Saturday, May 4, 2024

கிரேக்க நாட்டு திருமண வைபவங்களுக்கு

 கிரேக்க நாட்டு திருமண வைபவங்களுக்கு போயிருக்கிறீர்களா? பரம்பரை பரம்பரையாக இவர்கள் தொடரும் திருமணச் சடங்கு முறைகள் நமக்கு ஆச்சரியம் தருபவை. மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலும், கிரேக்க ஓர்தொடக்ஸ் தேவாலய வழமையின் அடிப்படையிலும் இவர்கள் கலாச்சாரத்தில் காலங்காலமாக தொடரும் திருமணச் சடங்கு முறைகள் பிறருக்கு ஆச்சரியமூட்டுபவை....இதுகூட கிராமத்திற்கு கிராமம் , பிராந்தியத்திற்கு பிராந்தியம், தீவுக்கு தீவு என்று வேறுபடுவதுண்டு . “My Big, Fat, Greek Wedding” என்ற திரைப்படத்தைப் பார்த்தவா்களுக்கு, ஒரு கிரேக்க ஜோடி எப்படி தன் பதிவுத் திருமணத்தை நடாத்தி முடிக்கின்றது என்பது சுலபமாக புரிந்திருக்கும்..

கைகள் மாறும் கல்யாண மோதிரம்

திருமணப் பதிவு நிகழ்வின்போது, இந்தக் கல்யாண மோதிரம் மணமக்களின் இடது கை விரல்களை அலங்கரிப்பது கண்டு அதிசயப்பட்டு விடாதீர்கள். திருமணம் நிகழும்போதுதான், இந்த இடது கைவிரல் மோதிரம், வலது கைவிரலுக்கு மாறும்...

முதல் ஆச்சரியம் இது!

ஏன் இந்த வித்தியாசம்?

வலது கை இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறும் கை என்று நம்புவதுதான் முககிய காரணம். இன்றைய நாட்களில் கல்யாண மோதிரம், கல்யாண பதிவு மோதிரம் என்று இரு மோதிரங்களை அணிகிறார்கள். இப்படியொரு நிலையில் வலக்கைவிரலில் கல்யாண மோதிரத்திற்கு மேல்தான் கல்யாணப் பதிவு மோதிரத்தை அணிய வேண்டும். திருமண மோதிரம் இதயத்தை அண்மித்து இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை எதிர்பார்ப்பு....

கல்யாண நாள் பார்ப்போமா?

கல்யாணத்திற்கு நாள் குறிப்பது என்பது இவர்களுக்கு கொஞ்சம் சிக்கலான விடயந்தான்..ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் எப்படியோ ஐயரைக் கட்டாயப்படுத்தி, ஒரு சனி, ஞாயிறு தினத்தை நல்ல நாளாக்கி திருமண நாளையும் குறித்து விடுகிறார்கள். ஆனால் இங்கே அந்த “பருப்பு ”வேகாது. திருமணங்களே நடத்தக் கூடாது என்று பரம்பரையாக விலக்கப்பட்ட நாட்கள் பல இவர்களிடையே இருக்கின்றன. பொதுவாக இந்த விலக்கப்பட்ட நாட்கள், சமய அனுஷ்டான நாட்களையே சுற்றிவருகின்றன. ஒரு கோடைகால திருமணத்திற்கு நீங்கள் ஆசைப்பட்டால், ஆகஸ்ட் மாதத்தின் முதல இரண்டு வாரத்தை மறந்து விட வேண்டும். இவை கன்னி மரியாளின் வாரங்கள்! கிறிஸ்மஸ் பெருநாளுக்கு முதல் வரும் 40 நாட்களில்....மூச்..... கல்யாணக் கதையே வேண்டாம்.

40 நாள் தபசு காலம்.. கல்யாணங்களை நினைக்கவே முடியாது. ஈஸ்டரை நோக்கி நகரும் அந்த வாரத்திலும் “நோ கல்யாணந்தான்”!எவராவது உறவினர் மரணித்தால், 12 மாதங்களுக்கு காத்திருப்பு! . தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முகத்தின் கதைதான்! சிக்கல் விக்கல் சிக்கல்...

கட்டில் கலாச்சாரம்…..

கட்டிலில் துாவப்படும் பொருட்கள் இவைதான்….

இந்தத் திருமணத் தம்பதிகளின் கட்டிலை தயார் செய்வதும் வித்தியாசமானதுதான். திருமணத்திற்கு முதல் நாள் இரவுதான் கட்டிலைத் தயார்படுத்த வேண்டும். மணமகளின் தாயும், அம்மம்மாவும் கட்டிலின் மேற்பரப்பில் பூவிதழ்களையும், நாணயங்களையும் , koufeta என்றழைக்கப்படும் ஜோர்தான் நாட்டு (almonds) பாதாம் பருப்பையும் துாவ வேண்டும். முறையே காதல், செழிப்பு, கருவுறுதல் ஆகிய மூன்றையும் குறிக்கும் பொருட்கள் இவை! சில இடங்களில்குறுக்கு நெடுக்காக ஒரு குழந்தையை கட்டிலில் உருட்டுகிறார்கள்.(கருவுறுதல்)ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தைகள் உருட்டப்படுவதுதான் அதிகமாம்.

திருமண நாளன்று, மணமகனின் தோழன், “koumbaro,” தங்களுக்கிடையேயுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த, மணமகனுக்கு முகச்சவரம் செய்து விடுகிறான்.மணமகனின் உடையலங்காரத்தில் உதவும் கலாச்சாரமும் உண்டு. தீய ஆவிகள் தீண்டாதிருக்க மணமகனின் பாக்கெட்டுக்குள் ஒரு துண்டு இரும்பை போட்டுவிடுகிறார்கள். .

காலணி அடியில் எழுதப்படும் நண்பிகள் பெயர்கள்……..

மணமகளின் திருமணம் முடியும்வரை கூடவே இருப்பாள் மணப்பெண்ணின் தோழி(“koumbara”)! மணமகள் திருமணத்திற்கு , தான் அணியும் காலணியின் அடிப்புறத்தில், ஒற்றையாக இருக்கும் அனைத்து நண்பிகளின் பெயரையும் எழுத வேண்டும்.பல இடங்களுக்கும் நடந்து திரிந்து, காலணி அடியிலுள்ள பெயர்கள் அழிந்து விடுவதுபோல, திருமணமாகவிலலை என்ற பெயர் அழிந்து, விரைவில் திருமணமாகி விட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சடங்கு முறை.

முடிசூடும் மணமக்கள்

தங்கள் தலைகளில் மகுடம் தரித்து வரும் மணமகனும் மணமகளும், கிரேக்க பாரம்பரிய முறைப்படி, மூன்று தடவைகள், முடிகள், இவர்களிடமிருந்து கைமாறிக் கொள்கின்றன. புகழையும் மரியாதையையும் இந்த முடிகள் வெளிப்படுத்துகின்றன. வெள்ளி நாடாக்கள் இந்த முடிகளோடு சேர்ந்து கொள்கின்றன. இவை இந்த ஜோடி இணைவதை வெளிப்படுத்துகின்றன. திருமண நிகழ்வு முடியும் வரை, தம்பதியினர் முடிகளை அணிந்தபடிதான் இருப்பார்கள்.

ஆடையில் செருகப்படும் டாலர்கள்….

டாலர் டான்ஸ்

திருமண வரவேற்வுபசாரத்தின் உச்சக் கட்டத்தின்போது இடம்பெறுவதுதான் டாலர் டான்ஸ். .கைதவறி கீழே விழும் பணத்தை மரியாதையாகக் குனிந்தெடுத்து கண்களில் ஒற்றிக் கொள்பவர்கள் தமிழர்கள். இங்கே நடப்பதைப் பாருங்கள்..திருமண ஜோடி இணைந்து ஆட, விருந்தினர்கள் அவர்களை நோக்கி டாலர் தாள்களை வீசுவார்கள் சிலர் அவர்கள் உடையில் பணத் தாள்களை செருகியும் விடுவார்கள். எந்த விருந்தினருக்கும் இது ஒரு நிர்ப்பந்தம் இல்லை. விரும்பினால் செய்யலாம். அவ்வளவுதான். இப்பொழுது கொரானா தொற்று போல, இந்தக் கலாச்சாரம், கிரேக்க அமெரி்ககர்களால், அமெரிக்க தேசத்திற்கும் கொண்டு போகப்பட்டுள்ளதாம்.(அமெரிக்க வாழ் தமிழ் அன்பர்கள் இதை உறுதிப்படுத்தலாம்)

ஓர் ஆடம்பரமான திருமண விழாவின்போது…

திருமண வைபவம் முடிந்தபின்னர், மணமகன் தன் வீட்டு வாயில் கதவருகில், ஒரு மாதுளம்பழத்தை தரையில் போட்டு, அதை மிதிக்க சாறு எங்கும் பரவலாகச் செல்லும்.மாதுளம்பழ விதை நாலாபக்கமும் சிதறும். செல்வச் செழிப்பையும் கருவுறுதலையும் குறிக்கும் நிகழ்வு இது...மணமகள் மாமா வீட்டுக் கூரை மீது ஒரு இரும்புத் துண்டை எறிவதும் உண்டு. வீடு எவ்வளவு பலமானது என்று விருந்தாளிகள் கண்டுகொள்ளத்தான் இந்த நடவடிக்கை!

நடப்பது திருமணந்தான்… ஆனால் நடக்கிற நாடகங்கள் விசித்திரமானவை..

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...