Showing posts with label ருத்ரம். Show all posts
Showing posts with label ருத்ரம். Show all posts

Tuesday, June 27, 2023

ருத்ரம்

 நான்மறைகளில் ஒன்றான யஜுர் வேதத்தில், சிவபெருமானை போற்றும் துதிக்கு ருத்திரம் என்று பெயர். இந்த துதி சத ருத்ரீயம், ருத்ர ப்ரஷ்னம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

By Anonymous (Indian artist) - Walters Art Museum: Home page Info about artwork, Public Domain, File:Indian - Festival Image of Shiva - Walters 543084.jpg - Wikimedia Commons

ருத்ரம் என்று பொதுவாகக் கூறினாலும், இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதிக்கு நமகம் என்று பெயர். இரண்டாவது பகுதிக்கு சமகம் என்று பெயர். இரண்டிலும் 11 அனுவாகங்கள் (பகுதிகள்) உள்ளன.

நமக அனுவாகங்கள்:

முதல் அனுவாகம்: நமது பாபங்கள் மற்றும் தவறுகளால் கோபத்துடன் கையில் வில்லும், அம்பும் ஏந்தி இருக்கும் சிவபெருமானை சாந்தப்படுத்தும் பாகம் இது.

இரண்டு முதல் ஒன்பதாவது அனுவாகம் வரை: சிவபெருமானை துதிக்கும் பகுதி. இதில் இரண்டு அல்லது மூன்று திருநாமங்களுக்குப் பிறகு நம, நம என்று வரும். எனவேதான் இந்த முதல் பகுதி (11 அனுவாகங்களையும்) நமகம் என்று அழைக்கிறோம். இதில் உள்ள 8வது அனுவாகத்தில் 'நமசிவாய' என்ற பஞ்சாக்ஷர (திருவைந்தெழுத்து) மந்திரம் உள்ளது. இந்த (2 முதல் 9வது) அனுவாகங்களில் "ஹிரண்யபாஹவே நம:" தொடக்கமாக 300 திருநாமங்கள் உள்ளன. இந்த திருநாமங்களை ஓதி இறைவனுக்கு (வில்வத்தால்) அர்ச்சனை செய்வது வழக்கம். இந்த திருநாமங்களை "ருத்ர த்ரிஶதி" என்று அழைப்பார்கள்.

By Raji.srinivas, CC BY-SA 3.0, File:KapaliKarpagambal.JPG - Wikimedia Commons

பத்து மற்றும் பதினொன்றாவது அனுவாகங்கள்: சிவபெருமானிடம் நமது பொதுவான வேண்டுதல்களை கோரும் பகுதிகள். இந்த வேண்டுதல்கள் பெரும்பாலும் நமது கிராமம், சமுதாயம் ஆகிய அனைவருக்காகவும் வேண்டும் வண்ணம் உள்ளன. இதன் முடிவில் "த்ரயம்பகம் யஜாமஹே" என்னும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும் உள்ளது.

சமக அனுவாகங்கள்:

இந்த அனுவாகங்கள் முழுவதுமே நமக்கான வேண்டுதல்கள். வாஜஸ்ச மே... என்று இந்திரிய நன்மைகள் முதல், செல்வம், இகவாழ்வின் நலன்கள், உணவு, பூமி, பயிர்கள், கால்நடைகள் என அனைத்து நலன்களும் நமக்கு கிடைக்க வேண்டி பிரார்த்திக்கும் பகுதிகள் சமகம். ஒவ்வொரு வேண்டுதலும் "ச மே" (எனக்கு கிடைக்கட்டும்) என்று முடிவதால், இந்த பகுதி சமகம் என்று அழைக்கப்படுகிறது.

ருத்ரம் (நமகம் மற்றும் சமகம்) என்ற இந்த துதியை தினந்தோறும் பாராயணம் செய்வது அனைத்து நலன்களையும் அளிக்கவல்லது. அவ்வாறு செய்ய இயலாவிடின் மாதம் இருமுறை வரும் பிரதோஷ தினத்தன்று பாராயணம் செய்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

ருத்திர பாராயணம் செய்யும் முறைகள்:

நமகம் மற்றும் சமகம் ஆகியவற்றை ஒரு முறை பாராயணம் செய்வது: இது தினந்தோறும் பாராயணம் செய்ய ஏற்றது

ஏகாதச ருத்திரம்: இதில் நமகம் பகுதியை 11 முறை பாராயணம் செய்வார்கள். ஒவ்வொரு நமக பாராயணத்தின் முடிவிலும் ஒரு சமக அனுவாகம் பாராயணம் செய்யப்படும்.

லகு ருத்திரம்: ஏகாதச ருத்திரத்தை 11 முறை பாராயணம் செய்வது லகு ருத்திரம். பொதுவாக, 11 பேர் ஏகாதச ருத்திரம் ஜெபிப்பார்கள்.

மஹாருத்ரம்: ஏகாதச ருத்திரத்தை 121 முறை ஜபிப்பது மஹாருத்ரம் என்று அழைக்கப்படும். பொதுவாக, 121 பேர் ஏகாதச ருத்ரம் ஜெபிப்பதை "மஹாருத்ரம்" என்று அழைப்பார்கள். இந்த முறையில் 11 பேர், 11 குழுக்களாக அமர்ந்து இதை ஜெபிப்பார்கள். சிவபெருமானுக்கு 11 முக்கிய பெயர்கள் உண்டு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு சிவபெருமானை ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து, அந்த கலசத்தை சுற்றி அமர்ந்து ஏகாதச ருத்திரம் ஜபிப்பது வழக்கம்.

அதிருத்திரம்: மஹாருத்திரத்தை 11 நாட்கள் தொடர்ந்து ஜபிப்பது அதிருத்திரம் என்று அழைக்கப்படும். பெரும்பாலும், சிவபெருமானை ஆவாஹனம் செய்த பாணலிங்கத்திற்கோ அல்லது பிரதிமையில் சிவபெருமான் ஆவாஹனம் செய்தோ, 11 நாளின் முடிவில், 11 கலசங்களில் ஆவாஹனம் செய்திருக்கும் புனித நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு திருவபிஷேகம் செய்வதும் வழக்கம். சில நேரம், அதிருத்திரத்தை திருக்கோயில்களில் நடத்துவார்கள். அப்பொழுது கடைசி நாளன்று அந்த புனித நீரைக் கொண்டு அந்த திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு திருவபிஷேகம் செய்வார்கள்.

ஒரு முறை கூறினாலும், ஒருவர் கூறுவதை பக்தியுடன் அமர்ந்து கேட்டாலும் நமக்கு இவ்வுலக மற்றும் அவ்வுலக நன்மைகளை அளிக்க வல்லது ஸ்ரீ ருத்ரம் என்னும் இந்த வேத பகுதி என்றால் அது மிகையாகாது.

நமசிவாய வாஅழ்க!!! நாதன் தாள் வாழ்க!!!

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...