பூலான் தேவியின் கதை;
உலகிலேயே இல்லாத , இந்தியாவில் இருக்கும் ஒரு சாபக்கேடு சாதி..
எல்லோருக்கும் பத்து மாதங்களே..
பிறக்கும் வழியும் ஒன்றே..
இறப்பும் ஒன்றே..
புதைக்க ஆறடி நிலம்..
எரிக்க ஒரு செம்பு போதும்..
இதில் உயர் சாதி, தாழ்ந்த சாதி என மனிதனை மனிதன் தின்னும் அவலம்.. நாகரிகம் அடைந்து விட்டதாகக் கூறும் மனிதன் இன்றும் இந்த அசிங்கத்தை மடியில் கட்டிக் கொண்டு அலைவதை நினைத்தால் அவன் மீது அருவருப்பே மிஞ்சுகிறது.
கொட்டி கொட்டி புழுவை குளவியாக்குவது ..என்று ஒரு சொலவடை கிராமப் புறங்களில் உண்டு..
அப்படி ஒரு புழு..குளவியான கதை தான் இது ….
சாக்கடை புழுக்கள்:
வட மாநிலங்கள் சில இடங்களில் , தென்னகத்தை விட, இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, உயர் சாதியினர் என்று கூறிக்கொள்வோர் வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்து விடுவதை பார்த்து கொண்டு தான் வருகிறோம்..1960களில்??? கேட்கவே வேண்டாம்..
உத்திரப்பிரதேசத்தில் துர்கா புர்வா.. வானம் பார்த்த வறண்ட பூமி..பொதுவாகவே வளம் தரும் பகுதிகளை உயர் சாதியினர் எடுத்துக் கொண்டு, வறண்ட பகுதிகளை நோக்கி அப்பாவி பாமர மக்களை விரட்டியிருப்பதை இன்றும் அனைத்து இடங்களிலும் காணலாம்.
இங்கு "மல்லா " என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவள் " பூலன் தேவி'.அப்பாவி தந்தை, மகா பாவி சித்தப்பா..இவர்களை ஏமாற்றி அவன் சொத்துக்களை அபகரித்துக் கொண்டான். தம்பி சிறுவயது.. தட்டிக் கேட்க ஆளில்லாமல் பூலன் தேவி சித்தப்பாவை எதிர்த்தா
அங்கே இருந்த "தாக்கூர்' என்ற உயர்சாதி வகுப்பினர் , இம்மக்களை அடிமை போல நடத்தி வந்தனர்..அவர்களுக்கு —— மட்டும் தான் கழுவி விடவில்லை.. மற்ற அனைத்து வேலைகளையும் மறுக்காமல் செய்ய வேண்டும்.. மறுத்தால்??. மறுத்தால் என்ன..மறுக்கவே முடியாது..அடி உதை தான்.கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு காலில் மிதிபடும் புழுக்கள் போல முதுகெலும்பு உருவப்பட்டது போல வாழ்க்கை..
புட்டிலால் என்ற முப்பது வயதுள்ள ஒருவனுக்கு பதினொரு வயதான பூலன் மனைவியாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.. வண்டிச் சக்கரத்தில் மாட்டிய எலுமிச்சையாய் கசக்கி பிழியப் பட்ட பூலன், வெறுத்துப் போய் தந்தை வீட்டுக்கு திரும்ப , வீட்டிலோ வாழ்ந்தாலும் செத்தாலும் புருஷன் வீட்டில் தான் என விரட்டப்பட்டாள்.
கேள்வி கேட்க ஆளில்லை..மயாதீன் என்ற அவளுடைய சித்தப்பா, அவளது தந்தையை ஏமாற்றி சொத்தை அபகரித்துக் கொள்ள, இளமையிலேயே எதிர்க்கும் குணம் நிறைந்த, பூலன் சித்தப்பாவை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றாள்..பூலனை பழிவாங்க, தனது வீட்டில் அவள் திருடி விட்டாள் என்று குற்றம் சாட்டவே, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த காவலர்களால் கசக்கி பிழியப்பட்டாள்..தொட்டால் தீண்டத்தகாதவர்கள் என்று கூறிக் கொண்டே, அந்த தாழ்த்தப்பட்ட பெண்களின் உடலை சூரையாடுவது குள்ளநரித்தனம்..தானே?
ஆனால் தம் இனப்பெண்கள் மேல் மேல் சாதியினரால் வன்புணர்வு செய்யப்பட்டாலும் ,ஏன் என்று கேட்க முடியாத திராணியற்றவர்களாக ஆக்கி வைத்திருந்தனர் இந்த தாக்கூர்கள்.
மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்ததால் இரக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாள்.. தனது கிராமத்திற்கு வந்திருந்த போது, அப்பகுதியில் இருந்த ஒரு கொள்ளைக் கும்பல் பூலனைக் கடத்தப்போவதாக தகவல் அனுப்பியிருந்தனர்.. அப்போதெல்லாம் சொல்லி விட்டே செய்தனர். ஒரு வேளை பாதுகாப்பில்லாத பெண் என்று நினைத்திருக்கலாம்..
பாபு குஜார்…இது தான் அந்த கொள்ளையன் பெயர்.. துப்பாக்கி முனையில் கடத்தி சென்றான்..பெண்களை கடத்துவதற்கு இரண்டே காரணங்கள்..ஒன்று பணம், மற்றொன்று உங்களுக்கே தெரியும்.. பூலன் தேவி ஒரு பரம ஏழை..தனது நிலை தெரிந்தும், பிசாசு கும்பலிடம் சிக்கி சீரழிவதை விட, இது மேல்..
பாறையில் பூத்த காதல் மலர்:
பாபு குஜாரும் வழக்கமான ஆண் மகனுக்கே உரிய .. வழியில் பூலை பாலியல் பலாத்காரம் செய்து வந்தான்..அவனது குழுவில் விக்ரம் மல்லா.. என்பவனும் இருந்தான்.. கொள்ளையர் கூட்டத்தில் சாதி மதம் கிடையாது.. அங்கே மல்லாக்களும், தாகூர் களும் கலந்தே இருந்தனர்..
பூலனுக்கு இழைக்கப்பட்ட வன்முறையை வெறுத்த விக்ரம் மல்லா. .. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பாபு குஜாரை சுட்டுக் கொன்றதோடு, பூலன் தேவியின் காதலனாக வும் மாறிப் போனான். அவளுக்கு துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம்,மலையேறுதல் போன்ற பலவற்றிலும் பயிற்சி அளித்து, தனக்கு அடுத்த நிலையில் அவளை வைத்து போற்றினான்...
இந்த நேரத்தில் பாபு குஜாரின் நண்பர்கள் இருவர் தனது தலைவனைக் கொன்ற விக்ரம் மல்லாவுக்கு எதிராக திரும்பினர்.. ஒரு கட்டத்தில் விக்ரம் மல்லா கொலை செய்யப்பட, பூலன் தேவியை பிடித்து வந்து, ஒரு குடிசையில் அடைத்து வைத்து, அங்கிருந்த தாகூர் ஆண் மக்கள், அவளை கும்பல் கும்பலாக பாலியல் வன்புணர்வு செய்தனர்..
அங்கிருந்து தப்பி வந்த பூலன், விக்ரம் மல்லா வின் நண்பன் மான்சிங் , மற்றும் அவனது நண்பர்களுடன் இணைய புதியதாக ஒரு கொள்ளை கும்பல்.. மான் சிங்கையும் காதலித்தாள்..சம்பல் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய கொள்ளைக் காரியானாள். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவ ஆரம்பித்தாள்..சிறு வயது பெண்களை யாராவது திருமணம் செய்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர் .
பூலன் தேவி பழிவாங்கிய பெஹ்மயி கிராமம்..
கொல்லப்பட்டோரின் நினைவாக…
தனது அடிமனதில் எரிந்து கொண்டிருந்த..வன்மத்துக்கு தீனி போட வேண்டுமே.. முதல் பலிகடா..அவளை சிறுவயதில் மணம் செய்து, சித்திரவதை செய்த புட்டி லாலை முட்டி போட வைத்து . கட்டி வைத்து, துவைத்து காய வைத்தாள்..கணவனுக்கே இந்த கதி என்றால் .தன்னை வன்புணர்வு செய்த தாகூர்கள்??? தனது ஆட்களுடன் தன்னை அடைத்து வைத்த பெஹ்மாய் என்ற ஊருக்கு தனது ஆட்களுடன் சென்றாள்.. எத்தனை பேரை அடையாளம் காண்பது,?? எல்லோரும் சாக்கடைத் புழுக்கள் தானே? கண்ணில் கண்ட 30 ஆண்களைப் பிடித்தாள்..
20 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றாள்..பூலன் தேவி என்றாலே..மல்லா இனப் பெண்களிடம்.. இயற்கை உபாதை கழிக்க கூட விடாமல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் செய்த மேல் சாதி ஆண் மக்கள், அவர்கள் மீது கைவைக்க தயங்கியது , பூலன் தேவியை . உண்மையாகவே தங்களைக் காக்க வந்த தேவதையாக பார்த்தனர்.
மல்லா இனப் பெண்களின் காவல் தேவதை.. பளிங்கு சிலை.
இந்த படுகொலை நாட்டையே உலுக்கிய நிலையில், பூலன் தேவியின் குடும்பத்தினரின் பாதுகாப்பை முன்னிட்டு, போலிஸில் சரணடைய விருப்பம் தெரிவித்தாள்.
1983 பிப்ரவரி 12 ல் முதல் மந்திரி அர்ஜுன் சிங் முன்னிலையில் சரடடைந்தாள்..1994 ம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் ஆட்சியில் விடுதலை கிடைக்க, சமாஜ்வாடி கட்சியில் இணைந்து, மிர்சாபூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் ..
2001ஜூலை 25 ம் நாள் டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்..
No comments:
Post a Comment