தியாகம் என்ற சொல்லுக்குத் தன்னிடம் இருப்பதை இழைத்தலும், தன்னையே இழத்தலும்தான் பொருள் எனில், நிச்சயமாக இந்திய விடுதலை போராட்டத்தில் வ.உ.சிக்கு மிஞ்சிய ஒரு தியாகி இல்லையென நாம் அடித்துச் சொல்லலாம்.
தாத்தா வழக்கறிஞர், பெரியப்பா வழக்கறிஞர், அப்பா வழக்கறிஞர் என வழக்கறிஞர்கள் குடும்பத்துச் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர், வ.உ.சி. கல்லூரிப் படிப்பை முடித்து சிலகாலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் தந்தையின் விருப்பத்தின்படி சட்டம் பயின்றார். தாம் பிறந்த ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியவர், குற்றவியல் வழக்குகளில் தன் வாதத் திறமையால் தனக்கென ஓர் இடம்பிடித்தார். அப்போதே ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வாதாடினார். ஒட்டப்பிடாரத்திலும் தூத்துக்குடியிலும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வெற்றிவாகை சூடிக்கொண்டிருந்த காலத்தில்தான் திலகரின் பேச்சைக் கேட்க நேர்ந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். `பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் (British India Steam Navigation Company(BISNC))' எனும் ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஆதிக்கமே இந்தியப் பெருங்கடலில் கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பயணிகள் போக்குவரத்தில் அந்த நிறுவனமே முதலிடத்தில் இருந்து, லாபம் கொழுத்துக்கொண்டிருந்தது. அந்தசமயத்தில்தான், சுயராஜ்ய சிந்தனையிலும் சுதேசப் பணிகளிலும் ஊறிக்கிடந்த வ.உ.சிக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. அது, வணிகத்துக்காக வந்திறங்கிய ஆங்கிலேயனை விரட்ட, அதே வணிகத்தை இந்தியர்களாகிய நாம் கையிலெடுக்கவேண்டும். ஆங்கிலேயர் நஷ்டப்பட்டு, நாட்டைவிட்டே ஓடவேண்டும் எனக் கருதினார்.
ஏழைகளுக்கு இலவசமாக வாதாடும் வழக்கறிஞராக இருந்த வ.உ.சி., சொந்தக் கப்பல் ஒன்றை வாங்கி அதை ஆங்கிலேயனுக்கு எதிராக சிம்மசொப்பனமாக்க நினைத்தார். விளைவு, உருவானது சுதேசி நாவாய் சங்கம்! 1906 அக்டோபர் 16-ம் நாள் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு போட்டியாக, `சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் (Swadeshi Steam Navigation Company(SSNC))' எனும் முதல் இந்திய கப்பல் கம்பெனியை உருவாக்கினார், தமிழன் வ.உ.சி. அவருக்கு உறுதுணையாக, வள்ளல் பாண்டித்துரை, சேலம் விஜயராகவாச்சாரி, ஹாஜி.பக்கீர் முகம்மது என பலரும் பொருளுதவி தந்து உதவினர். அவர்களையெல்லாம் பங்குதாரர்களாக, நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக நியமித்துக்கொண்டார் வ.உ.சி. அப்போதே சுமார் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 40 ஆயிரம் பங்குகளைக்கொண்டிருந்தது சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி.
வ.உ.சியின் இந்த முயற்சி ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் வயிற்றில் புளியைக்கரைத்தது.
வெற்றிகரமாக கப்பல் கம்பெனியைத் தொடங்கிவிட்டார். ஆனால் சொந்தமாகக் கப்பல் வாங்கும் அளவுக்கு பொருள் வந்துசேரவில்லை. அதற்கு புதிய பங்குதாரர்களை சேர்க்கவேண்டும். முதல்கட்டமாக, "ஷாவ்லைன் ஸ்டீமர்ஸ் (Shawline Steamers Company)' எனும் கப்பல் கம்பெனியிலிருந்து வாடகைக்குக் கப்பல் எடுத்தார். தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புக்கும் இடையே போக்குவரத்தைத் தொடங்கினார். வ.உ.சியின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆங்கிலேயர்கள், கப்பலை வாடகைக்கு கொடுத்த ஷாவ்லைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியை மிரட்டத் தொடங்கினர். இதனால் அச்சமுற்ற அந்தக் கம்பெனி, வ.உ.சிக்கு கப்பல் தர மறுத்தது. வாடகை ஒப்பந்தத்தை முற்றிலுமாக ரத்து செய்தது. இதனால், சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், எதற்கும் அஞ்சாத வ.உ.சி. அடுத்தகணமே, கொழும்பிலிருந்து ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து, போக்குவரத்தைத் தொடர்ந்து நடத்தினார். இது தற்காலிக முயற்சி என்றாலும், வ.உ.சியின் ஆழ்மனதுக்குள் `ஒரு சொந்தக் கப்பல்' எனும் கனவே உறங்காமல் தகித்துக்கொண்டிருந்தது.
அதற்கான காலத்தையும் உருவாக்கினார். சொந்த கப்பல் வாங்கியே ஆகவேண்டும் என்ற முடிவில், தூத்துக்குடியில் இருக்கும் வணிகர்களையெல்லாம் சந்தித்தார். அவர்களும் உதவி செய்தனர். ஆனால் அந்தத் தொகை போதவில்லை. தமிழகம் தாண்டி வட இந்தியா புறப்பட ஆயத்தமானார். "திரும்பினால் கப்பலுடன்தான் திரும்புவேன், இல்லையேல் கடலில் விழுந்து சாகுவேன்" என சூளுரைத்து, வைராக்கியத்துடன் வடக்குநோக்கி புறப்பட்டார். பாலகங்காதரத் திலகர், அரவிந்தகோஷ் போன்ற சுதந்திரப் போராளிகளும் வ.உ.சிக்கு துணைநின்றனர். மும்பை, கொல்கத்தா என எல்லா பகுதிகளுக்கும் சென்று, வணிகர்களை சந்தித்து கப்பல் வாங்குவதற்கான உயர்ந்த நோக்கத்தை அனலாகக் கக்கினார். அவரின் பேச்சாற்றலில் மெய்மறந்த வணிகர்கள் அனைவரும் சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்களாகினார்.
"திரும்பினால் கப்பலுடன் தான் திரும்புவேன், இல்லையேல் கடலில் விழுந்து சாகுவேன்"
"எஸ்.எஸ். காளியோ (SS Galia)" எனும் பிரெஞ்சுக் கப்பலை சொந்தமாக்கிய சந்தோஷத்தில் தமிழகம் திரும்பினார். `ஒரு இந்தியன், ஆங்கிலேயனுக்குப் போட்டியாக, எதிராகச் சொந்தக்கப்பல் விடப்போகிறான்' என்ற பெருமிதத்தில் நாட்டு மக்களெல்லாம் கொண்டாட்டம் அடைந்தனர். கிட்டதட்ட 1,500 இருக்கைகள், 4,000 சரக்கு மூட்டைகளை ஏற்றிச்செல்லும் அளவுக்கு பரந்து விரிந்திருந்தது வ.உ.சியின் பெருங்கப்பல். அதுமட்டுமில்லாமல், கம்பெனிக்கு வலுசேர்க்கும் விதமாக எஸ் வேதமூர்த்தி என்பவரும் பிரான்ஸ் நாட்டிலிருந்து ``எஸ். எஸ். லாவோ(SS Lavo)" எனும் கப்பலை வாங்கிவந்து சேர்த்தார்.
1906 அக்டோபர் 4 அன்று கப்பல் வாங்கப்பட்டது, 16 அன்று சுதேசி ஸ்டீமர் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் வயது 34 மட்டுமே!
அவருக்கு முன் சுமார் 20 கப்பல் கம்பெனிகள் இயங்கத்தான் செய்தன. ஆனால் அவை அனைத்தும் வணிக நோக்கில் ஆனவை. அரசியல் சார்பு இல்லாதவை. இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி ஒழித்துக்கட்டியது.
இந்திய செய்தித்தாள்கள்கள் முழுவதும், வ.உ.சி. கப்பல் வாங்கிய கதையே சாதனையாக பரவிக்கிடந்தன. `இந்தியா' பத்திரிக்கையில் இருந்த பாரதியார், தனது நண்பன் வ.உ.சியின் சாதனையை உச்சிமுகர்ந்தார். கப்பல் நிறுவனம் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விடுதலை வேட்கையில் இருந்த மக்கள் சுதேசி கப்பலில் பயணம் செய்வதையே பெருமையாகவும், கடமையாகவும் கருதினர். வணிகச் சரக்குகளெல்லாம் சுதேசி கப்பல்நோக்கியே வந்தவண்ணம் இருந்தன.
ஆங்கிலேயன் மிரட்டி அடிபணிய வைக்க இது வாடகைக் கப்பல் அல்ல. இந்தியர்களின் சொந்தக் கப்பல்! என்னசெய்வதென்று புரியாமல் வெந்துகொண்டிருந்து ஆங்கிலேய கப்பல் கம்பெனி. தென்னிந்திய கடற்பரப்பில் கொடிகட்டிப்பறந்த கப்பல் வருமானம் சரிந்துகொண்டிருந்தது. எதிரணியில், 'வந்தே மாதரம்' எனும் வாசகம் பொறித்த வ.உ.சி. கப்பல் வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தது. இந்தியப் பயணிகளுக்கெல்லாம் சுதந்திரப் பாடங்களும் எடுக்கப்பட்டது.
சும்மா விடுவானா ஆங்கிலேயன்? தன் போட்டியாளனை சமாளிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பெருமளவில் நிதிபெற்றுக்கொண்ட பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி, கட்டணத்தை பாதியாகக் குறைத்தது. ``சுதேசி கப்பலை நஷ்டத்தில் தள்ளிவிட்டு, நம்மை முழுவதுமாக போட்டியிலிருந்து ஒழித்தபின் அவன் விருப்பம்போல தன் கட்டணத்தை ஏற்றிக்கொள்வான்" என ஆங்கிலேயனின் வஞ்சக அரசியலை வ.உ.சி. பொறுமையாகப் பாடமெடுத்தார். கேட்டுக்கொண்ட இந்திய மக்கள் சுதேசி கப்பலுடனே இருந்தனர்.
ஆங்கிலேய கப்பல் கம்பெனி, அடுத்த அஸ்திரமாக "இலவச பயணம்" என்று அறிவித்தது. மேலும், தங்கள் கப்பலில் பயணிப்பவர்களுக்கு இலவச பொருட்களையும் பரிசாக அளித்தது. அதுமட்டுமல்லாமல், பிரிட்டிஷ் அரசில் பணியாற்றும் இந்தியர்கள் அனைவரும் ஆங்கிலேயக் கப்பலில்தான் பயணிக்கவேண்டும் எனவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல், ஆங்கிலேய அதிகாரிகளில் மூலம் பல்வேறு இடைஞ்சல்களையும் அழுத்தத்தையும் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு கொடுத்தது. இருப்பினும் எல்லாவற்றையும் சமாளித்தபடியே தொடர்ந்து கப்பலை இயக்கினார்.
அடுத்தகட்டமாக, "1 லட்சம் பணம் தருகிறோம், நிறுவனத்தை விட்டு விலகிச்செல்!" என வ.உ.சியிடமே வந்து பேரம்பேசியது ஆங்கிலேய கப்பல் கம்பெனி. அடிபணிவாரா? ஆசை வார்த்தைகளில் அணைந்திடுவாரா வ.உ.சி., ``அவர் விடுதலைக்காக எதையும் விலையாகக் கொடுப்பவர். ஆனால், எதற்காகவும் விடுதலையை விட்டுக்கொடுக்கமாட்டார், கப்பல் விட்டது வணிகத்துக்காக அல்ல, விடுதலைக்காக" என்பதை அப்போது புரிந்துகொண்டனர் ஆங்கிலேய கப்பல் கம்பெனியினர்.
முன்பைவிட வேகமாக, வேறுவிதமாக அடுத்தடுத்த சதிவேலைகளை, சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு எதிராக திருப்பிக்கொண்டே இருந்தனர். சுதேசி கப்பல் எங்கள் கப்பல்மீது மோத வந்தது என்று சொல்லி நீதிமன்றதில் வழக்குதொடர்ந்தனர். வழக்கறிஞரான வ.உ.சி. அவையெல்லாம் பொய்க்குற்றச்சாட்டு என்பதை வாதாடி நிரூபித்தார், வென்றார்.
பல இழப்புகளுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில், மீண்டும் சுதேசிக் கப்பலை கடலில் சீறச்செய்தார். என்னதான் நெஞ்சுரத்தோடு, அடிபணியாமல் வ.உ.சி போட்டிப்போட்டாலும் ஆங்கிலேயனின் தொடர்ச்சியான சதிவேலைகளின் விளைவாக, மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பை சந்தித்தது சுதேசி கப்பல் கம்பெனி. தேசப்பற்றுள்ள சிலரைத் தவிர, வணிகநோக்குள்ள பல பங்குதாரர்களும் வ.உ.சிக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கினர். இறுதியாக, பணம் இழந்து, பயணிகள் இழந்து, பங்குதாரர்களை இழந்து 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி' நங்கூரமிட்டு நின்றது.
1908 பிப்ரவரி 27 கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தொடங்குகிறது. மார்ச் 6 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் முழு வேலைநிறுத்தம் நடந்தது. மக்களிடம் இருந்து திரட்டிய நிதி, தன் சொந்த பணம், மனைவி மீனாட்சியம்மாளின் நகையை அடகு வைத்து கிடைத்த பணம், கடனாக பெற்ற பணம் ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு உணவு அளித்தவர் வ.உ.சி.
அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியை மூடிவிடுமாறு வ.உ.சி.க்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.
அவரது கம்பெனியின் கூட்டாளிகள் பலர் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைப்பட்டு விலைபோனது, பிரிட்டிஷ் நிர்வாகம் தன் மிருகபல அதிகாரத்தைப் பயன்படுத்தி சுதேசி கப்பல் கம்பெனிக்கு நட்டத்தை விளைவித்தது. கடன், ஊழியர்கள் செய்த ஊழல் ஆகியவை ஒன்றிணைந்து வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தை ஒழித்தன.
கொண்ட கொள்கையில் உறுதியும் நாட்டின் நலன் குறித்தே சிந்தித்தும் வந்த வ.உ.சி., தன் வாழ்நாளில் 57 மாதங்கள், 22 நாட்கள் கொடுஞ்சிறையில் வாழ்ந்தார். அது கம்பீரம் மிக்க வீர வரலாறு பின் வருமாறு.
40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் வ.உ.சி மட்டுமே. “மிக ஆபத்தான மனிதன்” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் ஆவணங்களில் இவரை குறித்து வைத்தது.
வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு அவர் எழுதிய சுயசரிதத்தைத் தவிர வேறு எந்த ஒரு ஆவணமும் இல்லை. ஒருவேளை அவர் தனது சுயசரிதத்தை எழுதாமல் போயிருந்தால் அவரது சிறை வாழ்க்கை குறித்து நம்மால் எதையும் அறிய முடியாமலேயே போயிருக்கும்.
திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இ.பி.கோ. பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுப் பின்னர் அது பிரிவு 107(4) ஆக மாற்றப்பட்டது. அவ்வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே மூவரும் கைதுசெய்யப்பட்டனர். நன்னடத்தைக்காகச் செலுத்தச் சொன்ன பிணைத் தொகையை முதலில் கட்ட மறுத்து, பின்னர் ஒப்புக்கொண்டபோதும் அதை ஏற்க மறுத்துத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார் நீதிபதி விஞ்ச். சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த உத்தரவின் மீது மூவர் சார்பாகவும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கே விஞ்ச்சின் உத்தரவு மறுக்கப்பட்டு வழக்கும் ரத்துசெய்யப்பட்டது. அதற்கான உத்தரவு நெல்லை வந்தும்கூட பத்மநாப அய்யங்காரை மட்டும் விடுவித்துவிட்டு வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவர் மீதும் தலா இரண்டு வழக்குகள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டன.
இரண்டு புதிய வழக்குகள்
சுப்ரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாகப் பிரிவு - 124 ஏ, அரசுக்கு எதிராக மக்களிடம் பேசியதாகப் பிரிவு - 153 ஏ ஆகிய இரண்டு வழக்குகள் வ.உ.சி. மீது பதிவுசெய்யப்படுகின்றன. மூன்று மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இரண்டு வழக்குகளுக்கும் (20 20) நாற்பது ஆண்டு காலம் ஒன்றன் பின் ஒன்றாக அந்தமான் சிறையில் தீவாந்திரக் கடுங்காவல் தண்டனையாக வ.உ.சி. கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தத் தீர்ப்பின் மீதும் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அங்கு நாற்பது ஆண்டு காலத் தண்டனையானது பத்து ஆண்டு காலம் அனுபவிக்குமாறு குறைக்கப்படுகிறது.
அதன் பின்னர் லண்டன் பிரிவியூ கவுன்சிலில் செய்யப்பட்ட முறையீட்டால் நாடு கடத்தல் ரத்து செய்யப்படுகிறது. பின்னர் 6 ஆண்டுகளில் மூன்று விசேஷ கால விடுதலைக்கான குறைப்புக் காலமாக ஒன்றரை ஆண்டுகள் போக மீதம் நான்கரை ஆண்டுகளுடன் ஏற்கெனவே விசாரணைக் கைதியாக 3 மாதங்களையும் சேர்த்து, ஆக மொத்தம் நான்கே முக்கால் ஆண்டுகளை வ.உ.சி. சிறையில் இழந்திருக்கிறார்.
முதல் நாள் அனுபவம்
12.03.1908 மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டைச் சிறைக்குள் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவரும் நுழைகிறார்கள். நுழைந்ததுமே பிரச்சினை தொடங்குகிறது. “காலையிலிருந்தே நீங்களெல்லாம் வருவீர்களென்று எதிர்பார்த்திருந்தேன், அப்பா, மகன், பேரன் மாதிரி மூணு பேரும் வந்திருக்கீங்க, புத்தியோடு இருங்க” என நக்கலாக வரவேற்கிறார் ஜெயிலர். அதற்கு “நீ ஒத்து வந்தீன்னா சரிதான்” எனப் பதிலுக்கு நக்கல் செய்கிறார் வ.உ.சி.
சிறைக் கண்காணிப்பாளர் வ.உ.சி.யைப் பார்த்துவிட்டு, “உன்னயப் பாத்தாக் கைதி மாதிரியே தெரியலியே, கைதியாகவே நீ உன்ன நெனைக்கல போலருக்கே” என்று அதட்டலாகக் கேட்கிறார். அதற்கு “நீ சொன்னது உண்மைதான். நான் சொல்லவந்ததைக் கேள்” என்கிறார். சிறை அதிகாரிகளின் அதிகாரத் திமிருக்குப் பணிந்துவிடாமல் எதிர்த்து நிற்கும் போக்கு முதல் நாளிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
கோவைச் சிறையின் கொடுமைகள்
09.07.1908 முதல் 01.12.1910 வரை இருந்த கோவைச் சிறைவாசம்தான் வ.உ.சி.யின் சிறைவாசத்தில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அங்கு ஜெயிலராக இருந்தவர் மிஞ்ஜேல். தூத்துக்குடியில் கலெக்டர் ஆஷ் செய்த அக்கிரமங்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல கோவைச் சிறையில் ஜெயிலர் மிஞ்ஜேல் நடத்திய அக்கிரமங்கள். சணல் பிரிக்கும் எந்திரத்தைச் சுழற்றியதில் வ.உ.சி.யின் கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்து கண்ணீர் வடித்திருக்கிறார். அதற்கு மாற்றாக செக்கு இழுக்க வைக்கப்பட்டிருக்கிறார். அதைத் தடுத்த கைதிகளைத் தாக்கியிருக்கிறார் ஜெயிலர் மிஞ்ஜேல். அந்தச் சமயத்தில் நீதிபதி பின்ஹே வழங்கிய நாடு கடத்தல் தண்டனை ரத்துசெய்யப்பட்டதால் தற்காலிமாக அந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கிறார்.
கோவைச் சிறையில் நடந்த கைதிகளின் போராட்டமும், அதற்கு நீதிமன்றத்தில் வ.உ.சி. சொன்ன துணிச்சலான சாட்சியமும், அவ்வாறு சொன்னதற்காக காங்கிரஸ் கட்சியால் அவர் கண்டிக்கப்பட்டதும் அவரது வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. சிறைக் கைதி ஒருவர் தனது தலைக்கு மேலாக இருகரங்களையும் கூப்பி வ.உ.சி.யை வணங்கினார். இதைப் பார்த்துப் பொறுக்க முடியாத ஜெயிலர் மிஞ்ஜேலால் தொடங்கப்பட்ட பிரச்சினையானது கைதிகளின் போராட்டமாக மாறி, அதை அடக்கச் செய்த முயற்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழக்க, இறுதியில் மிஞ்ஜேலை ஸ்டிரச்சரில் வைத்துத் தூக்கிச் செல்லும் நிலையில் முடிந்தது. துணை ஜெயிலராகப் பதவியிறக்கமும் பெற்றார்.
நாற்பது ஆண்டு தண்டனைக் காலமானது பத்து ஆண்டுக் காலம் சேர்த்து அனுபவிக்கும் கடுங்காவலாக மாற்றப்பட்டது. மிஞ்ஜேலும் சிறைக் கண்காணிப்பாளர் காட்சனும் மீண்டும் அவரைச் செக்கிழுக்க வைத்தார்கள். சிறைக் கலவரம் குறித்து விசாரிக்க வந்த சிறைத் துறை ஐ.ஜி.யிடம் இருவரது அட்டூழியங்கள் குறித்தும் நேரடியாகப் புகார் சொன்னார் வ.உ.சி. அரசியல் கைதிகளை முறையாக நடத்துங்கள் என ஐ.ஜி. இருவரையும் கண்டித்தார். இதனால், கோபத்தின் உச்சிக்குச் சென்ற இருவரும் வ.உ.சி.க்கு மனரீதியான உளைச்சலைக் கொடுத்து ஒடுக்க முயல்கிறார்கள். சிறை வளாகத்தைக் கூட்டிப் பெருக்கவும் மூத்திரச்சட்டியை எடுத்துப்போகவும் சட்ட விரோதமாக நிர்ப்பந்திக்கிறார்கள்.
வ.உ.சி.யின் உணவுப் பழக்கத்துக்குச் சிறையில் ஏற்பட்ட நெருக்கடிகளைக் குறித்து நமக்குத் தெரியவருவதே அவரது சுயசரிதத்திலிருந்துதான். அவர் நினைத்திருந்தால் அதை மறைத்திருக்கவோ அல்லது மாற்றி எழுதியிருக்கவோ முடியும். அவர் வெளிப்படையாக எழுதியிருப்பதன் நோக்கம் ஆங்கிலேயர்கள் தனக்கு ஏற்படுத்திய நெருக்கடிகளைத் தெரியப்படுத்தத்தானே தவிர தனது உணவுப் பழக்கத்தின் மீது அவர் கொண்ட பற்றுறுதியை வெளிப்படுத்துவதற்கு அல்ல.
முற்றியது மோதல்
ஒருநாள் வ.உ.சி.க்குப் புத்திமதி சொல்ல முயன்றார் மிஞ்ஜேல். “உனக்கும் உன்னப்பனுக்கும் உன் சூப்பிரண்டிற்கும் உனையாளும் கவர்னருக்கும் புத்தி சொல்லும் தகுதி எனக்குண்டு” எனக் கூறுகிறார் வ.உ.சி. அதனால், 15 வாரங்கள் அபராதம் என அறிவிக்கிறார்கள். ஆனால், ஒரே வாரத்தில் அவர் கண்ணனூருக்கு மாற்றப்படுகிறார். 01.12.1910 முதல் 24.12.1912 வரை கேரளத்தின் கண்ணனூரில் இருந்த 2 வருடங்கள் 22 நாட்களில் பெரிய அளவில் அவருக்குத் துன்பங்கள் தரப்படவில்லை. கோயமுத்தூர் போலவே இங்கும் ஆய்வுக்கு வந்த ஐ.ஜி.யிடம் அவர்களின் நடத்தைகளைச் சொல்கிறார் வ.உ.சி. அதனால், ஐ.ஜி. அவருக்கு எழுத்துக் கோக்கும் வேலையைத் தர உத்தரவிட்டார். ‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’ இரு நூல்களையும் அப்போதுதான் எழுதினார்.
24.12.1912 அன்று வ.உ.சி. விடுதலையானார். சிறைக்குள் நுழையும்போது அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது சிறையிலிருந்து விடுதலையாகும் அவரை வரவேற்க நான்கு பேர் மட்டுமே காத்திருந்தனர். ஆங்கிலேயர்கள் எந்த நோக்கத்துக்காக வ.உ.சி.யைச் சிறைக்கு அனுப்பினார்களோ அந்த நோக்கத்தை அவர்கள் ஈடேற்றிக்கொண்டனர்.
வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையை எத்தனை முறை படித்தாலும் நாம் மீண்டும் மீண்டும் உணர்வது ஒன்றைத்தான்: ‘அதிகாரத்துக்கு அடிபணியாமை’. சிறை வாழ்க்கையில் எந்த இடத்திலும் அவர் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. மனம் வருந்தித் துடித்தபோதும் அதிகாரத்துக்குத் தலைவணங்கவில்லை. மொத்தத்தில், அவரது சிறை வாழ்க்கை வெளிக்காட்டுவது அவரது கொள்கைப் பற்றால் உருவான வீரம் செறிந்த எதிர்ப்புணர்வைத்தான்.
இந்தியா முழுமைக்கும் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர், வ.உ.சி மட்டுமே. 'காந்தி, நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலைகளில் புத்தகம் படிக்க, வ.உ.சி மட்டும்தான் செக்கிழுத்தார்' என அவரின் பெருமைக்காகச் சொல்லப்படும் வாசகத்தில் முழுமை இல்லாவிட்டாலும், ஓரளவுக்கேனும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. நான்கரை ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, அவர் வெளியே வந்தபோது அவர் குடும்பத்தினரையும், அவரது நண்பர் சுப்பிரமணிய சிவாவையும் தவிர வேறு யாரும் இல்லை. அவர் ஆரம்பித்திருந்த 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'யும் வெள்ளையர் கைக்குப் போயிருந்தது. அவருடைய வழக்கறிஞர் பட்டமும் பறிக்கப்பட்டது. சென்னைக்கு வந்து மண்ணெண்ணெய் விற்றும், நெய் விற்றும் தன் கடைசிக் காலத்தைக் கழித்தார்.
பிரிட்டிஷாரின் ஒரே கொள்கை இந்தியாவில் உள்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதும் இலாபத்தை கடல் கடந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் என இருந்தபோது, அதே இலாபத்துக்கு வ.உ.சி.யால் பேராபத்து விளைகின்றது, அவரை அகற்றாமல் தமது காலனியாதிக்க வணிகத்தை ஓரடியும் நகர்த்த முடியாது என்ற மிகப்பெரிய எச்சரிக்கை உணர்வுதான் அவருக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான கொடுமைகள், தடங்கலுக்கும், பின் தொடர்ந்த சிறைக்கொடுமைகளுக்கும் காரணம்.
இந்தியாவின் முதல் அரசியல் வேலைநிறுத்தம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 1908-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற கோரல் மில் தொழிலாளர்களுடையது. அந்தத் தொழிலாளர்களுக்குத் தூண்டுகோளாய் இருந்தவர், வ.உ.சி.
அதுமட்டுமல்ல, மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை என நான்கு நூல்களை எழுதியிருக்கிறார். இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். மனிதனும் அறிவும், மனமும் உடம்பும் எனப் பல தலைப்புகளில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். சைவ சமயத்தில் தீவிர பற்றுடையவராக இருந்தாலும், அரசியலில் சமயம் கலக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். தனக்கு உதவியர்களின் பெயர்களையே தன் பிள்ளைகளுக்கு வைத்ததன் மூலம், மிகச் சிறந்த மனிதராகவும் விளங்கினார், வ.உ.சி.
அதேநேரத்தில், கல்விச் செலவுக்குப் பணமில்லாமல் படிப்பைப் பாதியில் நிறுத்திய வ.உ.சி-யின் பேத்தியைப் பற்றியும், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து மாவட்ட ஆட்சியரின் உதவியோடு மீண்டுவந்த அவரின் பேரன்களைப் பற்றியும் தினசரிகளில் செய்திகளைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்த இந்தியர்களும் சுதந்திரம் பெறுவதோடு மட்டுமல்லாமல், சுய கௌரவத்தை இழக்காமல் அதைப் பெறவேண்டும் எனப் போராடிய அந்தத் தியாகச் செம்மலின் குடும்பம் இன்றும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கி இருக்கிறது என்பதே நிஜம். இப்போது மட்டுமல்ல, அது வ.உ.சி உயிரோடிருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது.
ஒருமுறை வ.உ.சி-யிடம் ஆங்கிலேயர் ஒருவர், "உன் தாயும் பிள்ளைகளும் இப்படிக் கஷ்டப்படுகிறார்களே... இப்போதாவது எங்களின் சொல்படி கேட்கலாமே'' எனச் சொன்னதற்கு, "என் தாயும் பிள்ளையும் பிச்சையெடுக்கலாம்... என் தாய்நாடு ஒருபோதும் பிச்சையெடுக்கக் கூடாது" எனக் கொட்டி முழங்கிய பெருமகனார் வ.உ.சி. குறிப்பிட்ட ஒரு பிரிவினர் சமைத்த உணவை ஏற்க மறுத்ததாகவும் சாதிப் பற்றுடையவராக இருந்ததாகவும் வ.உ.சி-யின் மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. அதன்மூலத்தைத் தேடினால், அந்த விஷயத்தை உலகுக்குச் சொன்னவரே, வ.உ.சிதான். ஆரம்பத்தில் தாம் அப்படி நடந்துகொண்டதாகவும் பின்னாளில் அதில் தவறிருப்பதை உணர்ந்து மாற்றிக்கொண்டதாகவும் தனது சுயசரிதையில் தெரிவித்திருப்பார், அவர்.
வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையை எத்தனை முறை படித்தாலும் நாம் மீண்டும் மீண்டும் உணர்வது ஒன்றைத்தான், ‘அதிகாரத்துக்கு அடிபணியாமை’. சிறை வாழ்க்கையில் எந்த இடத்திலும் அவர் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. மனம் வருந்தித் துடித்தபோதும் அதிகாரத்துக்குத் தலைவணங்கவில்லை. மொத்தத்தில், அவரது சிறை வாழ்க்கை வெளிக்காட்டுவது அவரது கொள்கைப் பற்றால் உருவான வீரம் செறிந்த எதிர்ப்புணர்வைத்தான்.
காந்தியடிகளுக்கு எழுதிய கடிதம்!
இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட அவருக்கு, ஆங்கிலேய அரசு கொடுத்த துயரங்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்ட அவரை, வறுமையும் வேறு குடிகொண்டிருந்தது. அதுபோன்ற காலகட்டத்தில் அவர், காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், “கடந்த இரண்டாண்டுக் காலமாக தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் தயவே என் குடும்பத்தைக் காத்து வருகிறது. எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போதிருக்கும் நிலையில், அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனானால், அது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் இழைத்த தவறாகும்” என்று எழுதியுள்ளார்.
வ.உ.சி-க்கு உதவுவதற்காகத் தென் ஆப்பிரிக்காவில் வசித்த வேதியப்பார் என்பவர், 5,000 ரூபாய் வசூலித்து காந்தியடிகள் மூலம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அதை காந்திஜி, அரசியல் காரணங்களால் மறந்துபோய்விட்டார். பின்னர், கடும் அலைச்சல்களுக்கிடையே எட்டு வருடங்கள் கழித்து வட்டியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வ.உ.சி-யிடம் காந்தியடிகள் வேண்டியிருக்கிறார். அதற்கு அவர், “அவர்கள் அனுப்பிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதும்... அதற்கு வட்டி எல்லாம் வேண்டாம்” என்றாராம்.
இப்படித் தன் கஷ்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்தியாவின் விடுதலைக்காகக் கடைசிவரை உழைத்துத் தன்னுயிரையே நீத்த வ.உ.சி., “என்னைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே” என்று கூறி வருத்தப்பட்டாராம்.
இந்திய மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய வ.உ.சி., இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் மூச்சை நிறுத்திக்கொண்டார்.
தமிழகத்தில் திலகர் பெயரில் திடல் உண்டு, காந்தி, நேருவின் பெயரில் பல சாலைகள் உண்டு. எத்தனை வட இந்தியத் தெருக்களுக்கு வ.உ.சி-யின் பெயர் இருக்கிறது? வட இந்தியாவை விடுங்கள், தமிழகத்தில் எத்தனை பேர் இன்னமும் வ.உ.சி-யை நினைவில் வைத்திருக்கிறார்கள்; அவரைக் கொண்டாடுகிறார்கள்? சாதிச்சங்கங்கள் இன்று அவரை தனதாக்கிக் கொண்டதற்கு, அவர்களின்மீது மட்டும் குற்றமில்லை. அவரைப் பொதுத் தலைவராக ஏற்றுக் கொண்டாடாத இந்தச் சமூகத்தின் மீதும்தான் பெருங்குற்றமுண்டு. இனிவரும் காலங்களிலாவது மக்களுக்காக உழைத்த தலைவர்களைப் போற்றுவோம்!!
வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிறையில் பட்ட துயரங்கள் காணொலி தொகுப்பு.
No comments:
Post a Comment