Showing posts with label இந்திரா காந்தி ஒரு சகாப்தம். Show all posts
Showing posts with label இந்திரா காந்தி ஒரு சகாப்தம். Show all posts

Saturday, October 22, 2022

இந்திரா காந்தி ஒரு சகாப்தம்

 

இந்திரா காந்தி ஒரு சகாப்தம்

இரும்புப் பெண்மணி.. சிதைக்கப்பட்ட கதை:

நவம்பர் 1.1984. தீன் மூர்த்தி பவனில் இருந்து , ராஜ்காட் செல்லும் வழி நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் இருபுறமும். கண்ணீர் மல்க , தங்கள் அருமைத் தலைவிக்கு இறுதி வணக்கம் செலுத்தக் காத்திருந்தனர்.

" ஜப்தக் சூரஜ் சாந்த் ரஹே ..இந்திரா தேரா நாம் ரஹே " ( சூரியனும் சந்திரனும் உள்ள வரை இந்திரா உமது பெயர் நிலைத்திருக்கும் ) விண்ணுலகம் சென்று விட்ட இந்திராவின் காதுகளில் சென்று சேர வேண்டும் என்பது போல விண்ணதிர முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தது மக்கள் கூட்டம்.

இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் எதற்கும் அஞ்சாத, துணிச்சலுடன் முடிவெடுக்கும் ' இரும்புப் பெண்மணி " என்று அழைக்கப்பட்ட , பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் உடல் , தனது நம்பிக்கைக்குரிய பாதுகாவலர்களால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு ..இதோ தகனத்திற்காக சென்று கொண்டிருக்கிறது.

படுகொலைக்கான காரணம்:

உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும் , அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக. அமைந்துவிடுகிறது. இந்திராவின் படுகொலைக்கான காரணமாக அனைவரும் சுட்டிக் காட்டியது ஒன்றுதான்.அதுதான் பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான ' ஹர்மந்திர் ஸாகிப் ' எனப்படும் பொற்கோவிலில் நடத்தப் பட்ட ' ஆபரேஷன் புளூ ஸ்டார் ' என அழைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை.

ஆபரேஷன் புளூ ஸ்டார்: ஜூன் 1 முதல் 8 வரை.1984.

பஞ்சாபிலுள்ள சீக்கியர்கள் தங்களுக்கென தனி நாடாக ' காலிஸ்தான் ' வேண்டும் என நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கோரிக்கை விடுத்தனர்.. எதுவும் நடக்காத நிலையில் ' பிந்த்ரன் வாலே தலைமையில் உருவான தீவிர வாத அமைப்பு, பொற்கோவிலுக்குள் புகுந்து, அரசுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு , நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக அரசு கருதியது.

மிகப்பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை உள்ளே குவித்து வைத்திருந்தனர்..இதை அகற்றும் பொருட்டு நடத்திய நடவடிக்கையின் போதுபுனித நலத்திற்குள் வீரர்கள் ஷூக்கள் அணிந்து சென்றது , தாக்குதலின் போது நூலகம் எரிந்து , வேத நூல்கள் , மற்றும் சில கையெழுத்து பிரதிகள் எரிந்து சாம்பலானது, பொற்கோயில் வளாகம் சேதமடைந்தது போன்ற காரணங்களால் , இந்திரா மீது சீக்கியர்களுக்கு தாங்க முடியாத வெறுப்பு ஏற்பட்டது.

இந்திரா காந்தியும் அவரது குடும்பத்தினரும் பழிவாங்கப்படுவார்கள் என பகிரங்கமாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புலனாய்வு துறையும் இதனை உறுதி செய்தது.எனவே இந்திராவின் பாதுகாப்பு படையில் இருந்த சீக்கியர்கள் அனைவரும் விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்திரா இதை நிராகரித்து விட்டார்.இதுபோன்ற நடவடிக்கைகள் தன்னை சீக்கியருக்கு எதிரானவர் என்ற வலுவான நிலையை ஏற்படுத்தி விடுவதோடு, எதிர் கட்சிகளுக்கும் அது தீனி போட்டதாகிவிடும் என்று கருதினார். அவர் சொன்ன பதில் " நாம் மதச்சார்பற்ற வர்கள் தானே?" தனது விருப்பத்தின் பேரில் தன்னிடம் பத்து வருடமாக பாதுகாப்பு வீரராகப் பணி புரிந்த பியான் சிங் போன்றோரை நம்பிக்கையுடன் நியமிக்க வலியுறுத்தினார்.

உள்ளுணர்வு சொல்லியதா?

ஏற்கனவே இந்திரா தனது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்தே இருந்தார்.விடுதியில் படித்து வந்த தனது பேரக்குழந்தைகளை , பாதுக்காப்பு கருதி , வீட்டில் இருந்தே அனுப்ப ஏற்பாடு செய்தார்.தனது வீட்டிலும் சில குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். புவனேஷ்வரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேச இருந்த அவருக்கு அவரது உதவியாளர் தயாரித்துக் கொடுத்த அறிக்கைகளைப் பேச ஆரம்பித்து , பின் அதிலிருந்து விலகி தனது மனதில் பட்டதை மக்களிடம் , மனம் தழு தழுக்க பேசினார்.

ஆம் ..அவரது பேச்சில் உருகி மக்களும் "இந்திராகாந்தி ஜிந்தாபாத்" என கோஷமிட்டனர்.இரவில் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கச் சென்றார். ' வன்முறை , மரணம் என உலுக்கி எடுத்துவிட்டீர்களே ' என்ற கவர்னர் பிஷம்பர்நாத் பாண்டே யின் வார்த்தைக்கு " உண்மையான மற்றும் நேர்மையான விஷயங்களை மட்டுமே பேசியதாகக் கூறினார்.

இரவில் திடீரென மருமகள் சோனியா காந்தியின் ஃபோன் , குழந்தைகள் ராகுல், பிரியங்கா இவர்களின் கார் ஒரு சிறுவிபத்தில் சிக்கியதாக வும் , குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை . அவ்வளவுதான் பேரப்பிள்ளைகள் மீது உயிரையே வைத்திருந்த இந்திரா அந்த நள்ளிரவில் டில்லி கிளம்பினார் .( ராஜிவ் காந்தி வெளிநாட்டில் )

குழந்தைகளோடு குழந்தையாய்..

டில்லியில் தனது வீட்டுக்கு சென்று பேரக் குழந்தைகளைப் பார்த்தபின் தான் ஓரளவு மனம் நிம்மதி அடைந்தார். ஆனாலும் சரியான தூக்கம் இல்லாமல் இருந்தார்.சுமார் 4 மணி அளவில் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட சோனியா , மருந்து எடுத்துக் கொள்ள குளியலறை சென்ற போது, இந்திராவும் பின்னாடியே வந்து உதவி செய்து விட்டு, ஏதாவது தேவையெனில் தன்னிடம் கேட்கும்படி கூறியுள்ளார்.

அக்டோபர் 31 / 1984.:

காலை 7:30. இந்திரா பற்றி ஆவணப்படம் தயாரித்துக் கொண்டிருந்த பிரிட்டன் நடிகரும் தயாரிப்பாளருமான பீட்டர் உஸ்பதினோ வுக்கு , சில காட்சிகள் படம் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவரது அலுவலகத்தில் அவர் காத்துக் கொண்டிருப்பார். குங்குமப்பூ நிறத்தில், கருப்பு பார்டர் வைத்த புடவையை அணிந்து கொண்டார். ஒப்பணைக்கலைஞர் வந்திருந்தார்.தினசரி வரும் மருத்துவரும் வந்து அவரோடு பேசிக் கொண்டிருந்தார்.

பிரதமரின் இல்லத்திலிருந்து அலுவலகம் 300 அடி தூரமே.இரண்டையும் இணைக்கும் குறுகிய வாயிலை நோக்கி நடந்தார். காலை உணவாக ரொட்டி, ஆரஞ்சு சாறு எடுத்துக் கொண்டிருந்தார் . அதுவே அவரது இறுதி உணவென்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

காலை 9:10.

வெளியே நடந்து கொண்டே, தன்னுடன் வந்து கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஆர்.கே.தவானுடன் அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து கொண்டிருந்தார்.இளம் வெயில்.அது கூட தனது தலைவிக்கு ஆகாதென்று பாதுகாவலாக வந்த நாராயண் சிங் குடை பிடித்திருந்தார். பின்னால் ஆர்.கே.தவாண் .தனிப்பட்ட ஊழியர் நாதுராம் ( காந்தி கொலையாளி யின் பெயரும் இதுவே ) கடைசியாக பாதுகாப்பு அதிகாரி ராமேஷ்வர் தயாள்.

அருகிலேயே எமனை வைத்துக் கொண்டு..

திடீரென்று பிரதமரின் பாதுகாப்பு வீரர் பியாந்த் சிங் தனது துப்பாக்கியால் இரண்டு முறை பிரதமரை நோக்கிச் சுட , அவை அவரது வயிற்றில் பாய்ந்தன. அதிர்ச்சியால் தனது முகத்தை மூட , வலது கையை தூக்கியதும் , மீண்டும் சுட ஆரம்பித்தான்.மீதி மூன்று குண்டுகள் பக்கவாட்டில் ஒன்றும், மார்பில் இரண்டு மாக அவரைத் துளைத்தன.

ஐந்தடி தூரத்தில் சத்வந்த் சிங் நின்று கொண்டிருந்தான்.( இவன் தனக்கு வயிறு சரியில்லை எனச் சாக்கு போக்கு கூறி கழிவறைக்கு அருகில் பணியை மாற்றிக் கொண்டு, தயாராக இருந்தான்.கையில் இயந்திரத் துப்பாக்கி. பியாந்த் சிங் அவனை நோக்கி " சுடு " என கத்தினான்.அவனது துப்பாக்கியில் இருந்த 25 குண்டுகளும் நேருவின் செல்ல மகளைச் சல்லடையாகத் துளைத்து விட்டே ஓய்ந்தது.

25 விநாடிகளுக்குள் அனைத்தும் நடந்து விட , பின்னாலிருந்த ராமேஸ்வர் தயாள் ஓடிவர, சத்வந்த் சிங் சுட்ட துப்பாக்கி குண்டுகள் அவரது தொடை , கால்களில் பாய, கீழே விழுந்தார்.துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டு, அக்பர் சாலையில் நின்று கொண்டிருந்த அதிகாரி தினேஷ்குமார் பட் ஓடிவர , இருவரும் ஆயுதங்களை கீழே போட்டனர். " நாங்கள் செய்ய வேண்டியதை செய்து விட்டோம்.நீங்கள் இனி என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள்" திமிராக பியாந்த் சிங் கூறினான்.

எப்போதும் நின்று கொண்டிருக்கும் ஆம்புலன்சில் , ஓட்டுநர் எங்கே என்று தெரியவில்லை.( ஏற்கனவே திட்டம் அது தான்.) வெள்ளை நிற அம்பாசிடர் காரில் நிலைகுலைந்த நிலையில் , பின் இருக்கையில் இந்திரா. சத்தம் கேட்டு " மம்மி'!! என்று அலறிக் கொண்டு ஓடி வந்த சோனியா , அவரது தலையை தனது மடியில் ஏந்திக் கொண்டார்.

கார் எய்ம்ஸ் மருத்துவமனை நோக்கி விரைந்தது.ஆனால் இது குறித்து தகவல் மருத்துவ மனைக்கு தெரிவிக்கப்படவில்லை (????)ஸ்ட்ரெச்சரும் தயாராக இல்லை.மூன்று நிமிடம் கழித்து ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்து இந்திராவை உள்ளே கொண்டு சென்றனர்.அவரது கோலத்தைப் பார்த்த மருத்துவர்கள் கதிகலங்கிப் போனார்கள்.

அவரது கல்லீரல் மற்றும் நுரையீரல் சல்லடையாகி இருந்தன.பெருங்குடல், சிறு குடல் கடுமையாக சேதமடைந்திருந்தன.முதுகுத் தண்டு சிதைந்திருந்தது.மொத்தத்தில் அவரது உடல் உருக்குலைந்து போயிருந்தது. உதிரம் முழுதும் வடிந்து விட்ட நிலையில் இருந்த அவருக்கு ரத்தம் 80 யூனிட்டுகள் ஏற்றப்பட்டன..அவரது ரத்தத்தின் வெப்பநிலை குறைய ஆரம்பித்தது.கண்கள் நிலைகுத்தி இருந்தன..அவரது எதையும் தாங்கும் இதையம் மட்டும் , எந்தவித சேதமும் இன்றி ,அவருக்கு இனிமேலும் வலியைக் கொடுக்கக் கூடாதென்று நினைத்தோ என்னவோ மிகவும் மெதுவாகத் துடித்துக் கொண்டிருந்தது.

அவரது மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் , அறுவைசிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு , அவரது உடலைத் துளைத்து வெளியேறிய வை போக, அடம்பிடித்து அமர்ந்திருந்த மற்றவை வெளியேற்றப்பட்டன.

சீக்கிய படுகொலைகள்:

மாலையில் செய்தி பரவ ஆரம்பித்ததும் ஆங்காங்கே கலவரம் மூள , ஆங்காங்கே சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மூன்று நாட்கள் நீடித்த வன்முறையில் அரசு தெரிவித்ததை விட அதிகமாக 8000 முதல் 17000 வரை சீக்கியர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. முதல் நாள் மட்டும் இக்கலவரம் நடந்திருந்தால் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ,நடந்ததாகக் கூறலாம்.கலவரம் வெடித்தது தெரிந்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அடுத்து வந்த இரண்டு நாட்களும் கலவரம் தீயாகப் பரவி தேடித் தேடி சீக்கியர்களைக் கொன்று குவித்தது , ஆனாலும் சில நேர்மையான அதிகாரிகள் , முடிந்த அளவு சீக்கியர்களைப் பாதுகாத்தனர்.ஆளும்கட்சி மற்றும் அதிகாரிகளின் ஆசியுடனே இது நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொலையாளிகளின் ஒருவனான பியாந்த் சிங் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப் பட்டான்.சத்வந்த் சிங் அவனுக்கு உடந்தையாக இருந்த கேதர் சிங் ( இவனது மருமகன் தான் பியாந்த் சிங் )இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

ஆலமரம் வீழ்ந்தால்.. நிலம் அதிரும்.

" ஒரு பெரிய மரம் வீழ்ந்தால் , அதன் தாக்கம் நில அதிர்வாக வெளிப்படும் ".. என்று ராஜிவ் காந்தி நடந்த கலவரத்திற்கு நியாயம் கற்பித்தார். இந்திரா இறந்த பிறகு பிரதமராக பதவியேற்ற ஒரு பொறுப்பான தலைவரிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் அல்ல இவை. குடும்பத்தினரை இழந்து , உடமைகளை இழந்து , ஆதரவற்று நிற்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் இப்படுகொலைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

எப்போது இம்மாதிரியான அரசியல் அல்லது கொள்கை ரீதியான மோதல்களும், கலவரங்களும் வெடிக்கின்றனவோ , அப்போதெல்லாம் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் எந்த பாவமும் அறியாத பொதுமக்கள் தான்.ஆனால் இங்கே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து வந்த குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் மறிக்கப்பட்டார். அவரது உதவியாளரின் கார் தாக்கப்பட்டது. 1971 இந்தியா பாகிஸ்தான் போரின் போது, திறமையாக செயல்பட்டதாக, மகாவீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய விமானப் படை கேப்டன் மன்மோகன் வீர்சிங் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.

முக்கியமானவர்களுக்கே ( சீக்கியர்கள் என்பதால் ) இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைத்திருக்கும்,? 21 ஆண்டுகள் கழித்து பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்ற அவையில் , அப்போது நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார்.

குஜராத் கலவரத்துக்கும் இதற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை தானே? காரணம் கிடைத்தால் ஒரு இனம் தன்னோடு வாழும் மற்றோரு இனத்தை அழிக்க, மனதை உடனடியாகத் தயார் படுத்திக் கொண்டு விடுவது மானுடத்தின் கேவலமான அணுகுமுறை அல்லவா?

ராஜ் காட் ,.தகனத்தின் போது.. குடும்பத்தினர்.

இரும்புப் பெண்மணி துயிலும் சக்தி ஸ்தல்.

காந்தியின் துயரமான முடிவில் பெற்ற கசப்பான அனுபவங்களை ஒவ்வொரு முறையும் அலட்சியப் படுத்தியதால் , இந்திரா காந்தி, பின் அவரது மகன் ராஜிவ் காந்தி என வன்முறையால் பாரதத்தின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கிறோம்…

இந்தியாவின் முதல் வார இதழா

  ரஸ்ஸி கரஞ்சியா என்பவரால் 1941 Blitz , பிளிட்ஸ் சிறுபத்திரிகை தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் வார இதழாகும். இது புலனாய்வு பத்திரிகை ம...