Saturday, November 5, 2022

உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் கோவில்

 ஓம் நம சிவாய!

ஈசன் உறையும் தலங்களுள் 12 ஜோதிர்லிங்க தலங்கள் மிக பிரசித்தியானது. அதில் முக்கியமான ஒரு தலம் உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் கோவில். அவனருளாலே இந்த தலத்தை தரிசிக்கும் வாய்ப்பு அடியவளுக்கு கிடைத்தது…

வடோதராவில் இருக்கும், எனது தம்பியின் வீட்டில் இருந்து புறப்பட்டோம்.இரவு பனிரெண்டு மணி பதினைந்து நிமிடத்தில் இந்தோர் நோக்கி புறப்பட்ட ரயிலில் ஏறினோம்.

காலை ஆறரை மணிக்கு வரலாற்று சிறப்பு பெற்ற உஜ்ஜயினி ரயில் நிலையத்தை அடைந்தோம். . ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த, ஒரு ஹோட்டல் அறைக்கு சென்று, குளித்து விட்டு, ஓம்காரேஷ்வரர் எனப்படும் மற்றொரு ஜோதிர் லிங்க தரிசனத்திற்கு காரில் பயணித்தோம். ஒன்றரை மணி நேர பயணத்தில் ஓம் காரேஷ்வரை அடைந்தோம்.

சிலுசிலுத்து ஓடும் நர்மதை நதியில் மோட்டார் படகில் பயணித்து, மறுகரையில் இருந்த ஆலயத்தை அடைந்தோம். பாலத்தை கடந்து, நடந்தும் , இச் சன்னிதியை அடையலாம். பெருமை மிகு ஓம்காரேஸ்வரர்க்கு நம் கையால், நீர் விட்டு அபிஷேகம் செய்யலாம். தரிசனத்தை முடித்துவிட்டு, வழியிலுள்ள சனி மந்திருக்கு வந்தோம். . நவகிரகங்களும் பிரம்மாண்டமான தோற்றத்தில் வீற்றிருக்கும் இச் சன்னிதியை வழிபட்டு, உஜ்ஜயினை அடைந்தோம்

.

பஸ்ம ஹாரத்தி மஹாகாளேஸ்வரருக்கு படு பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என்பதால், மறு நாள் அதிகாலை, தரிசனத்திற்கு ஆன் லைன் டிக்கெட் வாங்கினோம்.

இதற்கு ஆதார் அட்டை முக்கியம். கோவிலின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நம் விவரங்களை பதிவு செய்து, கட்டணமாக 200 ரூபாய் செலுத்தினால், உள்ளே செல்ல அனுமதி படிவத்தை பெறலாம்..

இரவு ஒரு மணி அளவில், குளித்து விட்டு, மஹாகாளரை தரிசிக்க கிளம்பினோம்.இந்த நேரத்திற்கு யார் வந்திருக்க போகிறார்கள்? என நினைத்த எனக்கு, ஈ ஆட்டோவில் கோவிலை அடைந்ததும் படு ஷாக். அந்த நேரத்திற்கே, குளித்து முகம் முழுவதும் மேக்கப்புடன், நெற்றியில் , மஞ்சள் பட்டை போட்ட பக்தர்கள் கூட்டம் . அப்போதே சுமார் இருநூறு பேர் வந்திருக்க கூட்டத்தில் காத்திருந்தோம். .மூன்று மணி அளவில் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, உள்ளே, கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் ஸ்லோப்பில் ஏறி, இறங்கி, திருப்பதியில் இருப்பது போல் ஹால் ஹாலாக தங்க வைக்க பட்டோம்.

சரியாக நான்கு மணி அளவில் கோவிலுக்குள், திரும்பி அரைகிலோ மீட்டர் நடந்து, காளேஸ்வரர்க்கு எதிரில் இருந்த மண்டபத்தில் அமர வைக்கப் பட்டோம். இந்த ஆராதனையை காண, பல் வேறு மாநிலங்களில் இருந்தும், மக்கள் கூட்டமாக வருகிறார்கள். அகோரிகள் எனப்படும், சிவ பக்தர்களால் தாந்த்ரீக முறையில் பூஜா முறைகள் பின்பற்றப்படும் ஒரு கோவில்.

பல்வேறு அபிஷேகங்களுக்கு பிறகு, சுட சுட சுடலையில் எரிந்து கொண்டு இருக்கும், சிதையில் இருந்து சாம்பலை ஒரு அகோரி கொண்டு வர, அச் சாம்பலை இறைவனுக்கு அபிஷேகமாக செய்கிறார்கள். தினமும் நடைபெறும் இந்த ஹாரத்தியே பஸ்ம ஹாரத்தி.

இதற்காக தன் உடலை, இக் கோவிலுக்கு எழுதி தந்த பக்தர்களின், கணக்கு பத்து வருடங்களுக்கு ஃபுல்லாம். அவ்வாறு எழுதி தந்தவர்கள் இறந்தால், அவர்களின் உறவினர்கள், இந்த ஊருக்கு வந்து, உடலை தகனம் செய்வார்களாம். கோவில் நிர்வாகம், அதை பூஜைக்கு எடுத்து கொண்டு வருமாம்.

அந்த அபிஷேக நேரத்தில் மட்டும், விளக்குகள் அணைக்கப்பட்டு, சிவ வாத்தியங்கள் முழங்க, பக்கர்களின் மஹா காளேஷ்வர் கீ ஜெய்! என்ற கரகோஷங்களுடன் கூடிய பக்தி கூச்சலும் சேர, அந்த இடமே சுடலையாடியின் ஆடுகளமாக , தோற்றம் அளிக்கும்.. இந்த ஹாரத்தியின் போது, பெண்களை குங்கட் (முகத்தை மறைத்து கொள்ள சொல்கிறார்கள்)

ஆனால் இந்த கொரோனா பிரச்சினைக்கு பிறகு, சேகரிக்கப்பட்ட சாம்பலை, துணியில் முடிந்து, பவுடர் போல ஸ்ப்ரே செய்கிறார்கள். இரண்டு மணி நேரங்கள், பக்தி பெருவெள்ளத்தில் உள்ளமும், உடலும் சுத்தி கரிக்கப்பட்டதை போன்ற தொரு உணர்வு தோன்றியது என்னவோ உண்மை.. கடைசியில் கால் மணி நேரத்திற்கும் மேலாக, உடுக்கை, தாரை, தப்பட்டை, சங்கு முழங்க, பல் வேறு தீபாராதனைகள்

அந்த அதிகாலை நேரத்திலேயே ஆயிரத்துக்கும் மேலாக பக்தர்கள் அங்கு குழுமி இருந்தனர். வருடத்தின் அனைத்து நாட்களும் நடக்கும் இந்த பஸ்ம ஹாரத்தி நிறைய பக்தர்களை இத் தலத்திற்கு வரவழைக்கிறது.

வெளியே வந்து விக்கிரமாதித்தன் தொன்று தொட்டு ஆட்சி செய்த தொன்மையான உஜ்ஜயினி நகரை ஒரு சுற்று சுற்றினோம். பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவில் இருக்கிறது. பைரவருக்கு மது நிவேதனம் நடைபெறும் என்பதால், பாட்டிலை வாங்கி வைத்து படைத்து, பிரசாதம் சாப்பிட்டு(குடித்து?) நேர்த்திக் கடன் நிறைவேற்றும் ஒரு கூட்டமும் அலைகிறது.

சதி நிகழ்வில் , சதிமாதாவின் நாக்கு விழுந்த இடமாக(ஒரு சக்தி பீடம்) உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில்

உஜ்ஜயினி மாகாளி

இருக்கிறது. . அங்கும் சென்று தரிசித்து விட்டு, ஹோட்டல் அறைக்கு திரும்பினோம். டிஃபனை சாப்பிட்டு விட்டு காலை எட்டரைக்கு தூங்கி, மதியம் இரண்டு மணிக்கு எழுந்து, மதிய உணவை முடித்து, மாலை ஐந்து மணிக்கு சபர்மதி விரைவு ரயிலை பிடித்து, இரவு பதினோரு மணிக்கு வடோதராவை அடைந்தோம்.

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...