தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தது போல சில நட்சத்திரங்கள் மின்மினியாக தோன்றி ரசிகர்கள் மனதில் என்றென்றும் ஔிர்ந்து கொண்டிருக்கும். அது போன்ற நட்சத்திரம் தான் இவர். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துக்கு பிந்தைய வெற்றிடத்தை பிடிக்கும் ரேஸில் இவரும் இருந்தார் என்றே சொல்லலாம். ரஜினி, கமல் தலையெடுக்க துவங்கிய ஆரம்ப கால போட்டியாளர் இவர். 1980களின் தமிழ் ரசிகைகளுக்கு கமலுக்கு முந்தைய காதல் இளவரசன். அவர் தான் சுதாகர்.
சுதாகரின் பூர்வீகம் ஆந்திரா. அப்பா முன்பு டெபுடி கலெக்டராகப் பணியாற்றியவர். இப்போது ஓய்வு பெற்று, மகன் சுதாகரது கணக்கு வழக்குகளை - வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார். சுதாகரின் கூடப்பிறந்த சகோதரர்கள் ஆறு பேர். இவர்தான் கடைக்குட்டி. ஊரிலே நிலம் நீச்சு, வீடு மாடு என்று இருந்தாலும், தன் பி.ஏ. படிப்பைப் பாதியிலேயே அறுத்துக் கொண்டு சென்னை திரைப்படக் கல்லூரியில் வந்து சேர்ந்தார் சுதாகர். இந்த சென்னை திரைப்படக் கல்லூரியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் சுதாகர் கிளாஸ்மெட். அவருக்கு முன்பே சினிமாவுக்குள் நுழைந்து விட்டார் சுதாகர். சென்னை திரைப்படக் கல்லூரியில் ஆரம்பித்த சிரஞ்சீவி-சுதாகர் நட்பு தற்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.
தமிழில் வெறும் 5 ஆண்டுகள் தான் இவரது காலம். அதற்குள் சுமார் 30 படங்களை நடித்தார். 1980ல் மட்டும் நாயகனாக இவரது 7 படங்கள் வெளியாகின. சுதாகரை 1978ல் தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. '16 வயதினிலே' படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் தான் சுதாகர் அறிமுகம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகாவும் அறிமுகம். அதன் பிறகு இந்த ஜோடி மட்டும் 11 படங்களில் நடித்திருக்கிறார்கள்.
சுருட்டை முடி , களையான முகம், வித்தியாசமான தலை வகிடு, சின்ன மூக்கு, வசீகரமான தோற்றம் என மனதை கவர்ந்த சுதாகருக்கு ரசிகர் ரசிகைகள் கூட்டம் அதிகம் உண்டு. பாக்யராஜ் படமான 'சுவரில்லா சித்திரங்கள்' படத்தில் சுதாகர் தான் ஹீரோ என்றால் பாருங்கள்.
இயக்குநர் பாரதிராஜா, ஹீரோ போல பிரதான வேடத்தில் நடித்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் சுதாகரும் ஒரு ஹீரோ. கமலுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்திலும் ரஜினியுடன் 'அதிசயப் பிறவி' படத்திலும் நடித்திருக்கிறார்.
அறிமுகமான ஒரு சில ஆண்டுக்குள்ளேயே, 'நிறம் மாறாத பூக்கள்', 'மாந்தோப்பு கிளியே', 'எங்க ஊரு ராசாத்தி', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'கரும்பு வில்', 'கரை கடந்த ஒருத்தி', 'தைப்பொங்கல்' ('ஆல் இன் ஆல் அழகுராஜா...' படத்தில் சந்தானம் காமெடியில் சொல்லுவாரே...) என 1980ஸ் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதாகரின் படங்கள் ஏராளம்.
"கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ... இங்கு வந்ததாரோ..."
"மாஞ்சோலை கிளிதானோ.. மான் தானோ... வேப்பந் தோப்பு கிளியும் நீதானோ.."
"ஆயிரம் மலர்களே மலருங்கள்... அமுத கீதம் பாடுங்கள்..."
"சிறு பொன்மணி... அசையும்... அதில் தெறிக்கும்... புது இசையும்..."
"காதல் வைபோகமே காணும் நன்னாள் இதே... வானில் ஊர்கோலமாய்..."
"பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன்... நான் வந்த நேரம் அந்த மான் அங்க இல்லே..."
"மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..."
இது மாதிரியான சுதாகர் நடித்த படங்களின் ஏராளமான எவர்கிரீன் பாடல்களும் ரசிகர்கள் மனதுக்குள் இனிக்கும்...
மினிமம் பட்ஜெட்டில் ஏராளமான வெற்றிப் படங்கள், ரசிகர், ரசிகைகள் பட்டாளம்... என 1980களில் ரஜினி, கமலுக்கு இணையாக, சுதாகரும் 'உதிரிப் பூக்கள்' விஜயனும் செம டஃப் கொடுத்தாலும் விதி வலியது...! சினிமாவுக்கே உரித்தான உள் குத்து அரசியலும் இருந்திருக்கலாம்.
சினிமாவில் நல்ல உச்சத்தில் இருக்கும் சமயத்தில், படப்பிடிப்புக்கு போதையில் வருவது, தாமதமாக வருவது என சுதாகர் குழப்பினார். அதுவும் ஷோபா, அம்பிகாவுடன் நடித்த 'சக்களத்தி' படத்தின் படப்பிடிப்பில் அது பெரியதாக வெடித்ததால் சுதாகரின் திரை வாழ்க்கை திடீரென மங்கத் துவங்கியது.
தமிழில் உச்சத்தில் இருந்தபோதே அவரது தாய் மொழியான தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமாவில் கால்பதித்து ‘பவித்ரா பிரேமா’, ‘அக்னி பூலு’, 'ஊரிகிச்சினா மாதா’, ‘போகி மண்டலு’, ‘கொண்டே கொடல்லு’ போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தார்.
தெலுங்கிலும் இதேபோன்ற பிரச்சினைகளால் வாய்ப்புகள் குறைந்ததால் 1990களின் துவக்கத்தில் தெலுங்கில் காமெடியனாக அரிதாரம் பூசினார். அவரது குரலும் மிமிக்ரி திறமையும் அதற்கு கை கொடுத்தது. அதன்பிறகு அவருக்கு ஏற்ற நகைச்சுவை வேடங்களைத் தேர்ந்தெடுத்து நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்தார்.
இந்த சமயத்தில் தான் ரஜினியின் 'அதிசயப் பிறவி' படத்தில் சுதாகர் நடித்தார். இது சுதாகர் அவர்களின் தயாரிப்பில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த யமுடிகி மொகுடு திரைப்படத்தின் ரீமேக். இந்த தெலுங்கு படத்தை இயக்கியவர் ரவி ராஜ பின்னிசெட்டி. இவர் மிருகம் படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஆதி பின்னிசெட்டி அவர்களின் தந்தையார் தான். இந்த தெலுங்கு படத்தில் சுதாகர் நடித்த கதாப்பாத்திரம் தான் தமிழிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் சூப்பர் ஹிட் 'பேபிஸ் டே அவுட்' படத்தின் ரீமேக்கான 'சுட்டிக் குழந்தை' படத்தில் குழந்தையை கடத்தும் காமெடி வில்லன்களில் சுதாகரும் ஒருவர். அதில் அவரது குரல் மாடுலேஷன், தோற்றத்தை பார்த்தால் 1980ஸ் சுதாகரா இவர் என்ற கேள்வி நிச்சயமாக எழும்.
சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலும் தோன்றுவார். இந்நிலையில் 64 வயதாகும் சுதாகரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவந்தன. இதனால் பலரும் சுதாகரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கின்றனர்.
இந்தத் தவறான தகவல் டோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுதாகரே முன்வந்து தனது உடல்நிலை குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அதில், “என்னைப் பற்றிப் பரவும் தகவல்கள் அனைத்துமே தவறானவை. அந்த வதந்திகளை நம்பாதீர்கள். எந்த உண்மையும் தெரியாமல் தகவல்களைப் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம். நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த சுதாகர், போதையால் புகழை இழந்து, காமெடியனாக மாறி, உடல் நிலையையும் கெடுத்து வைத்திருக்கிறார். கனவு தொழிற்சாலை தரும் புகழ் போதையுடன் நிஜ போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்பதற்கு சுதாகரும் ஒரு உதாரணம்!!!
No comments:
Post a Comment