‘சென்னை நகரின் இதயம்' என்று சொன்னால், மயிலாப்பூரைத் தான் சொல்ல வேண்டும். மயிலாப்பூருக்குத்தான் எத்தனை பெருமை?! 'மயிலையே கயிலை' என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?
வரலாற்று ரீதியாக மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்று சொல்லும்படி மயிலாப்பூரைச் சுற்றிலும் ஏழு சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் மயிலையின் காவல் தெய்வமாக கோலவிழி அம்மனும், முண்டகக்கண்ணி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். திருவள்ளுவர் பிறந்ததும்கூட மயிலாப்பூரில் தான் என்று சொல்லப்படுகிறது.
மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.
இப்படி பல மகத்துவங்கள் நிறைந்த மயிலாப்பூருக்கு அந்தப் பெயர் வந்த கதையும், அதன் பின்னணியில் இருக்கும், தொண்டர்களின் பெருமையை உணர்த்துவதான சம்பவமும் பற்றி தெரிந்துகொள்ளலாமே…
'திருத்தொண்டர்களின் பெருமை, இறைவனை விடவும் பெரிது' என்று அந்தச் சிவப் பரம்பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.
கயிலையில் ஒருநாள் சிவபெருமான், அன்னை உமையவளுக்கு வேதப் பொருளை விளக்கிக்கொண்டிருந்தார். அந்தவேளையில் அழகான மயில் ஒன்று, அன்னையின் எதிரில் வந்து தோகை விரித்து ஆடியது. அதன் ஆட்டம், ஜகன்மாதாவின் சிந்தையைச் சிதறச் செய்தது. மயூரத்தின் ஆட்டத்தில் லயித்துப்போனாள்.
சிவபிரான் சினம் கொண்டார். ‘‘தேவி, நான் வேதப்பொருள் பற்றி கூறுகையில் நீ மயிலின் ஆட்டத்தை ரசிக்கிறாயே’’ என்று கேட்கிறார். அதற்கு இறைவி, ‘‘மயில், நம் குழந்தை முருகனின் வாகனம் அல்லவா? முருகனுக்குத் தொண்டு செய்கிறது அல்லவா? அதைப் பார்த்ததுமே எனக்கு முருகனின் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் நான் மயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று கூறினாள்.
‘அப்படியானால் என்னை விடவும் அந்த மயில் உனக்கு உயர்வாகத் தெரிகிறதா?’ என்று ஈசன் கேட்டார்.
‘சுவாமி! தொண்டர்கள்தான் பெரியவர்கள் என்பது சத்தியம் அல்லவா? அப்படி முருகனுக்கு தொண்டு செய்யும் மயிலும் பெரிதுதானே’ இது இறைவியின் கேள்வி.
‘அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’
‘முடியும்!’
‘எப்போது?’
‘இதோ, இப்போதே’
உடனே அன்னை உமையவள், எந்த மயிலின் காரணமாக இந்த விவாதம் தொடங்கியதோ அந்த மயிலின் வடிவம் கொண்டு, நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் மயிலாப்பூர் தலத்தை அடைகிறாள்.
தேவி மயிலாக உலவிக் கொண்டிருக்கும் அந்த மயிலாப்பூரிலேயே இறைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல், ஈசனும் அங்கிருந்த புன்னைமரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளுகிறார்.
அவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்ய அங்கு யாரும் இல்லையே! தொண்டர்கள் இல்லாமல் ஈசன் தவித்திருப்பது கண்டு மயில் உருவம் கொண்டிருந்த அன்னை, அருகில் இருந்த பொய்கையில் நீராடி, தன் அலகினால் மலர்களையும் கனிகளையும் எடுத்து வந்து சிவலிங்கதுக்கு அர்ப்பணிக்கிறாள். அன்னையின் தொண்டில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்குத் தரிசனம் தந்தார். அன்னை சுய உருவம் ஏற்றாள்.
‘தேவி! தொண்டர்களின் பெருமையை உலகத்தவர் உணர்ந்திடவே நாம் இந்த நாடகத்தை நடத்தினோம். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். கருணையே வடிவானவள் அல்லவா இறைவி!
‘ஐயனே! தொண்டர்தம் பெருமையை உலகறியச் செய்ய தாங்கள் எழுந்தருளிய இத்தலத்திலேயே தங்கள் சாந்நித்யம் நிலைத்திருக்க வேண்டும்.’ என வேண்டினாள். அப்படியே வரம் தந்த சிவபெருமான் ‘தேவி! நீயும் இங்கே வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தரும் கற்பகமாக நிலைத்திருப்பாயாக’’ என அருளினார். இப்படி அம்மையும் அப்பனுமாய் இன்றைக்கும் மயிலையில் எழுந்தருளி, மனமுருக வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் அருள்புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
அம்பிகையின் மூலம் தொண்டர்களின் பெருமையை ஈசன் உணர்த்திய தலம் என்பதால் தான், மயிலை அறுபத்து மூவர் விழா தனிச்சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது.
தொண்டை நாட்டில் உள்ள 32 சிவத் தலங்களில் 24-வது தலம் திருமயிலை. இது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கே, சுமார் 8 கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னையின் அனைத்து இடங்களில் இருந்தும் திருமயிலைக்கு பேருந்து வசதிகள் உண்டு.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது. கிழக்கில் உள்ள கோபுரம் இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது.
ஒரு விசாலமான வெளிப்பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன.
மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிந்துள்ளனர். இராமபிரான், வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில், பிரமோற்சவம் நடத்துவித்தார். இது, வாயிலார் நாயனார் அவதாரம் செய்த தலம். இவர், தன் மனதையே கோயிலாக பாவித்து, அதற்குள் இறைவன் இருப்பதாக கருதி, எண்ணத்தையே தீபமாக ஏற்றி சுவாமியை வணங்கியவர். சிவன் இவரை நாயன்மார்களில் ஒருவராக்கி அருள்புரிந்தார். வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.
கற்பகாம்பாளை வணங்கிய பிறகே ஸ்ரீகபாலீஸ்வரரை தரிசிக்கச் செல்வது இங்குள்ள மரபு. ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதிக்கு இடப் புறம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீகற்பகாம்பாள் சந்நிதி. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று பூலோகவாசி களுக்கு வேண்டிய வரம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம். நின்ற திருக் கோலத்தில் அபய-வரத ஹஸ்தத்துடன் அழகே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். சந்நிதியின் தென் மேற்கில் பள்ளியறை உள்ளது.
வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங்களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.
அம்பாள் சந்நிதியை அடுத்து மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதி. கருவறையில் மேற்கு நோக்கிய லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார் ஸ்ரீகபாலீஸ்வரர். பிரம்மனின் ஒரு தலையைக் கொய்த சிவனார், பிரம்ம கபாலத்தை தன் கையில் ஏந்தி தரிசனம் தர, அவரை முப்பத்து முக்கோடி தேவர்களும் ‘கபாலீஸ்வரர்’ என அழைத்து வழிபட்டனராம். ‘ஊழிக் காலத்தில் அனைத்தும் தன்னிடத்தில் ஒடுங்க, உலகெல்லாம் உணர்ந்து ஓதுவதற்கு அரியவனான சிவபெருமான், கையில் கபாலம் (மண்டையோடு) தாங்கித் தனித்திருக்கிறார். இந்தக் கோலத்தில் ‘கபாலீசன்’ என்ற நாமம் கொண்டார்!’ என்றும் கூறுவர். இவரை புன்னை வனத்து ஈசன், வேத நகரினான், சுக்கிர புரியான், கபாலீச்சரத்தினான், பூம்பாவை ஈசன், புன்னை வன மயூரநாதன், கபாலி மாநகரான் என்றெல்லாம் போற்றுவர்.
மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் இந்த லிங்கப் பெருமானை சத்யோஜாத அம்சத்தினர் என்பர் (சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் மேற்கு நோக்கியது சத்யோஜாத திருமுகம்.) தன்னை வழி படுவோருக்கு உடனே காட்சி தந்து அருள் வழங்கும் ஈசன் இவர் என்கிறார்கள்.
பொதுவாக சிவாலயங்களில் அறுபத்து மூவருக்கு கல்லால் ஆன விக்கிரகஙகள் இருப்பதைக் காணலாம். ஆனால், அவர்களுக்கு ஐம்பொன்னாலான விக்கிரகங்களும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இருக்கின்றன.
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோரால் பாடப் பெற்ற அற்புதத் தலம் மயிலை. திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.
கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள்.
திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள்.
தவிர, திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும்.
‘வைத்தீஸ்வரன் கோவில்- விளக்கழகு; மாயூரம்- கோபுர அழகு; திருவாரூர்- தேர் அழகு...’ என்பர். அந்த வரிசையில், திருமயிலையின் அழகு அதன் மாட வீதிகள்! ‘மங்குல்மதி தவழும் மாட வீதி மயிலாப்பூரில்...’ என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார். திருமயிலை உலா எனும் நூல், ‘நீரும் மணி மாட வீதிகள்’, என்றும் ‘வானளக்கும் பொன் மாட வீதி’ என்றும் மயிலையின் மாட வீதி களைச் சிறப்பிக்கிறது.
ஏழு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச் சிறப்பு. ஏழு சிவன் கோயில்கள் (கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர்). ஏழு பெருமாள் கோயில்கள், ஏழு குளங்கள் (கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்) என்று இந்தப் பட்டியல் நீளுகிறது. இங்குள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் முறையாக தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்குமாம். அதனால் ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று பெயர் பெற்றது.
பேயாழ்வார், திருவள்ளுவர் மற்றும் வாயிலார் நாயனார் ஆகியோர் அவதரித்த தலம் இது. மயிலையில் வள்ளுவருக்கு தனிக்கோயில் ஒன்று உண்டு. உமையவள் உட்பட பல்வேறு தெய்வங்கள், தேவர்களால் வழிபடப்பட்டது திருமயிலை. சோமுகாசுரனால் கைப்பற்றப்பட்டு, திருமாலின் மச்ச அவதாரத்தால் மீட்கப்பட்ட வேதங்கள், தமது பெருமையையும் புனிதத்தையும் மீண்டும் பெற்றது திருமயிலையில்தான்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து ஆயுதம் கொடுத்தனுப்பினர். இவ்வாறு தன்னை வணங்கிய முருகப் பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன். அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழி பட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.
அதன்பின் முருகன், திருச்செந்தூரில் சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இதனால் மகிழ்ந்த இந்திரன், தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அப்போது அவனது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. இதன் அடிப்படையில் இங்கு வள்ளி, தெய்வானை இருவரும் யானை மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். முருகப்பெருமான், மேற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு.
அசுர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகன், மிகவும் அழகாக இருப்பதால் இவரை, சிங்காரவேலர் என்று அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரை வணங்கித் திருப்புகழ் பாடியிருக்கிறார்.
அரக்கர் பலரைக் கொன்றதால், ஸ்ரீராமனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இந்த தோஷம் நீங்க ஸ்ரீராமன், மயிலைக்கு வந்து கபாலீஸ்வரரை வழிபட்டு திருவிழா எடுத்தார். இன்னும் பல தேவர்களும் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்தத் தகவல்களை ஸ்ரீஅமிர்தலிங்கத் தம்பிரானின், ‘திருமயிலைத் தல புராணம்’ கூறுகிறது.
முற்காலத்தில் துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை. மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கி விட்டது என்கிறார்கள். புராதனமான கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘கடலக் கரை திரையருகே சூழ் மயிலைப்பதிதனில் உறைவோனே’ என்று குறிப்பிடுகிறார். எனவே அவர் காலத்திலும் (கி.பி.1540) கோயில் கடற்கரை அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். ‘பிற்காலத்தில், இந்தக் கோயில் போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களது கருத்து’ என்று குறிப்பிட்டுள்ளார் பம்மல் சம்பந்த முதலியார். 1923-ல் கோயிலின் எஞ்சிய பகுதிகள் சாந்தோம் கடற்கரையில் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது கோயில் இருக்கும் இடத்தில் முன்பு அருள் பாலித்தது ஸ்ரீசிங்காரவேலர் மட்டுமே என்கிறார்கள். இதற்குச் சான்றாக கபாலீஸ்வரரின் கருவறை விமானத்தை விட சிங்காரவேலரின் கருவறை விமானம் சற்றே உயரமாக இருப்பதைக் கூறுகின்றனர்.
கி.பி.1672- இல் பிரெஞ்சுக் காரர்களுக்கும், மூர் பிரிவைச் சேர்ந்த துருக்கியர்களுக்கும் நடந்த போரின்போது பிரெஞ்சுப் படையின் ஒரு பகுதியினர் இப்போதுள்ள கோயிலில் பதுங்கியிருந்தனர். நூற்றாண்டுகளுக்கு முன்பு மாட வீதிகளைச் சுற்றிச் சத்திரங்களும், மடங்களுமே இருந்தனவாம். குன்றக்குடி ஆதினம், குமாரதேவர் மடம் ஆகியவையும், சித்திரச் சத்திரம் (விநாயக முதலியார் சத்திரம்) ஆகியன இன்றும் உள்ளன.
தற்போதுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதைக் கட்டியவர், வள்ளல் நயினியப்ப முதலியாரின் மகன் முத்தியப்ப முதலியார். கபாலீச்சரம் சுமார் 80 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலத்துடன் 2,080 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்றாலே சட்டென நினைவிற்கு வருவது இங்குள்ள கபாலி தீர்த்தம் ஆகும். சிவன் சன்னதிக்கு எதிரே, கோயிலுக்கு வெளியில் அமைந்துள்ள இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. இதைக் கட்டியதும் முத்தியப்ப முதலியாரே. திருக்கோயிலுக்கு அருகே திருக்குளம் ஒன்றை அமைக்க விரும்பினார் முதலியார். இதற்கான நிலத்தை அப்போது இந்தப் பகுதியை (கலச மஹால்) ஆண்டு வந்த நவாப் ஒருவர், சில நிபந்தனைகளின் பேரில் அளித்தார். அவற்றை ஏற்றுக் கொண்ட முதலியார், மூன்றே நாட்களுக்குள் இந்தத் திருக்குளத்தை அமைத்தாராம். நவாபின் நிபந்தனைகள் இன்றும் அனுசரிக்கப்படுவதாக, எஸ். நடராஜன் என்பவர், ‘மயிலை கற்பகம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
திருக்குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபம் சிறப்பானது. குளத்தின் மேற்குக் கரையில், எட்டுக்கால் மண்டபம் அருகில் ஜ்யேஷ்டாதேவியின் சிலை உள்ளது. குளத்தின் வடமேற்கு மூலையில் ‘மூன்று கால்’ மண்டபமும், தென் கரையில் ‘ஞானப்பால்’ மண்டபமும் வடக்கில் சிவலிங்க மண்டபமும் உள்ளன. கிழக்கில் உள்ளது மாட்டுப் பொங்கல் அன்று அம்மன் நீராடும் இடமாகும். மேற்குக் கரையில் உள்ள சிறு மண்டபங்களில் அறுபத்துமூவர் விழாவன்று சம்பந்தருக்கும், சிவநேசருக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது.
இங்குள்ள கபாலி திருக்குளத்தில் நீராடி கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் தரிசித்தால் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து ஸ்ரீகற்பகாம்பாளையும் ஸ்ரீகபாலீஸ்வரரையும் தரிசித்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்! சாப விமோசனம் கிட்டும்.
இந்தக் குளத்தில் தைப்பூசத்தன்று நடைபெறும் தெப்போற்சவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். பங்குனி- பிரம்மோற்சவத்தின்போது, இந்தக் குளத்தின் மேற்குக் கரையில்- திருஞானசம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த வைபவமும், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகின்றன.
இந்த கபாலி தீர்த்தத்தில் மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. மீன்கள், கண்களாலேயே குஞ்சு மீன்களுக்கு உணவு தருவதைப்போல, இத்தலத்து அம்பிகை கற்பகாம்பாளும் தன்னை வேண்டுவோருக்கு பார்வையாலேயே அருள் செய்கிறாள். எனவே இங்கு மீன்கள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன் என்பவன், தனது பெரும் பாவங்கள் தீர இங்கு வந்து, பங்குனி உத்திரத்தன்று இந்தத் தீர்த்தத் தில் நீராடி, ஸ்ரீகபாலீஸ்வரரை தொழுது, முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது. ‘இந்தக் குளம் உட்பட மயிலையின் பிற தீர்த்தங்களிலும் நீராடினால், இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறலாம்!’ என்கிறது ‘தீர்த்தச் சருக்கம்’ எனும் நூல்.
பாபநாசம் சிவன், மார்கழி மாதத்தில் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் மாட வீதிகளில் பஜனை பாடி, கபாலீஸ்வரரின் மகிமையை தனது வாழ்நாள் வரை பரப்பினாராம். இவர், ஸ்ரீகபாலீஸ்வரர் மற்றும் ஸ்ரீகற்பகாம்பாள் மீது பல கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். அவற்றுள்- மோகன ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘காபாலி கருணை நிலவு பொழிவதன மதிய னொரு’ எனும் பல்லவியுடன் கூடிய கீர்த்தனை மற்றும் காம்போதி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘காணக் கண்கோடி வேண்டும். கபாலியின் பவனி’ எனத் துவங்கும் கீர்த்தனை ஆகியன பிரசித்திப் பெற்றவை ஆகும்.
இத்தலத்தில் புன்னை மரம் தல விருட்சமாக இருக்கிறது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் புன்னை மரம் தலவிருட்சமாக அமைந்தது. பிரகாரத்தில் உள்ள இம்மரத்தை ஒட்டி, சிவன் சன்னதி இருக்கிறது. இவரைப் “புன்னைவனநாதர்” என்றும், “ஆதிகபாலீஸ்வரர்” என்றும் அழைக்கிறார்கள். இவருக்கு பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தின்போது அம்பிகை இச்சன்னதிக்கு எழுந்தருள்கிறாள். அப்போது அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட வைபவமும், பின்பு நிச்சயதார்த்தம், திருக்கல்யாணம் மற்றும் அம்மி மிதித்தல் சடங்கு நடக்கிறது.
சிவபெருமான், உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூசத் திருநாளாகும். இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால், பிறப்பற்ற நிலை பெறலாம் என்பது ஐதீகம். இக்கோயிலில் தைப்பூசத்திருவிழா முற்காலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு,
“மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்“
என்று பாடியுள்ளார்.
தற்போது தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று இங்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. அப்போது கபாலீஸ்வரர், கற்பகாம்பிகை, சிங்காரவேலர் மூவரும் தெப்பக்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகின்றனர். அன்று கபாலீஸ்வரருக்கு விசேஷமாக தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது.
மயிலாப்பூர் முக்கிய திருவிழாக்கள்:
சித்திரை- சித்ரா பௌர்ணமி; வசந்த உற்சவம், வைகாசி - லட்ச தீபம்; விசாகம்; ஞானசம்பந்தர் விழா 10-ஆம் நாள்; ஆனி - 1008 சங்காபிஷேகம் (கும்பாபிஷேக திரு நட்சத்திரம்); பவித்ரோத்சவம்; ஆனித் திருமஞ்சனம், ஆடி - ஆடிவெள்ளி 5 வாரம்; பன்னிரு திருமுறை 12 நாள் விழா, ஆவணி - விநாயகர் சதுர்த்தி; லட்சார்ச்சனை, புரட்டாசி - நவராத்திரி விழா; நிறைமணிக் காட்சி, ஐப்பசி - கந்தர்சஷ்டி விழா 6 நாள்; சிங்காரவேலர் லட்சார்ச்சனை; ஐப்பசி திருவோணத்தன்று ஸ்ரீராமன், கபாலீஸ்வரரை வணங்கி வழிபட்டு அமுதூட்டிய ஐதீக விழா, கார்த்திகை - கார்த்திகை சோமவாரம்; சங்காபிஷேகம் 5 வாரம்; கார்த்திகை தீபம்; சுவாமி லட்சார்ச்சனை, மார்கழி - உஷத்கால பூஜை; திருவெம்பாவை 10 நாள் விழா; ஆருத்திரா தரிசனம், தை - அம்பாள் லட்சார்ச்சனை; தெப்பத் திருவிழா 3 நாள், மாசி - மகா சிவராத்திரி; மாசி மகம் கடலாட்டு விழா, பங்குனி- பிரம்மோற்சவம் 10 நாள்; விடையாற்றி 10 நாள்.
மயிலாப்பூர் பங்குனி உத்திரம் திருக்கல்யாண பெருவிழா!!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், 'பங்குனிப் பெருவிழா' ஆண்டுதோறும் சென்னை மாநகர மக்கள் அனைவரும் தவறாது பங்கேற்கும் மிகப்பெரும் திருவிழா. 'மயிலையே கயிலை' என வாழும் ஆன்மிகப் பெருமக்களுக்கு, அருளையும் ஆனந்தத்தையும் வாரிவழங்கும் ஆன்மிகத் திருக்கோயில் விழா. இங்கு குடிகொண்டிருக்கும் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் உலகைக் காக்கும் அம்மைஅப்பனாக, குறிப்பாக சென்னை மக்களின் கண்கண்ட கடவுளாக நாளும் காத்து வருகின்றனர்.
கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா 10 நாள் உற்சவமாக கொடியேற்றத்துடன் மிக விமரிசையாக தொடங்குகிறது.
மூன்றாம் நாள் ஞானம் அருளும் அதிகார நந்திப் பெருவிழா!
பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம் நாள் காலை நடைபெறும் இந்த அதிகாரநந்திக் காட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். 'அதிகார நந்தியின் சேவை' சரியாக காலை 6 மணிக்கு நடைபெறுகின்றது.
புள்ளினங்கள் பாடும் பூபாள வேளையில், வங்கக் கடற்கரையின் மென்காற்று வீச அதிகாரநந்தியின் மீதமர்ந்து அகிலத்தை ஆள வரும் சிவபெருமானின் திரு உலா காட்சியைக் 'காண கண்கோடி வேண்டு'மென அப்போதே பாடி விட்டார் அமரர் பாபநாசம் சிவன்.
அதிகாரநந்தி ஆலயத்துக்கு வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்டது.
இந்த நந்தி வாகனத்தை வழங்கியவர், த.செ.குமாரசாமி பக்தர் என்பவர். வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமம்தான் இவரது சொந்த ஊர். பாரம்பர்ய மருத்துவத்திலும் சித்த ஆயுர்வேத மருத்துவத்திலும் பதிவு பெற்ற ஏழாவது தலைமுறை வைத்தியராக திகழ்ந்தவர்.
வைத்தியத்தின் மூலம் தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வருமானத்தில், நான்கில் ஒரு பங்கை ஆலயத் திருப்பணிக்காக வழங்கினார். இதையொட்டி அதுநாள்வரை மர வாகனமாக இருந்த, இந்த வாகனத்தைக் கலையழகுடன் வெள்ளியில் வடிவமைத்து வழங்கினார். இதற்கான பணிகள் 1912 ஆண்டு தொடங்கப்பட்டு 1917ல் நிறைவு பெற்றன. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த இறைப்பணி நிறைவடைந்தது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணி.
இன்றளவும் குமாரசுவாமி பக்தரின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் உழவாரப் பணியாகக் கொண்டு இந்த நந்தி வாகனத்தை முறையாகப் பராமரிக்கின்றனர். சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி!
ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனப் பெருவிழா.
பங்குனி உத்திரம் ஐந்தாம் நாள் மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் கபாலீஸ்வரர். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. வெள்ளி ரிஷப வாகனத்தில் கபாலீஸ்வரர் தரிசனம் பார்க்க பார்க்க பரவச நிலையை அடைய செய்யும்!
ஏழாம் நாள் திருத்தேர் விழா.
பங்குனி உத்திரம் திருவிழாவின் ஏழாம் நாளில் முக்கிய நிகழ்வாக தேரோட்டத்தின் போது கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.
காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். முதலில் விநாயகர் தேர் புறப்படும். அதன் பிறகு கபாலீசுவரர் தேர் புறப்படும். இந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.
அதன் பிறகு கற்பகாம்பாள் தேர் வந்தது. இதை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். இதனையடுத்து சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் தேர் ஆகியவை வலம் வருகின்றனர்.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வந்தது. தேர் வலம் வந்த போது பக்தர்கள் கபாலி.. கபாலி என்று பக்தி கோஷம் முழங்க, சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வருகிறது.
எட்டாம் நாள் மிகவும் பிரசித்தி பெற்ற. அறுபத்து மூவர் திருவிழா:
மயிலையின் தல வரலாறே தொண்டர்தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்தியதன் காரணமாகத்தான், மயிலையில் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு பெறுகிறது.
திருமயிலையில் வாழ்ந்து வந்த வணிகர் சிவநேச செட்டியார், சிறந்த சிவபக்தர். இவரின் ஏழு வயது மகள் பூம்பாவை. ஒரு நாள் பூப்பறிக்கச் சென்ற பூம்பாவையை பூநாகம் ஒன்று தீண்டியது. அவள் இறந்தாள். பெரும் துயரத்துடன் பூம்பாவையின் உடலை தகனம் செய்த சிவநேசர், அவளின் எலும்பு மற்றும் சாம்பலை ஒரு குடத்தில் அடைத்து கன்னி மாடத்தில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் திருஞான சம்பந்தர் திருவொற்றியூருக்கு விஜயம் செய்தார். இதையறிந்த சிவநேசர் அங்கு சென்று, ஞானசம்பந்தரை வணங்கி அவரிடம், பூம்பாவைக்கு நிகழ்ந்ததை விவரித்தார். அவர் மேல் இரக்கம் கொண்ட சம்பந்தப் பெருமான் திருமயிலைக்கு வந்தார். ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கினார். பிறகு, பூம்பாவையின் சாம்பல் நிறைந்த குடத்தை எடுத்து வரச்செய்த ஞானசம்பந்தர்,
‘மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்...’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
மாண்ட பூம்பாவை உயிர்ப் பெற்று, 12 வயதுப் பெண்ணாக வெளி வந்தாள். இதைக் கண்டவர்கள் அதிசயித்தனர்.பெரிதும் மகிழ்ந்த சிவநேசர், தன் மகள் பூம்பாவையை மணந்துகொள்ளுமாறு திருஞான சம்பந்தரை வேண்டினார். ஆனால், சம்பந்த பெருமான் மறுத்து விட்டார்.அப்போது சம்பந்தருக்கு வயது 16. இதன் பிறகு நெடுநாள் வாழ்ந்த பூம்பாவை தொடர்ந்து சிவ வழிபாட்டில் திளைத்திருந்தாள். இறுதியில் சிவ தியானத்தில் இருந்த நிலையில் முக்தியடைந்தாள்.
பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. அன்று நடைபெறும் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது. அன்றைய தினம் மாலையில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு ஐந்திரு மேனிகள் விழாவும் நடைபெறுகிறது.
அறுபத்து மூவர் விழா அன்று சூலம் ஏந்தியவராக சிவபெருமான் பவனி வர அவருக்கு வலப் புறம் கற்பகாம்பாள், இடப் புறம் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசிங்காரவேலர் உடன் வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து பல்லக்குகளில் ஒருவர் பின் ஒருவராக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் (பல்லக்கு ஒன்றுக்கு நான்கு நாயன்மார் வீதம்) பவனி வருவது கண் கொள்ளாக் காட்சி. மயிலை- திருவள்ளுவர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் திருவள்ளுவர் உற்சவரும் இதில் கலந்து கொள்வது சிறப்பு!
இறைவனை (இன்னொரு விதமாகச் சொன்னால்- உண்மையான ஆனந்தத்தை, நிலையான அமைதியை) அடைய, ஜாதி-மத வேறுபாடுகள் தேவையே இல்லை என்பதை விளக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டு, அறுபத்துமூவரை தரிசிப்பது பெரும்புண்ணியம்.
அறுபத்துமூவர் பெருவிழா அன்று மயிலை முழுவதுமே விழாக் கோலமாக இருக்கும். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெருமளவில் குவிந்திருப்பார்கள். பக்தர்களுக்காக ஆங்காங்கே நீர்மோரும் பானகமும் வழங்குவார்கள்.
ஒன்பதாம் நாள் பிட்சாடனர் விழா!
கமல விமானத்தில் பிச்சாடனர் தரிசனமும் மோகினி எதிர்சேவையும் நேரில் காண மிக அற்புதமாக இருக்கும்!!
பத்தாம் திருநாள் திருக்கல்யாண மங்கல நிகழ்ச்சி!!
பத்தாம் நாள் மாலை கபாலீஸ்வரர் கற்பகாம்பிகை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பன்னிரண்டாவது மாதத்தில் பன்னிரண்டாவது நட்சத்திரமாக வரும் உத்திரம் நட்சத்திரம் மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனால் தான் தெய்வ திருமணங்கள் பங்குனி உத்திரம் கூடிய பௌர்ணமி நாளில் மிக விமரிசையாக நடைபெறுகிறது.
தெய்வத் திருமணங்கள் இந்தப் பூவுலகில் நிச்சயிக்கப்பட்டு, வானவர் புகழ, மானிடர் மகிழ நடந்தேறி ஆனந்தம் அளிப்பன…
பெற்றோர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் அன்னை கற்பகாம்பிகைக்கு, அவளது பிள்ளைகள் திருக்கல்யாணம் நடத்தி மகிழ்கிறார்கள்.. கற்பகாம்பிகை திருக்கல்யாணம்!
திருக்கல்யாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் சிவபெருமானுக்கே உரிய திருக்கயிலாய வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். இந்த சேவையை காண கண் கோடி வேண்டும்!!
மயிலையில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவில் வாழ்நாளில் ஒரு முறையாவது நேரில் கலந்து கொண்டு, அருள்மிகு கற்பகாம்பிகை உடன் உறை கபாலீஸ்வரர் அருளை அனைவரும் பரிபூரணமாக பெறுவோம்!!
No comments:
Post a Comment