Sunday, August 6, 2023

அவசியம் வளர்க்க வேண்டிய மரங்கள்

 அவசியம் வளர்க்க வேண்டிய மரங்கள் என்றால் அதனை சில வகையாக பிரிக்கலாம்.

1.பழ மரங்கள்

2.நிழல் மற்றும் குளுமையான காற்று தரும் மரங்கள்

3.பூமரங்கள்

4.இதர மரங்கள்

1.பழமரங்கள்:

இவ்வகை மரங்களை நான் முதன்மையாக குறிப்பிட்டதற்கு சில காரணங்கள் உள்ளன.பெரும்பாலான பழமரங்கள் அளவில் சிறியதாகவும் நாம் உண்ணுதற்கு ருசியான மற்றும் சத்தான பழங்களை வழங்குகின்றன.அதுமட்டும் இல்லாமல் பழங்களை உண்ணுதற்கு பறவைகள்,அணில்கள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் வரும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு பறவைகளின் சத்தம் மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியது.

*கொய்யா மரம் −சிறிய அளவிலான அதேசமயம் மிகுந்த ருசியான பழங்களைத் தரக்கூடியது.

*சீதா மரம் −சீதாப்பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டது.குளிர்ச்சியை உண்டாக்கும்.ஆடுகள் திண்ணாத மரம் என்பதால் எங்கும் வளர்க்கலாம்.

*மாதுளை − சிறுமரம்.சத்து,சுவை,நிறம் அனைத்திலுமே அடித்துக்கொள்ள முடியாது.இதன் பூ பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

*பப்பாளி − எளிமையாக வளர்க்கலாம்.காய்த்துக்கொண்டே இருக்கும்.மற்ற மரங்களை விட இதனை வேகமாக வளர்த்து விடலாம்.இதன் சுவையும் அதிகம்.

*நெல்லி − அரிநெல்லியோ, மலைநெல்லியோ எது வேண்டுமானாலும் வளர்க்கலாம்.தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்களே அறிவுரை கூறுகிறார்கள்.

*எலுமிச்சை − ராஜகனி.வெயிலுக்கு இதன் ஜுஸ் இதமாக இருக்கும்.இன்னும் ஊறுகாய்,சாதம் போன்றவையும் செய்யலாம்.

*வாழை − இலை,பூ,காய்,தண்டு,கனி அனைத்தையும் பயன்படுத்தலாம்.முக்கனிகளில் ஒன்று.

*மா − பழங்களின் அரசன்.சுவையில் ஈடு இணையற்ற கனி.பெருமரம்.ஆனால் ஹைப்ரிட் வகைகளில் சிறு மரங்களிலேயே காய்க்கிறது.

2.நிழல் மற்றும் குளுமையான காற்று தரும் மரங்கள்:

*வேம்பு − முதலிடம் வேம்பிற்கே.நம் நாட்டின் தலைசிறந்த மரம்.அடர்ந்த நிழல்,குளுமையான காற்று,மருத்துவம் என அனைத்திலும் ஜொலிக்கிறது.வீட்டின் முன்புறம் வளர்க்க சிறந்த மரம்.

*பூவரசு − இதன் இலையும் சரி பூவும் சரி அத்தனை அழகாக இருக்கும்.வலிமையான மரம்.இதன் இலையில்தான் பிள்ளையார் கொழுக்கட்டை செய்வார்கள்.

*புங்கன் − வேம்புக்கு நிகரானது.இதன் மலர்கள் அழகாக இருக்கும்.விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம்.

*வாதுமை மரம் − இந்திய பாதாம் என்று இம்மரம் அழைக்கப்படுகிறது.அடர்த்தியான நிழலை மிக வேகமாக வளர்ந்து கொடுக்கக்கூடியது.இதன் காயினை வவ்வால் அடித்துச்செல்லும்.பறவைகள் இதன் பழத்தை உண்ணும்.காயின் உள்ளே இருக்கும் பருப்பு பாதாம் பருப்பின் சுவையை ஒத்தது.

3.பூமரங்கள்:மலர்களைக் கண்டு மயங்காதவர்கள் யாரும் உண்டா.கண்ணுக்கு குளிர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி.பூச்செடிகளை விட பூமரங்கள் மிகுந்த வண்ணமயமாக காட்சியளிக்கும்.

*சரக்கொன்றை:இது மலர்ந்திருக்கும்போது மரமே மஞ்சள்வண்ணமாக காட்சியளிக்கும்.காற்றில் மலர்கள் கீழே விழும்போது தங்கமழை பெய்வது போல தோன்றும்.சிறுமரமாக இருந்தாலும் கடினமான மரம்.

*மயில்கொன்றை − சிறுமரமான இதன் மலர்களின் தோற்றமே மரத்தின் பெயராக அமைந்துவிட்டது.

*செம்மயில்கொன்றை − உலகின் மிகுந்த அழகான மரங்களில் இதுவும் ஒன்று.மே மாதங்களில் மரமே நெருப்பு போல காட்சியளிக்கும்.

*மரமல்லி − இதன் மலர்கள் மணம் ஊரெங்கும் வீசக்கூடியது.உயரமாக வளரக்கூடியது.இடமிருந்தால் வளர்க்கலாம்.

*பவளமல்லி − காம்பு ஆரஞ்சு நிறமாகவும் பூ வெண்மையாகவும் இருக்கும்.மலர்களை கட்டாமல் நூலில் கோர்ப்பார்கள்.

*தங்க அரளி − சிறுமரம்.மனதை மகிழ்விக்கும் மஞ்சள் மலர்கள்.கிளை வைத்தே வளர்க்கலாம்.

4.இதர மரங்கள்:

*தென்னை − நம் வாழ்க்கையில் ஒன்றிப்போன ஒரு மரம்.தலைக்கு எண்ணெய்,வெயிலுக்கு இளநீர்,சட்னிக்கு தேங்காய் இன்னும் பலவகைகளில் பயன்படுகிறது.

*கறிவேம்பு − நறுமணத்திற்காக உணவில் சேர்க்கப்படும் இதன் இலைகள் அவ்வளவு மருத்துவ குணம் கொண்டவை.இளநரைக்கு சிறந்த தீர்வு இதன் இலைகள்.

மருதாணி − கையில் மருதாணி இட்டுக்கொள்ளும் பழக்கம் தொன்றுதொட்டே உள்ளது.மருதாணி மலரும்போது அருமையாக இருக்கும்.

முருங்கை − கீரை மற்றும் காய் இரண்டும் சத்துக்கள் நிறைந்தது.வளர்ப்பதற்கும் எளிது.செடி முருங்கையும் உள்ளது.

இதுவே போதுமானது என்று நினைக்கிறேன்😅.

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...