவிரமாக தனது நடவடிக்கைகளில் இறங்கியது.அப்துல்லா பிரதமர் ஆன பின் காஷ்மீரில் கொண்டு வந்த பல திட்டங்களை இந்துக்களுக்கு எதிரானது என குற்றம் சாட்டியது.பெரிய பண்ணை நிலங்கள் அபகரிக்கப்பட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.இதில் பலனடைந்தோர் பெரும்பாலும் முஸ்லிம்கள்.பாதிக்கப்பட்டோர் இந்துக்கள். முஸ்லிம்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.ராணுவத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்கள் பணியமர்த்தப் பட்டனர் .இது தனிப்பட்ட மதத்துக்கானதல்ல. மக்களின் விகிதாச்சாரப் படி அனைத்த பணியிடங்களும் நிரப்பப்பட்டன..ஆனால் ஜம்முவில் வாழ்ந்த இந்துக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதும் உண்மை.

காஷ்மீருக்கான சிறப்பு சலுகைகள்..:

காஷ்மீரில் நடக்கும் மதக்கலவரங்களை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் , மதச்சார்பற்ற நிலை என்பது இந்தியாவின் இரட்டை வேடம் எனவும் நினைத்து அவர் மத்திய அரசை தாக்கி பேசியதைக் கண்ட நேரு அப்துல்லா வை டெல்லிக்கு அழைத்து காஷ்மீருக்கான தனிசட்டம் , தனிக்கொடி , அவர்களது கவர்னரை அவர்களே நியமித்துக் கொள்ளலாம்.ஆனால் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பிரிக்கமுடியாத அங்கம்..என்ற வரைவில் கையொப்பமிடச்செய்தார்.ஆனால் இதற்கு பிரதியுபகாரமாக ஹரிசிங்கின் ஒரே மகன் கரன் சிங் ஜம்மு காஷ்மீரின் மாநிலத்தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு உதவ அருகே ஒரு ஒற்றன்.. ஏனெனில் ஷேக் அப்துல்லாவின் எதிர்மறையான கருத்துக்களால் அவர் ஒரு வேளை பாகிஸ்தான் கைகளில் விழுந்து விடுவாரோ என்ற ஐயம் அரசுக்கு இருந்தது.

இந்தியாவுடன் அதிகரித்த முரண்பாடுகள்.

காஷ்மீரில் பொதுத்தேர்தல் நடைபெறும் போதெல்லாம் காங்கிரஸ் அதனுடைய கூட்டணி கட்சிகள் மட்டுமே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.பணம் பெட்டி பெட்டியாக வந்திறங்கும். வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்பட்டாலும் , எதிர் கட்சிகள் எப்போதும் வெற்றி பெறாதவாறு , தில்லுமுல்லுகள் நடைபெறுவது வழக்கமாகிப்போனது.இதற்கு ஷேக் அப்துல்லா வும் விதிவிலக்கல்ல., அவரும் இந்த வழியை பின்பற்றியுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு சலுகைகளை பிரஜா பரிஷத் கடுமையாக எதிர்த்தது.இந்தியாவின் ஒரு மாநிலம் காஷ்மீர் எனில் , தனிபிரதமர் , தனி கொடி தனி சட்டம் எதற்கு? காஷ்மீர் சமஸ்தான கொடி பறந்து கொண்டிருந்தால் அதை இறக்கி விட்டு தான் மறு வேலை.எனவே இந்து மதத்தையும் , இந்திய தேசியவாதத்தையும் முன்னெடுத்த ஆர் எஸ் எஸ் , பிரஜா பரிஷத் மற்றும் புதிதாக தோன்றிய ஜனசங்கம் போன்ற அமைப்புகளை முஸ்லிம்கள் அறவே வெறுத்தனர்.இந்துக்களோ தம்மை காத்து இந்தியாவுடன் இணைக்க வந்த மாபெறும் சக்தியாக நினைத்தனர்.அடிக்கடி இவர்களுக்கிடையே அடிதடியில் ஆரம்பித்து , ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்குதல் நடக்கும் அளவுக்கு வன்மம் தலை தூக்கியது.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி.

ஜனசங்கம் என்ற கட்சியைத் தோற்றுவித்தவர். இதுவே தற்போதைய பிஜேபி. . இவர் காஷ்மீரின் இந்து அமைப்புகளுக்கும் மிகப்பெரிய அளவில் ஆதரவளித்தார்.இந்தியாவின் ஒரு அங்கம் காஷ்மீர் என்று நேரு கூறுகிறார்.அப்படியென்றால் காஷ்மீருக்குள் நுழைய பெர்மிட் எதற்கு? இதை சோதனை செய்வதற்காக பெர்மிட் இல்லாமல் காஷ்மீருக்குள் நுழையும்போது காவல்துறையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். வயதான காரணம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மரணம் அடைந்தார்.இயற்கை மரணம் என ஊர்ஜிதமானாலும் , ஷேக் அப்துல்லா தான் விஷ ஊசி போட்டு கொன்று விட்டார் என வதந்தி பரவ ஆரம்பித்தது.அவ்வளவு தான் பற்றிக் கொண்டது.பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என காஷ்மீர் கதிகலங்கியது.பாரபட்சமற்ற விசாரணைக்கு ஷேக் அப்துல்லா உத்தரவிடவேண்டும் என் நேரு கேட்டுக் கொண்டது அப்துல்லாவுக்கு மன வருத்தத்தை அளித்தது.எனவே இருவருக்கும் இடையே மேலும் விரிசல் ஏற்பட்டது.

ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்யும் போதும் .பாகிஸ்தானுடன் சேர்ந்து விடுவாரோ என சந்தேகம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.அடிக்கடி ஆளும் நபர்கள் மீது திருப்தி இல்லையெனில் 365 அமல் படுத்தப்படும்.இந்த சட்டம் காஷ்மீருக்கு பொருந்தாது, என்ற உடன்படிக்கை காற்றில் கரைந்தது. அப்துல்லா வுக்கு எதிராக ஜமாஅத் ஏ இஸ்லாம் என்ற காஷ்மீரின் விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அமைப்பைக் கூட ஆதரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கீழ்த்தரமாக நடந்து கொண்டது காஷமீரிகள் அனைவருமே காங்கிரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது.ஆளும் வர்க்கம் இதையெல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

காஷ்மீர் மக்கள்.& அப்துல்லா

காஷ்மீர் மக்களோ அல்லது ஷேக் அப்துல்லா வோ எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானுடனோ அல்லது இந்தியாவுடனோ முற்றிலும் இணைய விரும்பவில்லை.அவர்களைப் பொறுத்தவரை சுதந்திர காஷ்மீர்…இந்தியாவின் பாதுகாப்பில் தனி நாடாக இருக்கவே விரும்பினர். வாக்கெடுப்பின் மூலமாக மக்களின் ஆசைப்படி அனைத்தும் நடக்கும் என்ற இந்தியாவின் வாக்குறுதியை நம்பினர்.ஆனால் அங்கே நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் . ஷேக் அப்துல்லா வின் கண்டனப் பேச்சுகளும் எங்கே பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்களோ என்ற சந்தேகம் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்ததால், தாங்கள் நினைத்தபடி காஷ்மீரை வளைத்ததும் ,ஒப்புக் கொண்டபடி மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ள வாக்கெடுப்பு நடத்தவும் முன்வராததோடு,365 சட்டப்பிரிவை அடிக்கடி அமல் படுத்தி , மக்களின் எண்ணங்களை புரிய வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தோடு நடப்பதாகவும் மக்களுக்கு உணர்த்தப்பட்டது.. தங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் , மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு ஆதரவாகவும் இந்தியா நடந்து கொள்வதாக முஸ்லிம்கள் நினைத்தனர்.அதுவரை சகோதரர்களாக வாழ்ந்து வந்த இரு பிரிவினரும், ஒருவரையொருவர் அழிக்க தருணம் பார்த்திருப்பது போன்ற ஒரு பதட்டம் உருவாகியிருந்தது.பொதுத்தேர்தல் நடந்தால் தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சிறு சிறு இஸ்லாமிய குழுக்கள் ஈடுபட்டனர்.

ஹஜ்ரத் பால் மசூதி : 1963 டிசம்பர் 26

சீக்கியர்கள்- முஸ்லிம்கள் இணைந்து கட்டிய ஹஜ்ரத் பால் மசூதி.

காஷ்மீரில் சுமார் 300 ஆண்டுகளாக ஹஜ்ரத் பால் மசூதியில், நபிகள் நாயகத்தின் ரோமம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது.முஸ்லிம்களால் மிகவும் புனிதமாக போற்றப்பட்ட அந்த ரோமம் திடீரென காணாமல் போனது மிகப்பெரிய கொந்தளிப்பபை உலகளாவிய இஸ்லாமியர்களிடையே ஏற்படுத்தியது .இதற்கு காரணம் ஆட்சியாளர்களின் கையாலாகாத தனம் என கண்டனக் குரல்கள் எழும்பின..நேருவே நேரடியாக வானொலி வாயிலாக பதட்டமடையாமல் அமைதி காக்கும் படியும், கண்டிப்பாக விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு மசூதியில் ஒப்படைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.நல்லவேளையாக அது ஏன் எப்படி என்று யாருக்கும் தெரியாமல்.. 1964 ஜனவரி 4ல் மீண்டும் வந்து சேர்ந்தது. இந்து அமைப்புகள் தங்கள் மத நம்பிக்கையுடன் விளையாடுவதாக முஸ்லிம்கள் நினைத்தனர்.

புது கவர்னர்.புதிய பிரச்சினை.

வைஷ்ணவி தேவி கோவில்.காஷ்மீர்

ஷேக் அப்துல்லா மரணமடைந்த வேளையில் காஷ்மீரின் புதிய கவர்னராக ஜக்மோகன் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.அவரிடம் இந்துக்கள் சந்தோசப்படும் படி நடந்து கொள்ளும்படி கூறப்பட்டாகத் தெரிகிறது.இவர் பொறுப்பேற்றதும் , முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் இருந்த வைஷ்ணவி தேவி கோவிலை புனரமைத்து, ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றி , வருவோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததோடு, அக்கோவிலுக்கு அனைவரும் வந்து தரிசிக்க விளம்பரம் வேறு செய்தார்.

தாங்கள் பெரும்பான்மையினராக இருக்கும் தங்கள் பகுதியில் இந்துக்கள் நடமாட்டம் அதிகரித்ததைக் கண்ட முஸ்லிம்கள் இனிமேல் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என நினைத்தனர்.அதோடு கிருஷ்ணன் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆடு வெட்டக்கூடாதென்று , இந்தியாவில் கூட இல்லாத உத்தரவை பிறப்பித்தார்.மேலும் கவர்னர் மாளிகையில் இருந்த இஸ்லாமியர் அனைவரும் பணியிலிருந்து விலக்கப்பட்ட தும், இஸ்லாமிய சமூகம் கொதித்துப் போனது.

ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலம் நடத்திய மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் ஒடுக்கப்பட்டனர்.. தினமும் கலவரம் துப்பாக்கி சூடு என காஷ்மீரின் அன்றாட வாழ்க்கை நரகமாகிப்போனது நிஜம்.

காஷ்மீர் இளைஞர்கள்..

காங்கிரசின் ஆதரவில்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைக்கு முடிவு கட்ட நினைத்த காஷ்மீர் இளைஞர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.எந்த காரணத்தைக் கொண்டும் ஃபரூக் அப்துல்லாவின் ( ஷேக் அப்துல்லாவின் மகன் ) கட்சியோ காங்கிரசோ வெற்றி பெறக்கூடாது . என்று காஷ்மீரில் இயங்கி வந்த பல சமூக இயக்கங்கள், பொதுநல அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், சில தீவிரவாத குழுக்கள் அனைத்தையும் இணைத்து முஸ்லிம் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டனர். மதச்சார்பின்மை இனி கிடையாது. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் மாநிலத்தில் முஸ்லிம்கள் ஆட்சியே நடைபெற வேண்டும்.முஸ்லிம்களுக்கு நன்மை பயக்காத எந்த கட்சியும் தேவையில்லை என தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. கருத்துக்கணிப்பில் கண்டிப்பாக அதிகபட்ச இடங்களைக் கைப்பற்றுவார்கள் என்ற நிலையில், அதே கேவலமான நடைமுறைகள் பின் பற்றப்பட்டு, வாக்குச்சீட்டுக்கள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது குளறுபடி செய்து, அதிரடியாக ராஜிவ் ஃபரூக் அப்துல்லாவின் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மிக நிச்சயமாக வெற்றி பெறும் தொகுதிகளில் கூட முஸ்லிம் ஐக்கிய முன்னணி தோல்வி அடைந்தது.இத்தகைய தேர்தல் அராஜகங்களைக் கண்ட பல இளைஞர்கள் பாகிஸ்தான் உதவியுடன் ஆயுதமேந்தி . தீவிரவாத செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

ஆயுதக் குழுக்களை உருவாக்கிய பாகிஸ்தான்.:

நடப்பதை யெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு , இதுதான் சரியான தருணம் என நினைத்து தனது வேலைகளை ஆரம்பித்தது.இந்தியாவை அடியோடு வெறுத்த இளைஞர் இயக்கங்களை ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்து ஊக்குவித்ததோடு , அவர்களின் உதவியுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, எல்லைக்குள் ஊடுருவச் செய்து , தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்தது. இவர்களது மனதில் ஓடிய ஒரே எண்ணம்.காஷ்மீர் முஸ்லிம்களுடையது. முஸ்லிம்களைத் தவிர வேறு யாரும் இங்கு தங்க அனுமதிக்க முடியாது. முஸ்லிம் அல்லாதோரை ஒழித்து விட்டு தான் மறுவேலை.

அகதிகளான காஷ்மீர் இந்துக்கள் ( பண்டிட்டுகள் )

1986 பிப்ரவரி 21 ம் தேதி மட்டும் 49 கோவில்கள் , 1500 வீடுகள் தகர்க்கப்பட்டன.அரசியல் சூழ்நிலையால் அமைதியான வழியில் போராட நினைத்த ஒரு குழு பின்னாளில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி.( J K L F ) என்ற பெயரை மாற்றிக் கொண்டதுடன், இந்துக்களை அழித்தொழிப்பதே தங்கள் தலையாய பணி என்ற கொள்கையுடன் , காஷ்மீர் விடுதலைக்கு அனைத்து விதமான செயலையும் கையிலெடுக்க ஆரம்பித்தது.

ஒவ்வொன்றுக்கும் போராட்டம்.திடீர் கூட்டங்கள், கொடியேற்றம் என்று , அரசுக்கு எதிராக முழக்கம் . காவல்துறை வந்து விட்டால் நிச்சயம் கலவரம் வெடிக்கும்.மனித பலிகள்.இரத்தக்காயம் என தினமும் காஷ்மீர் ரணகளமானது.இந்திய பெயர்களைத் தாங்கிய இந்தியன் ஏர்லைன்ஸ், பாரத் பெட்ரோலியம், இந்தியன் வங்கி, இந்தியன் இன்ஷூரன்ஸ் என எந்த பெயர்ப்பலகை யும் இருக்கக்கூடாது.இருந்தால் அடித்து நொறுக்கப்படும்.எதிர்த்தவர்கள் உயிர் அங்கேயே பறிக்கப்படும்.இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் இந்து மத பண்டிகைகள் எதுவும் கிடையாது.மீறினால் உயிருடன் இருக்க முடியாது.காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன.காவல்துறையினரும் எந்த இடத்திலும் அதிகாரம் செய்யக்கூடாது.அரசு அதிகாரிகள் அடங்கியே நடக்க வேண்டும். தீவிரவாதிகள் கலவரம் செய்ய ஆரம்பித்தால், எல்லாம் முடிந்து அவர்கள் சென்ற பின்பே காவல்துறை அங்கு செல்லும்.அனைவரும் பயந்திருந்த காலம். அரசியல் கூட்டங்கள் கூடாது.தேர்தல் நடத்தக்கூடாது.மீறி நடந்தால் வாக்குப்பதிவு நிலையம் நொறுக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் உயிருடன் திரும்ப முடியாது.

முஃப்தி முகமது சயீத் மகள் கடத்தல்.

மருத்துவப் படிப்பு முடித்து விட்டு, மருத்துவ மனையில் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்த இவரது மகள் ரூபியா மருத்துவ மனைக்கு பேருந்தில் செல்லும் போது, வழியில் மாருதி ஆம்னியில் கடத்தப்பட்டார் ( அனைத்து கடத்தல்களுக்கும் ஆம்னி வசதியானது).அவள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்றால் , சிறையிலிருக்கும் தங்கள் ஆட்கள் ஐந்து பேரை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

1 ஷேக் அப்துல் ஹமீது. ஜேகேஎல்எஃப் ன் பிராந்திய கமாண்டர்.

2 குலாப் நபி பட் அமைப்பின் நிறுவனர் மஃபூல் பட் ன் தம்பி

3 நூர் முகமது கல்லால்.

4 முகமது அடால்ஃப் ( இவர்கள் இருவரும் இயக்கத்தின் உறுப்பினர்கள்.)

5 ஜாவேத் அஹ்மத் ஜர்கார் ( பாகிஸ்தான் )

இவர்கள் யாரும் தியாகிகள் அல்ல.பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட குழுவின் முக்கிய தலைகள்.அவ்வளவு எளிதாக விட்டு விட முடியாது.சட்டச்சிக்கல்கள், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் தொடர்புடையது.பணம் வேறு எதுவும் தரத்தயார்.மத்திய அமைச்சரின் மகள் உயிருடன் விளையாடாதீர்கள்.இது கண்டிப்பாக நடக்க வேண்டும்..

வேறு வழியின்றி அனைவரும் விடுதலை செய்து ஒப்படைக்கப்பட்டனர்.ஒரு சாதாரண குடிமகன் கடத்தப்பட்டிருந்தால் இது நடக்குமா? இன்னும் இவர்களால் பல உயிர்கள் பலியாகக் போகின்றன.தேசத்தின் பாதுகாப்புக்கு முன் , மற்ற உயிர்கள் எல்லாம் அடுத்தது தானே? சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா? கேள்விக்கணைகள் இந்தியா முழுவதும் எழுந்தன.காஷ்மீர் மக்களின் மனநிலை வேறாக இருந்தது.அமைச்சரின் மகள் அதுவும் முஸ்லிம், ஒரு முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்துகிறார்கள் என்றால் அவர்களுக்கு யாரும் ஒரு பொருட்டல்ல என்பதே உண்மை.காஷ்மீரிகளும் அதிர்ந்து தான் போயினர்.

திரும்பிய மகளுடன் முத்தி முகமத் சயீத்.

கடத்தப்பட்ட ஒரு உயிருக்காக ( பல உயிர்களை தியாகம் செய்த தீவிரவாதியைப் பிடித்த ராணுவ வீரர்களின் உயிரின் விலை…? )

இனவழிப்பு ஆரம்பம்.

முஸ்லிம் ஜன்பஜ் ஃபோர்ஸ் , அல் உமர் , அல் ஜிஹாத், இக்வான் உடல் முஸ்லிம். ஹிஸ்புல் முஜாஹிதீன் இன்னும் பல பெயர்கள் கொண்ட அமைப்புகள் ..குறிக்கோள் ஒன்றே. காஷ்மீர் முஸ்லிம்களுக்கானது. ஒரு இந்து கூட இருக்கக்கூடாது.என்ன செய்யலாம் ? சுட்டுக் கொல்லலாம்.தூக்கிலிடலாம்.வீடுகள் கடைகளைக் கொளுத்தலாம்.பெண்கள் என்றால் செய்ய நிறையவே இருக்கிறது.பின் கொல்லலாம்.சிறுவர் சிறுமியர் என்ற விதிவிலக்கு கூடாது.

தேடித் தேடி கொல்லப்பட்டனர்.சுமார் 5 லட்சம் பண்டிட்டுகள் ஜம்முவில் இருந்தார்கள்.விடிந்தால் இன்றைய கொலைப் பட்டியலில் நாம் இருப்போமா? என்ற அச்சத்துடன் இருந்தனர்.சுடப்பட்டு உடனடி மரணம் என்பது கொடுப்பினை.குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தோரின் நிலை சொல்ல வார்த்தைகள் கிடையாது.எங்கே கிடக்கிறார்களோ அங்கே அப்படியே கிடக்க வேண்டும்.யாயரும் அனுதாப வார்த்தைகளோ உதவவோ முன் வந்தால் உடனடியாக அவர் உயிர் பறிக்கப்படும்.இவ்வாறு சுமார் 1300 பண்டிட்டுகள் குற்றுயிராய் நாட்கணக்கில் வேதனையை அனுபவித்து உயிரிழந்ததாக த் தெரிகிறது.

ஜம்மு மருத்துவ மனையில் நுழைந்து முஸ்லிம் யாரும் இல்லை என்று தெரிந்ததும் அத்தனைபேரும் படு கொலை செய்யப்பட்டனர்.ஒரு சிறிய சாதாரண குழுவின் தலைவன் முஷ்டாக் அகமத் ஜர்கார் காலை எட்டு மணிக்கு கிளம்பி ஜம்முவில் நுழைந்து சுமார் 15 பண்டிட்டுகளை கொன்று குவித்து விட்டு மாலை காஷ்மீர் வந்து சேர்ந்தான். இவனை இந்தியா கைது செய்து சிறையில் அடைத்தது.பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் டிக்கா லால் தப்லு, புகழ்பெற்ற கவிஞர் சர்வானந்த் கவுல் ப்ரேமி போன்ற முக்கியமானவர்கள் தங்களை எதிர்த்ததால் படுகொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் ஒரு விமான கடத்தல். 1999 டிசம்பர் 24.

கடத்தப்பட்ட விமானம். காந்தஹார்.

காட்மாண்டுவிலிருந்து டெல்லி புறப்பட்ட ஐசி 814 என்ற விமானம் கடத்தப்பட்டு கந்தஹாரில் தரையிறக்கப்பட்டது.குறிப்பிட்ட தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால் பணயக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.

1 மௌலானா மசூத் அஸார் ( விடுதலைக்குப் பின் ஜெய்ஷ் இ முகமத் இயக்கத்தை ஆரம்பித்தான்.

2 அஹ்மத் ஒமர் சயீத் ஷேக்

3 முஷ்டாக் அகமத் ஜர்கார்.( ஜம்முவில் ஒரே நாளில் 15 பேரைக் கொன்றவன் )

வேறுவழியின்றி விடுவிக்கப்பட்டனர்.எஞ்சியுள்ள பண்டிட்டுகள் கதறிக்கொண்டு இந்தியாவிடம் தங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருந்தனர்.பாகிஸ்தானோ தேவையான பயிற்சிகளை அளித்து புது புது குழுக்களாக காஷ்மீரூக்குள் அனுப்பிக் கொண்டே இருந்தது.

எல்லை வழியாக ஊடுருவி….

மீண்டும் ஜக்மோகன்.

காஷ்மீரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது .இந்திய அரசு யாரை அனுப்பலாம் என யோசித்தபோது ,ஏற்கனவே கவர்னராக இருந்தவர், இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்.சரி அனுப்பலாம். 1990 ஜனவரி 19 கவர்னராக பதவி ஏற்றார்.அடுத்து அதிரடியாக காஷ்மீரின் ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்பு படையினர் நுழைந்து, சோதனையிட்டு.எதிர்த்து போராடியவர்கள் துணை ராணுவம், பாதுகாப்பு படையினரால் அடித்து நொறுக்கப்பட்டனர்.

பதிலடியும் கடுமையாக மோசமாக இருக்கும் என எதிர்பார்த்தனர்.எதையும் நீங்களாக ஆரம்பிக்க வேண்டாம்.அவர்கள் கலவரத்தை ஆரம்பித்தால், பதிலடி உடனடியாக இருக்க வேண்டும்.என்ன ஆனாலும் பார்த்துக் கொள்கிறேன்.கவர்னரின் வாய்மொழி உத்தரவு.

தினம் தோறும் கலவரம்.தடியடி துப்பாக்கிச்சூடு என இருதரப்பிலும் ரத்தம் சிந்தாத நாட்கள் இல்லை.காஷ்மீரில் நடத்திய ஒவ்வொரு அடிக்கும் தீவிரவாத குழுக்கள் பதிலடி ஜம்முவில் தந்தனர்.பண்டிட்டுகள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார்கள்.வீடுவாசலை இழந்து, குடும்பத்துடன் போக்கிடமின்றி அலைபாய்ந்தனர்.

1990 ஜனவரி 19.

பண்டிட்டுகள் வெளியேற்றம்;

இது கவர்னர் ஜக்மோகன் ஆரம்பித்து வைத்தார்." நீங்கள் கொஞ்ச நாள் காஷ்மீரை விட்டு வெளியே எங்காவது விருப்பப்பட்ட இடத்துக்கு போய் இருங்கள்.எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது.நீங்கள் முற்றிலும் இடம் பெயர்ந்த பின் தான், கண்ணை மூடிக்கொண்டு சுட உத்தரவிட முடியும். குறைந்தது 30 லட்சம் முஸ்லிம்களையாவது கொல்லவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு நம்மீது பயம் வரும்.அதன்பிறகு நீங்கள் காஷ்மீர் திரும்பி நிம்மதியாக வாழலாம்." என்று கூறியதாகவும் , இதை மறைத்து விட்டு, தேவையின்றி காஷ்மீர் முஸ்லிம்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்.என்று ஷேக் அப்துல்லா வின் பேரன் ஒமர் அப்துல்லா 2008 ல் பொதுக்கூட்டத்தில் பேசும் போது குற்றம் சாட்டினார்.

ஆனால்.

எரிக்கப்பட்ட பண்டிட்டு களின் இருப்பிடங்கள்.

ஆனால் சிந்தித்து பார்த்தால் அவர்கள் அவரது உத்தரவினால் வெளியேறவில்லை தங்க முடியவில்லை.உயிருக்கு பயந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி ?.இந்தியா தங்களை எப்படியாவது காப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள்.இல்லையென்றால் அவர்களும் ஆயுதம் ஏந்தி இருப்பார்கள்.5000 வருட சரித்திரம் கொண்டதாக சொல்லிக்கொள்ளும் அவர்கள் வேத காலத்தில் சரஸ்வதி நதிக்கரையிலிருந்து கிளம்பி காஷ்மீர் வந்ததாக நம்புபவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் காஷ்மீரை விட்டு வெளியேற கனவிலும் நினைக்காதவர்கள்.1998 ல் தாக்குதல்கள் உச்ச கட்டத்தை எட்டியிருந்தன." நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியேற வேண்டாம்.நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம்" என்று முஸ்லிம்கள் கூறியதாக ஒமர் அப்துல்லா கூறியது உண்மையாகவும் இருக்கலாம். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல.ஆனால் காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருந்தார்கள்.

இறுதியாக.

1941 ம் ஆண்டு கணக்குப்படி ஜம்மு காஷ்மீரிலும் மற்ற பகுதிகளிலும் இருந்த காஷ்மீர் பண்டிட்டு களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் ( 40 லட்சம் ) 15%. ஆனால் 2001 ஆம் ஆண்டு அவர்களது எண்ணிக்கை வெறும் 0.01 சதவீதம். கொல்லப்பட்டவர்கள் மற்றும் கணக்கில் வராதவர்கள் போக, உத்தம்பூர் மற்றும் ஜம்முவில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் பண்டிட்டு களின் எண்ணிக்கை சுமார் மூன்றரை லட்சம்.டெல்லியில் ஒரு லட்சம். அவ்வளவுதான்.1990 ல் ஜக்மோகன் பதவியை ராஜினாமா செய்தார்.பின் கிரிஷ் சந்த்ர ஸக்ஸேனா புதிய கவர்னராக பொறுப்பேற்றார்.பொறுப்பேற்றதும் துப்பாக்கிச் சத்தம் ஓய ஆரம்பித்தது. ஏனெனில் சுட்டுக் கொல்ல இந்துக்கள் யாரும் இல்லை.

ஒற்றுமையுடன் , நாட்டுப்பற்று மிகுந்த மக்கள்- அவர்களை ஆண்ட சுயநலமிக்க மன்னர்- ஆக்கிரமிப்பு வெறியுடன் அண்டை நாடான பாகிஸ்தான்- விட்டு விடக்கூடாது..என்ன செய்தாகிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்பும் இந்தியா ..இவர்களுக்கிடையே நடந்த தேவையில்லாத நிகழ்வுகள்.. இதற்கு காஷ்மீரிகளும் இந்தியாவும் கொடுத்த விலை மிகவும் அதிகம்..

பொறுமையாக படித்ததமைக்கு மிகவும் நன்றி 🙏

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...