Wednesday, November 13, 2024

அனைவருக்கும் சமர்ப்பணம்.

 இந்த பதிவு மிகவும் எளிதாக சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் தலைமேல் தாங்கும்.. கிறுக்குத் தனமான..புள்ளிங்கோ.. அனைவருக்கும் சமர்ப்பணம்.

நடுவுல ஒரு கோடு..

1947 இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் இருந்தே.. இரு நாடுகளுக்கிடையே தகராறு என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது..காஷ்மீரை தனது கட்டுப்பாட்டுக்குள் இந்தியா கொண்டு வந்தபிறகு.. ஐந்து முறை தொழுகையுடன்..எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை செயல்படுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு சோறு தொண்டைக்குள் இறங்காது.

1971 ல் நடந்த போருக்கு பின்..சிம்லா ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. தெற்கில் ' சங்கம் ' என்ற இடத்தில் இருந்து.. வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை ஒரு எல்லைக்கோடு ' பாயிண்ட் NJ9842' என்ற இடத்தில் முடிவடைந்தது.

இதன் பிறகு சீனா ஆக்கிரமித்த அக்ஷய்சின்.. வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்..இவற்றுக்கு நடுவில் ' சியாச்சின் ' பனிப்பாறை.. இந்தியப் பகுதியில் இருந்து மிகவும் உயரமாக செங்குத்தாக நீண்டு கிடக்கும். இந்த இடம் 1948 ல் உருவான கராச்சி ஒப்பந்தத்திலும், 1971 ல் உருவான சிம்லா ஒப்பந்தத்திலும் எல்லை என்று ஒன்றை வரையறுக்கப்படாமல் விடப்பட்டது. இதுவே பின்னர் இரு நாடுகளும் மோதிக் கொள்ளும் சூழலை உருவாக்கின.

ஊரான் வீட்டு நெய்..

ஏற்கனவே அபகரித்த பழக்கம்.. இந்த சியாச்சின் கிளேசியர் தனக்கு தான் என்று முடிவு செய்திருந்தது. அதாவது தானாகவே பாயிண்ட் NJ9842' ல் இருந்து கிழக்கே நேராக ஒரு கோடு போட்டு.. அதன் வட பகுதியான சியாச்சின் தனக்கு என்று நினைத்து கொண்டது.

பாகிஸ்தானின் பிறவி குணத்தை ..பட்டும்.. தெரிந்து கொள்ளவில்லை.. " ஹாங்..!! அவ்வளவு உயரம்…அதாவது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடி வரை உள்ள.. மைனஸ் 50 முதல் - 65°c வரை உறைபனியும், கடும் குளிரும் இருக்கும் இந்த இடம்.. யார் தான் ஆசைப்படுவார்? ?

சட்டப்படி இந்த பகுதியை தனதாக்குவதற்காக.. சியாச்சின் மலை ஏற்றத்திற்கு வெளிநாட்டு மலை ஏறும் குழுவினருக்கு அனுமதி வழங்கியது. 1970 களுக்குப் பிறகு, ஐரோப்பிய மற்றும் ஜப்பான், சீனா போன்ற மலையேறிகள் அனுமதி பெற்று ஏறினர். அதை பாகிஸ்தான் ஆவணப்படுத்திக் கொண்டது. அதோடு அமெரிக்காவும்.. பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்ததால்.. வரைபடத்தில் சியாச்சின் பகுதியை பாகிஸ்தான் என்றே வரையறுத்தது. பாகிஸ்தானும் அப்படியே.

இதெல்லாம் சியாச்சின் வடக்கில் நடந்து கொண்டிருந்த போது, தெற்கில் இருந்த இந்தியா..1971 பெற்ற வெற்றியில்..இனி மீண்டும் வாலாட்டாது என்று நினைத்திருந்தது. அதன் பார்வை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் மற்ற பகுதிகளில் இருந்தது.

இந்த சமயத்தில் இந்திய ராணுவ வீரர் கர்னல் நரேந்திர புல் குமார் என்பவர்.. மலையேறும் வீரரும் கூட. இவர் எதேச்சையாக பாகிஸ்தானின் இந்த மலையேற்றம் பற்றி கண்டறிந்து அரசுக்கு தெரிவித்தார்.

நடப்பது நடந்தே தீரும்..

இந்த நரேந்திர புல் குமார்.. ஒரு மலையேறும் வீரர்.ஒரு ஜெர்மன் ஆய்வாளருடன், லடாக்கில் சிந்து நதியை கடந்து சென்றனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பற்றிய விவரம் அறிய, ஜெர்மன் ஆய்வாளர் கையில் வைத்திருந்த வரைபடத்தை பார்த்தபோது.. கிழக்கு காரகோரத்தின் ( சியாச்சின் பனிப்பாறை உட்பட) ஒரு பெரிய பகுதியை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கார்டோகிராஃபிகலாக காண்பித்திருந்ததை கண்டு ஆத்திரமடைந்தார். அந்த வரைபடத்தை வாங்கி நேராக ராணுவ நடவடிக்கை தலைமைக்கு அனுப்பினார். ஏதோ தவறு நடக்கிறது என்று தலையில் மணி அடிக்க, வரைபடத்தை சரி செய்யும் நோக்கில் தான் தலைமையேற்று நடத்தும் மலை ஏறும் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி என்ற பெயரில், அவர்களையும் பெயரிடப்படாத அந்த பகுதிக்கு சென்றார்.

இரண்டு டிரில்லியன் கன அடி பனிக்கட்டிகள் கொண்ட பூமியின் மிகப்பெரிய ஆல்பைன் பனிப்பாறையான சியாச்சினுக்கு அது முதல் இந்திய பயணம். சரியான வரை படம் கிடையாது. புதிய பகுதி.. கடுமையான குளிர்.. இப்போது போல அக்காலத்தில் தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்கள் கைகளில் இல்லை. இருந்தும் ஆங்கிலேயர் களால் பல தசாப்தங்களுக்கு முன் பெயரிடப்பட்ட முகடுகளையும், சிகரங்களையும் பற்றிய தோராயமான யோசனை மட்டுமே அவர்களிடம் இருந்தது.

ஆனால் இவர்கள் பயணம் பற்றிய செய்தி விரைவில் கசிந்தது. . கர்னல் குமாரின் குழு சியாச்சின் பனி பிரதேசத்தை அடையும் நேரத்தில் பாகிஸ்தான் விமானங்கள் அவர்கள் மீது வண்ணப் புகைகளை வீச ஆரம்பித்தன. அதோடு பாகிஸ்தானிய சிகரெட்டுகள், உணவு கேன்கள், மற்றும் மலை ஏறும் கியர்கள்.. குப்பைகள் பாகிஸ்தானின் திருட்டுத்தனத்தை அப்பட்டமாக காட்டியது. பறக்கும் விமானங்கள், குப்பைகளை படம் பிடித்து..அக்குழு திரும்பியது.

இதன் பிறகும் இந்திய ராணுவ தலைமையை நம்ப வைக்க..பல பயணங்களை மேற்கொண்டார்.. இருப்பிடங்கள்..வழிகள்.. சூழல் போன்றவற்றை குறிப்பெடுத்து ஆதாரத்துடன் அனுப்பி வைத்தார்.

அண்டார்டிகாவில் ஒரு வீடு..

இந்த தகவல் கிடைத்ததும் 1978 ல் இந்தியாவும் சியாச்சின் மலையேற்றத்திற்கு அனுமதி அளித்தது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே.. அதன் உள் நோக்கம் புரிந்தது.

அப்போது ஆட்சியில் இருந்தவர் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அம்மையார். பார்த்தார் இதை இப்படியே விட்டு விட்டால்.. இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நேரும் என்று கணித்தார். தந்திரமாக இதை மீட்க வேண்டும். மிகவும் உயரமான அந்த பனிப் பாறை பாகிஸ்தான் கைகளில் இருப்பது.. அதன் கண்களுக்கு நேராக இந்திய பகுதிகள் வந்து விடும்.. அதோடு சீனாவுக்கும் பாகிஸ்தானிடம் சியாச்சின் இருந்தால்..அக்சய்சின்..பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்..அதன் வழியாக பாகிஸ்தானின் உள்ளே என நுழைந்து, தனது பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திற்கு வசதியாக இருக்கும்..

தக்ஷின் கங்கோத்ரி..

மிகச்சிறந்த மலையேறும் ராணுவ வீரர்களை இந்திரா காந்தி அம்மையார்.. சியாச்சின் பகுதியில் நிலவும் கடுமையான குளிர்.. சூழல் அண்டார்டிகா வில் உண்டு. எனவே ஆராய்ச்சி என்ற பெயரில் ஒரு இடத்தை அங்கே அமைத்து, அதற்கு தக்ஷின் கங்கோத்ரி என்று பெயர் வைத்து.. 1982 ல் அங்கே அந்த வீரர்கள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கே பயிற்சி செய்தால் போதும். சியாச்சினில் பயிற்சி பெறுவதற்கு சமம்.

காதுக்குள் நுழைந்த ஊசி..

இந்திய ராணுவம் அண்டார்டிகாவில் பயிற்சி பெறும் விஷயம்.. பாகிஸ்தான் காதுகளை உரசிச் சென்றதும் பதட்டமடைந்தது. இந்திரா அம்மையார் பற்றி பாகிஸ்தானுக்கு தெரியும் அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது.

உடனடியாக சியாச்சின் உச்சியில் தங்களது இருப்பை உறுதி செய்ய வேண்டும். உடனடியாக இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு.. பனி பாதுகாப்பு உடைகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. விஷயம் இந்தியாவின் காதிலும் வேகமாக நுழைந்தது. (உபயம் அதே நிறுவனம்.) காரணம் அதே நிறுவனத்தில் வாங்கிய உடைகளை அணிந்து தான்.. அண்டார்டிகாவில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர் இந்திய வீரர்கள்.

அடுத்து பாகிஸ்தான் சியாச்சின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தேர்வு செய்யப்பட்ட தினம் 1984 ஏப்ரல் 14.. ஆபரேஷன் அபாபீல். ' ' ரா' அளவறிந்து கூறியது. எனில் அதற்கு முன்பே இந்திய ராணுவம் அந்த இடத்தை கைப்பற்ற வேண்டும்.. கவனமாக திட்டமிடப்பட்டு அதற்கு ஆபரேஷன் மேக்தூத் என பெயரிடப்பட்டது.

பொட்டேல்னு‌ ஒரு போடு..

ஆபரேஷன் மேக்தூத்..

லெப்.ஜெனரல் பிரேம் நாத் ஹூனே தலைமையில் பயிற்சி பெற்ற வீரர்கள் புறப்பட்டனர். இந்திய விமானப்படை விமானம் அவர்களை ஏற்றிக் கொண்டு.. சியாச்சின் பேஸ் கேம்ப் சென்றது. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் , அவர்களை குறிப்பிட்ட இடங்களில் இறக்குவது மிகவும் சவாலான ஆபத்து நிறைந்ததாக இருந்தது. ஆனால் அது நடத்தி காட்டப்பட்டது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் காற்று, கண்களுக்கு தெளிவில்லாத பனி நிறைந்த பகுதிகள். கர்னல் நரேந்திர புல் குமாரின்..வரை படங்கள்.. அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

சால்டோரா மலையை ஆக்கிரமிக்கும் பணி பிரிகேடியர் விஜய் சன்னா வுக்கு வழங்கப்பட்டது. ஏப்ரல் 14.. பாகிஸ்தான் தெரிவு செய்த நாள். ஏப்ரல் 13 .. அன்று பைசாகி தினம். எனவே இந்திய ராணுவம் எந்த வித ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என்று அவர்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்தனர்.

பல நாட்கள் நடந்தே…

லெப்.கர்னல் டி கே கன்னா தலைமையில் ஒரு குழு.. பாகிஸ்தான் ரேடாரில் சிக்காமல் இருக்க, பல நாட்கள் கடும் பனிப்பொழிவு, ஊசி போல குத்தும் காற்று.. அனைத்தையும் தாங்கிக் கொண்டு, சோஜிலா கணவாய் வழியாக நடந்தே சென்று..சால்டோரோ ரிட்ஜின் கியோ லா வைக் கைப்பற்றினர்.

கேப்டன் சஞ்சய் குல்கர்னி தலைமையில் ஒரு குழு , சேட்டக் ஹெலிகாப்டர்.. சியாச்சின் பகுதியில் உயரமான இடத்தில் இறங்க வேண்டும். ஆனால் அங்கு காற்று அதிக வேகத்தில் வீசிக் கொண்டிருந்தது. அலை பாய்ந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை தரையில் இறக்க இயலவில்லை. புதிய பகுதி. கீழே பல அடிகளுக்கு படிந்திருக்கும் பனிக்கட்டிகள். அவை இலகுவாக இருக்குமா? அல்லது இறங்கி நிற்கும் அளவுக்கு வலிமையானதா? தெரியாது. முதலில் குல்கர்னி மற்றும் அவருடன் வந்த ரேடியோ ஆபரேட்டர் முதலில் கயிற்றில் இறங்கி.. ஓரளவு பாதுகாப்பை உறுதி செய்தபின்.. மற்றவர்கள் இறங்கினர்.

அவர்களது பணி அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிலாஃபோன்ட் லா வை கைப்பற்ற வேண்டும். கழுத்து வரை பனி..நகர முடியாது. மறுநாள் 500 மீட்டர் நகர்ந்த பின், அவர்களுடன் வந்த ஒரு வீரர்.. வாயில் நுரை தள்ளி மரணம். மனம் ரணமான நிலையிலும்.. மேற்கொண்டு நகர்ந்து ஏப்ரல் மாதம் 12 ம் நாள்..அப்பகுதி கைப்பற்றப்பட்டது.

கேப்டன் பி வி யாதவ் தலைமையிலான குழு மேலும் நகர்ந்து சால்டோரோ ரிட்ஜின் எஞ்சிய பகுதிகளை நான்கு நாட்கள் கடும் முயற்சிக்குப் பிறகு கைப்பற்றி நிலை கொண்டது. இறுதியில் ஏப்ரல் 13 ல் சுமார் 300 துருப்புக்கள் சால்டோரா ரிட்ஜின் முக்கிய சிகரங்கள், கணவாய்களில் ( சியாமா, பிலாஃபோன்ட் லா மற்றும் கியோங் லா ) அமர்ந்து பங்காளிக்காக காத்திருந்தனர். 14 ம் தேதி.. ரிட்ஜின் மறு பக்கத்தில் இருந்து வந்த பாகிஸ்தான் வீரர்கள்..இந்திய துருப்புக்கள் ஏற்கனவே அங்கு நிலை கொண்டிருந்ததை பார்த்து ஏமாந்து போயினர்.

வழுக்கையும் சீப்பும்..

உலகின் உயரமான ராணுவ தளம் இந்தியாவின் கைகளில்.. ஒரு உயரமான கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து அனைத்தையும் கண்காணிப்பது போல இந்தியாவின் கண்காணிப்புக்குள் பாகிஸ்தான் வந்தது.. பாகிஸ்தானுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த இடம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள், தகராறுகள் வந்து கொண்டே இருந்தன. சுமார் 22 முதல் 25 ஆயிரம் அடி வரை 72 கி.மீ நீளமான இந்த சாலடோரா ரிட்ஜில் சுமார் 70 கி.மீ நீளமுள்ள அனைத்து பகுதிகளும் இப்போது இந்தியாவிடம். அதன் மேற்கில் 9000 முதல் 15 ஆயிரம் அடி வரை உள்ள பகுதிகளில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம். இந்திய ராணுவத்தின் நிலைகளில் இருந்து அதிகபட்சமாக 3000 அடி கீழேயே அவர்கள் நிலைகள் இருந்தன.

சாதரணமாக மைனஸ் 50 டிகிரி குளிர் நிலவும் இந்த பகுதியில்.. மனிதர்கள் யாரும் வசிக்க இயலாது. ஒரு சில நொடிகளில் புதைந்து போகும் அபாயம். அங்கு செல்வது தற்கொலைக்கு சமம். குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். அதற்காக தனிப்பட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் தேவைப்படும். அடுத்து அந்த குளிரில் துப்பாக்கிகள் செயல் இழந்து போகும். கை கால்கள் மரத்துப் போகும். அங்கே உயிரிழப்பவர்களில் 98% பேர் அங்கு நிலவும் கொடுமையான சூழலால் இறந்து போகிறார்கள். இரு நாடுகளும் இந்த பகுதியில் பல கோடி செலவில் பாதுகாப்பான ராணுவ நிலைகளை உருவாக்கியுள்ளன.

பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த பகுதிக்கு வருவது மிகவும் எளிது. ஆனால் இந்திய பகுதியில் இருந்து அங்கு ஆகாய மார்க்கமாக மட்டுமே செல்ல முடியும். அங்கிருந்து டெல்லி தலைமையகத்திற்கு நேரடி ஹாட் லைன் தொடர்பு உள்ளது. ஒரு வீரருக்கு ஆபத்து என்றாலும்.. உடனடியாக விமானப்படை நடவடிக்கை எடுக்கும்..ஒன்றுமே இல்லாத ஒரு பகுதிக்கான இரண்டு நாடுகளும் சண்டையிட்டு கொள்வதை கிண்டலாக தெற்காசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் கோஹன் " இரண்டு வழுக்கை மனிதர்கள் ஒரு சீப்புக்காக சண்டையிட்டு கொள்கிறார்கள்" என்றார்.

ஆம்.. என்று தான் தோன்றும். இதன் முக்கியத்துவம் பற்றி இறுதியில் பார்க்கலாம். தாங்க முடியாத செலவினம். அதிகப்படியான வீரர்கள் மரணம். அதாவது பாகிஸ்தான் தரப்பில் நான்கு நாட்களுக்கு ஒருவர் மரணம் என்றால், இந்திய தரப்பில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் மரணம்.

ஆனாலும் இந்திய ராணுவம் கண்ணும் கருத்துமாக தங்கள் உயிரைக் கொடுத்து.. நம் எல்லைகளை காத்து நிற்கும் எல்லைச் சாதிகளை நாம் மறந்து போவது காலத்தின் அவலமான..அவமானகரமான ஒன்று தான்..

நாம் நிம்மதியாக உறங்க.. தங்களது உறக்கத்தை தொலைத்து, நம் உயிரை காக்க தங்கள் உயிரை பணயம் வைத்து.. வாழ வேண்டிய இளம் வயதில் மறைந்து போவதை அறியாமல் மறந்து போகிறோம்.,( அனைவரின் வயதும் 20 முதல் 30.. அதிகபட்சம் 35)

நாம் அறியாத நம் எல்லைப் சாமிகளுக்கு வீர வணக்கம்..🇮🇳

இதன் நீட்சி அடுத்த பதிவில்..

நன்றி 🙏

No comments:

Post a Comment

KING MAKER !

  ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி ! KING MAKER ! இது தான் பெருந்தலைவரின் பட்டம் ! பழைய காங்கிரஸ் கட...