விண்வெளிக்குப் போன முதல் இந்தியர் யார்னு கேட்டா, எல்லாருமே ராகேஷ் ஷர்மானு சொல்லுவோம். பள்ளிப் பாடப்புத்தகத்துல அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்ல இதுவும் ஒன்னு. இதுக்கு முன்ன இந்திய பின்புலத்தைக் கொண்டவங்க விண்வெளிக்குப் போயிருக்காங்க, ஆனா இந்தியால பிறந்த இந்தியக் குடியுரிமை கொண்ட ஒருத்தர் விண்வெளிக்குப் போனதுனா அது ராகேஷ் ஷர்மா தான்.
முதல் முதல்ல இவர் விண்வெளிக்குப் போனார்னு நம்ம எல்லாருக்கும் தெரியும், ஆனா எப்படி போனார், விண்வெளில என்ன பண்ணார்னு எதுவும் நமக்கு தெரியாது. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்!
1949, ஜனவரி 13-ஆம் தேதி பட்டியாலால பிறக்குறாரு ராகேஷ் ஷர்மா. பட்டியாலால பிறந்தாலும், அவர் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்கையெல்லாம் ஹைதராபாத்துல தான். அங்க இருக்க நிஜாம் கல்லூரியில தான் தன்னோட பட்டப்படிப்பை முடிச்சாரு ராகேஷ் ஷர்மா. 1966-ல நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில, ஏர் ஃபோர்ஸ்ல சேர்றாரு ராகேஷ். அடுத்த நான்கு வருடங்கள்ல 1970 ஆண்டு இந்தியன் ஏர் ஃபோர்ஸ் சோதனை பைலட்டா தேர்வாறாரு ராகேஷ்.
1971-ல நடந்த பங்களாதேஷ் போர்லயும் MIG-21 போர் விமானத்தோட பைலட்டா போர்லயும் ஈடுபடுறாரு. 1982-ல தான் இந்தியா மற்றும் ரஷ்யா இணைஞ்சு செயல்படுத்துன விண்வெளித் திட்டத்துக்கு தேர்வாகுறாரு ராகேஷ் ஷர்மா. அந்த விண்வெளித் திட்டத்துக்கு தேர்வாகுறதுக்கு பல பேர் கூட ராகேஷ் போட்டியிட வேண்டி இருந்துச்சு. அந்தத் திட்டதுக்குப் போட்டியிட்ட எல்லாரையும் கடந்து கடைசியில் ராகேஷ் ஷர்மா மற்றும் ரவிஷ் மல்கோத்ரா ஆகிய இருவர் மட்டும் தான் கடைசி கட்டத்துக்கு தேர்வாகுறாங்க. ரெண்டு பேருமே இந்தியன் ஏர் ஃபோர்ஸ் பைலட்டுகள் தான்.
கடைசி கட்டத்துக்கு தேர்வான ரெண்டு பேருக்குமே மாஸ்கோல இருக்கிற யூரி ககரின் காஸ்மோனாட் ட்ரெயினிங் சென்டர்ல விண்வெளிப் பயிற்சிகள் கொடுக்கப்படுது. விண்வெளிப் பயிற்சிகள் சாதாரனமானது இல்லை. அதுக்கு உடல் திடத்தோட மனதிடமும் ரொம்ப ரொம்ப முக்கியம். தங்களுக்கு கிளாஸ்ட்ராபோபியா இருக்கானு தெரிஞ்சுக்க ரெண்டு பேரும் பெங்களூர்ல இருக்க இந்தியன் ஏர் ஃபோர்ஸ் தளத்துல் ஒரு அறை கிட்டத்தட்ட 72 மணி நேரம் பூட்டிகிட்டு இருந்துருக்காங்க. கிளாஸ்ட்ராபோபியா அப்படிங்கிறது, பூட்டப்பட்ட இடத்துல இருந்தா வர்ற பயம். இப்படி பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் போறதுக்கு தேர்வாகுறாரு. ரவிஷ் மல்கோத்ராவ மாற்று வீரரா வச்சிருந்தாங்க.
ஏப்ரல் 2, 1984-ல ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்களோட மூன்றாவது வீரரா ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் போறரு. விண்வெளிக்குப் போற முதல் இந்தியர்கிற பெருமை ராகேஷ்க்கு கிடைக்குது.
Soyuz T-11 அப்படிங்கிற ராக்கெட்டுல ரஷ்யாவோட பைக்கோனுர் ஏவுதளத்துல் இருந்து விண்வெளிக்குப் போறாங்க இந்த மூன்று விண்வெளி வீரர்களும். அங்க இருக்க Salyut 7 ஆர்பிட்டல் ஸ்டேஷன்ல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்றாங்க. கிட்டத்தட்ட 7 நாட்கள், 21 மணிநேரம், 40 நிமிடம் இந்த விண்வெளி மையத்துல கழிக்கிறாங்க.
விண்வெளியில இருந்தபடியே மாஸ்கோல இருக்க அதிகாரிகள் கூடவும், இந்திய பிரதமர் இந்திரா காந்தி கூடவும் நியூஸ் காண்பரன்ஸ்ல இணையுராங்க அந்த விண்வெளி வீரர்கள். அப்போ இந்திர காந்தி ராகேஷ் ஷர்மா கிட்ட, "விண்வெளியில இருந்து பார்க்க இந்தியா எப்படி இருக்கு?" அப்படின்னு கேக்குறாங்க. அதுக்கு ராகேஷ், "உலகத்துலேய ரொம்ப அழகா இருக்கு" அப்படின்னு ஹிந்தியில பதில் சொல்றாரு. இந்தப் பயணத்தின் மூலமா, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புன நாடுகளோட வரிசையில 14-வது நாடா இந்தியா இணைஞ்சது. அதன் பிறகு ஏப்ரல் 11-ஆம் தேதி பூமிக்கு திரும்புறாங்க அந்த மூன்று விண்வெளி வீரர்களும்.
1987-ல இந்தியன் ஏர் ஃபோர்ஸ்ல இருந்து விங் கமாண்டரா ஓய்வு பெற்றாரு ராகேஷ் ஷர்மா. ஓய்வு பெற்ற பிறகு தலைமை சோதனை பைலட்டா ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட்ல இணையுறாரு ராகேஷ். விண்வெளியில இருந்து திரும்புனதுக்கு அப்புறம் ரஷ்யாவோட 'Hero of the Soviet Union' விருதும், இந்தியாவோட 'அசோக சக்ரா' விருதும் ராகேஷ்க்கு கொடுக்கப்படுது.
ராகேஷ்க்கு மட்டுமில்லாம, அவரோட விண்வெளி பயணம் செஞ்ச மற்ற இரண்டு ரஷ்ய வீரர்களுக்கும் அசோக சக்ரா விருதைக் கொடுத்து கவுரவிக்குது இந்திய அரசு. இன்னைக்கு வரைக்கும் ரஷ்யாவோட Hero of the Soviet Union விருதைப் பெற்ற ஒரே இந்தியரா ராகேஷ் ஷர்மா தான் இருக்காரு.
No comments:
Post a Comment