தர்மத்தின் தலைவன் வள்ளல் பச்சையப்பன் முதலியார்!!
தர்மம் எனப்படும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல் அறம். அதனால்தான் 'அறஞ்செய விரும்பு’ என்று ஒளவையார் ஆத்திசூடியில் சுருக்கமாகச் சொன்னார். அத்தகைய அறம் செய்த வள்ளல்கள் வரிசையில் வைத்து புகழப்படுபவர் பச்சையப்ப முதலியார்!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆதி அகமுடைய வேளாளர் மரபில் விசுவநாத முதலியார் - பூச்சியம்மாள் தம்பதிக்கு மகனாக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் பச்சையப்பர். தாயின் கர்ப்பத்தில் உருவாகி இருக்கையிலேயே தன் தந்தையை இழந்தார்.
தாயார் பூச்சியம்மாள், ஏற்கெனவே தனக்குப் பிறந்த இரண்டு பெண் மக்களையும், பச்சையப்பரையும் அழைத்துக்கொண்டு தன் கணவரின் நண்பரும், ஆற்காட்டுச் சுபேதாரின் காரியக்கார அதிகாரியாக பெரியபாளையத்தில் வாழ்ந்த ரெட்டிராயர் என்னும் மார்த்தவரிடம் ஆதரவு தேடி வந்தார்.
கி.பி. 1754-ம் ஆண்டு பெரியபாளையத்தில் பச்சையப்பர் பிறந்தார். அவருடைய ஐந்தாவது வயதில் தந்தைபோல அவர்களை ஆதரித்து வந்த ராயர் காலமாகிவிட்டார். பின்னர் கதியற்ற நிலையில், தாயார் பூச்சியம்மாள் தன் மூன்று குழந்தைகளுடன் சென்னை நகரத்துக்கு வந்து, கோட்டைக்கு வடமேற்கில் ஒற்றைவாடை சாமி மேஸ்திரி தெருவில் இருந்த ஒரு சந்து முனைச் சிறு வீட்டில் குடியமர்ந்தார்.
அப்போது அங்கே ஆங்கிலேயரிடம் துவிபாஷியாக - தமிழ் ஆங்கிலம் இரண்டும் அறிந்த மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த 'நெய்த வாயல் பௌனி’ நாராயண பிள்ளை என்னும் ஒரு நல்ல மனிதரை அணுகி உதவி வேண்டினார் பூச்சியம்மாள். பிள்ளை அவர்கள் பூச்சியம்மாளைத் தன் சகோதரியாக பாவித்து மனமுவந்து ஏற்றுக்கொண்டு குழந்தைகளையும் படிக்க வைத்தார்.
பச்சையப்பரும் அவரைத் தன் தந்தையாகக் கருதி, அவருடைய வணிக முறைகள் மற்றும் குணநலன்களையும் அறிந்துகொண்டார். முதன் முதலில் பச்சையப்பர், பீங்கான் கடைகளில் சரக்குகள் கொள்முதல் செய்ய வரும் ஐரோப்பியர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து அதன் மூலம் சிறிது பொருள் சேர்த்தார். அதன் பிறகு, அவர் தென்னாட்டுக்குச் சென்ற 'நிக்கல்ஸ்’ என்னும் ஆங்கில அதிகாரியிடம் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார். சம்பாதித்த பொருளை அவ்வப்போது நாராயண பிள்ளையிடமே கொடுத்துச் சேர்த்து வைத்தார். கிழக்கிந்திய கும்பினியாரிடமும், வாலாஜாபாத் நவாபின் காரியஸ்தரான ஜோஸப் சலிவன் என்ற வெள்ளைக்கார துரையிடமும் துவிபாஷியாக அமைந்து, அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஆளாகி, அதன் பயனாகப் பெரும்பொருள் சேர்த்துச் செல்வந்தரானார்!
காலா காலத்தில், பச்சையப்பர் தன் சொந்தத் தமக்கையான சுப்பம்மாளின் பெண் ஐயம்மாளை திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கை தொடங்கினார். ஆனால், அவருக்குக் குழந்தைப்பேறு கிட்டவில்லை. இந்தக் காலத்தில்தான் அவருடைய உள்ளத்தில் தர்ம சிந்தனை வேர்விட்டது. அதன்பயனாக, 'சிவதர்மம்’ செய்ய ஆர்வங்கொண்டு காஞ்சி ஏகாம்பரர் ஆலயத்தில் ஸ்ரீபலிநாயகர் - சிவகாமி அம்மை என்னும் இரண்டு உலோக விக்கிரங்களை வார்ப்பித்து, பிரதிஷ்டை செய்வித்து, 1774-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் நாள் திருக்குடமுழுக்கு வைபவத்தை வெகு விமரிசையாக நடத்தினார்.
சில காலம் தஞ்சாவூரில் வாழ்ந்தார். அங்கிருந்து சென்னை திரும்பி, அப்போது பிரபலமாக இருந்த வீரப்பெருமாள் பிள்ளையிடம் நட்புகொண்டு பழகலானார். வீரப்பெருமாள் பிள்ளை சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். அவருக்கு அருகில் தாமும் வசிக்க வேண்டும் என விரும்பிய பச்சையப்ப முதலியார், கோமளீசுரன் பேட்டைக்குக் குடிபுகுந்தார்.
எதிர்பாராத விதமாக முதலியார் பலவித நோய்களுக்கு ஆளாகி, அவை குணமாகும் பொருட்டு சில நண்பர்களின் அறிவுரையை ஏற்று, 1794-ம் ஆண்டில் கும்பகோணம் சென்று வசித்து வரலானார். இக்காலக் கட்டத்தில்... தான் தேடிச் சேர்த்த சொத்துகள்பற்றிய ஓர் 'உயில் சாசனம்’ எழுதி வைத்துவிட்டு, கும்பகோணத்தில் குடிபுகுந்த அதே 1794-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் விழிகள் மூடி மீளாத் துயில்கொண்டார்.
அவர் வாழ்ந்தது 40 ஆண்டுகள்தான். இவற்றில், பால பருவம் 15 ஆண்டுகள் போக, மீதி 25 ஆண்டுகளில் அவர் தேடிய திரவியமும், செய்த தர்ம காரியங்களும் இம்மண்ணுலகில் அவருக்கு மங்காப் புகழை வழங்கி நிலைபெறச் செய்திருக்கிறது!
இவருக்குப் பிற்கால வாரிசு இல்லாத குறையினால், இவருடைய அனைத்து ஆஸ்திகளையும் 42,080 பெறுமான கம்பெனி பத்திரங்களையும், பிறரிடம் இருந்து முதலியாருக்கு வரவேண்டிய 2 லட்சத்தையும் அண்ணாசாமி பிள்ளை என்பவர் பொறுப்பெடுத்து நீதிமன்றத்தில் செலுத்தினார். இந்தப் பணம் 47 ஆண்டுகள் நீதிமன்றத்திலேயே இருப்பில் வைக்கப்பட்டு அசலும், வட்டியும் சேர்ந்து இறுதியில் மொத்தமாக 4,47,267 ஆனது!
இப்பெரு நிதியை அப்போது சென்னையில் வசித்து வந்த பௌணி நாராயணப் பிள்ளை, ஐயாப் பிள்ளை, அண்ணாசாமிப் பிள்ளை, ஸ்ரீநிவாசப் பிள்ளை முதலிய பிரபுக்களின் பெரு முயற்சியினாலும், அக்காலத்தில் அட்வகேட் ஜெனரலாயிருந்த ஜார்ஜ் நார்ட்டன் துரையின் உதவியினாலும், அந்நாளில் சென்னை மாகாண கவர்னராயிருந்த எல்பின்ஸ்டன் பிரபுவின் பெருந்தன்மையான குணத்தினாலும், உச்ச நீதிமன்றத்தினர் ஒன்பது டிரஸ்டிகளை நியமித்து அறக்கட்டளை ஆக்கித் 'தர்ம பரிபாலனம்’ செய்யும் வகையில் ஓர் அரிய அமைப்பை ஏற்படுத்தினார்கள்!
அன்றைக்கு அவர்கள் ஏற்படுத்திய அந்த அரிய - பெரிய - உன்னத - உயர்ந்த அறம் தழுவிய அமைப்பு இன்றைக்கும் நிரந்தரமாக நிலைத்துச் செயல்படுகிறது என்பதற்குப் பல அறிஞர் பெருமக்களையும், அறிவார்ந்த சான்றோர்களையும் உருவாக்கிப் பெரும் புகழ்பெற்று விளங்கும் சென்னை 'பச்சையப்பன் கல்லூரி’ ஒன்றே தக்க சான்று!