இத்தாலிய ஆயுத முகவர் ஒட்டாவியா குவட்ரோச்சிக்கும் காந்தி குடும்பத்திற்குமிடையே இருந்த உறவு எத்தகையது?
ஈழத்தமிழர் ஒருவரால் ராஜீவ் காந்தியெனும் முன்னாள் இந்தியப் பிரதமர் கொல்லப்பட்டார் என்று குற்றம்சாட்டி, சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு அவரது மனைவி சோனியாவும் காங்கிரஸ் கட்சியும் ஈழத்தமிழர்களைப் பழிவாங்கியது எமக்குத் தெரியும். ஆனால், நவீன இந்தியாவின் நட்சத்திரப் பிரதமர் என்று காங்கிரஸ் ஆதரவாளர்களால் கொண்டாடப்படும் ராஜீவ் காந்தியெனும் மனிதரின் உண்மையான குணாதிசயங்கள் பற்றி இவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சில விடயங்களை எழுதலாம் என்று எண்ணுகிறேன். அதாவது, நீங்கள் நினைத்து, போற்றி, இதுவரை காலமும் புகழ்ந்துவரும் ராஜீவ் காந்தியெனும் மனிதரின் இன்னொருபக்கம் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டும் எனும் நோக்கத்திலேயே இதனை எழுதுகிறேன்.
நான் இங்கு சொல்ல விளைவபவை பற்றி நீங்கள் முன்னரே அறிந்திருக்கலாம். சிலவேளை அவை உண்மையில்லை என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லியிருக்கலாம். அல்லது, இவையெல்லாம் நடந்தபின்பும் நான் காங்கிரஸ் ஆதரவாளன், ஆகவே இவைபற்றிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று கண்களை மூடிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாம் இந்த மனிதரால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இன்றுவரை அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். ஆகவே எமது வாழ்க்கையை அறுத்துப்போட்ட இவர் பற்றி நாம் பேசவேண்டும். அதனாலேயே இவர்பற்றி எழுதவேண்டிய தேவை எமக்கிருக்கிறது. ஒருக்கால், உங்களின் எமது போராட்டம் தொடர்பான பார்வை மாறினால், அல்லது எமக்கிழைக்கப்பட்ட அநீதிகள் புரிந்தால், அதுவே போதும் என்கிற எண்ணத்தோடு எழுதுகிறேன்.
ஒட்டாவியா குவட்ரோச்சிக்கும் காந்தி குடும்பத்திற்குமிடையிலான தொடர்பு
குவட்ரோச்சி தம்பதி
இத்தாலியில் 1938 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பிரபல வர்த்தகர், 2009 இல் இறக்கும்வரைக்கும் போர்போர்ஸ் பீரங்கி ஊழலில் இடைத்தரகராகப் பணியாற்றி பலகோடிகள் லஞ்சப்பணம் கைமாறுவதற்கு ஒழுங்குகள் செய்திருந்தவர் என்பதற்காகக் இந்தியாவில் தேடப்பட்டு வந்தவர். இவ்வாறான பிரபல சர்வதேச ஆயுத முகவருக்கும் இந்தியாவின் அன்றையப் பிரதமர் ராஜீவ காந்திக்குமான நெருக்கம், ராஜீவின் இத்தாலிய மனைவி சோனியாவினூடாகவே ஏற்பட்டதாக இவ்விசாரணைகளில் பங்குகொண்ட அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சோனியாவும் நண்பர் குவட்ரோச்சியும்
இந்த மூவருக்குமிடையே இருந்த நெருக்கமே காங்கிரஸ் கட்சி 1989 தேர்தல்களில் படுதோல்வியடைந்ததற்குக் காரணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. 1999 இல் இவ்வழக்கினை விசாரணை செய்த மத்திய புலநாய்வுப்பிரிவு தான் தாக்கல்செய்த குற்றப்பத்திரிக்கையில் குவட்ரோச்சியே இந்த ஊழலில் தரகராகச் எயற்பட்டுள்ளதாகக் குற்றம்ஞ்சாட்டியிருக்கிறது. 2003 இல் இன்டர்போல் வெளியிட்ட குவட்ரோச்சி மற்றும் அவரது மனைவி மரியா ஆகியோரது இரு வங்கிக் கணக்குகள் தொடர்பான விபரத்தோடு மீண்டும் இவ்வழக்கு உத்வேகம் பெற்றது. சுமார் நான்கு மில்லியன் டாலர்களை வங்கியில் வைப்பிலிட்டிருந்ததோடு, இப்பணம் "சேவைக்கான வருவாய்" என்னும் பெயருடன் வைப்பிலிடப்பட்டிருந்தது. இவ்விடயங்கள், இந்திய உளவுத்துறையின் கட்டளையினையும் மீறி தற்செயலாக சட்ட அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டதிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது.
2007 ஆம் குவட்ரோச்சி இன்டர்போலின் பிடிவிராந்திற்கு அமைவாக ஆர்ஜென்டீனாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். இவரை இந்தியாவிற்குக் கொண்டுவந்து சரியான விசாரணைகளைச் செய்வதை இந்திய புலநாய்வுத்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, அரைகுறையாக வேலை செய்து, இறுதியில் இந்தியாவிற்கு இவரைக் கொண்டுவரும் வாய்ப்பினை வேண்டுமென்றே நழுவ விட்டதாகப் பலராலும் இந்திய உளவுத்துறை விமர்சிக்கப்பட்டது. இவரை இறுதிக்கட்டத்தில் இந்தியாவிற்கு நாடுகடத்தும் வழக்கினை விசாரித்த நீதிபதி, "இந்தியர்கள் இவ்வழக்கிற்குத்தேவையான எந்தவித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால், அவர்களது நாடுகடத்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது" என்று தீர்ப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், குவட்ரோச்சியின் வழக்கிற்குச் செலவான பணத்தினை இந்திய அரசே செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தார்.
குவட்ரொச்சியின் மகனும் முதலீட்டாளருமான மஸ்ஸிமோ குவட்ரோச்சி சோனியா காந்தியின் பிள்ளைகளான ராகுல் மற்றும் பிரியங்காவுடனேயே வளர்ந்திருந்தார் என்பதும், லக்ஸம்பேர்க் நாட்டின் பிரபல முதலீட்டாளர்களான கிளபின்வெஸ்ட் எனும் நிறுவனத்தினை இந்தியாவில் வியாபார முயற்சிகளில் ஈடுபடும்படி மஸ்ஸிமோ அறிவுருத்திவந்தார் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர் தொடர்ச்சியாக இந்தியாவுக்கான பயணங்களை மேற்கொண்டு வந்ததோடு, பெங்களூரில் தனக்கான அலுவலகம் ஒன்றினையும் நிறுவி நடாத்தி வந்தார். 2007 இல் இவரது தந்தை ஆர்ஜென்டீனாவில் கைதுசெசெய்யப்பட்ட தறுவாயில் இவர் இந்தியாவில் தங்கியிருந்ததுடன், பிரியங்கா வர்தாவுடன் (சோனியாவின் மகள்) தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது.
குவட்ரொச்சியின் வாழ்க்கை
இவர் சிசிலி நாட்டின் கடனியா மாகாணத்தின் மஸ்கலி எனும் ஊரில் 1938 இல் பிறந்தவர். இத்தாலிய எண்ணெய் நிறுவனமான "எனி" எனும் நிறுவனத்தின் இயந்திரவியல் பிரிவின் பிரதிநிதியாக 1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர். முன்னால் இந்திய காங்கிரஸ் தலைவியான சோனியாவின் நெருங்கிய நண்பர் ஆகிய குவட்ரோச்சி காந்தி குடும்பத்துடன் மிக சிறிய காலத்திலேயே நெருக்கமாகிவிட்டார் என்று இவ்வழக்கில் பணியாற்றிய நீதிபதி பிறேம் குமார் 2002 நவம்பர் மாதம் பதிவுசெய்திருக்கிறார்.
1974 ஆம் ஆண்டு, இன்னொரு இத்தாலியரான மொலினாரி என்பவரால் குவட்ரோச்சி ராஜீவ் காந்திக்கும் சோனியா காந்திக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டிருக்கிறார். அன்றிலிருந்து தொடர்ச்சியாக குவட்ரோச்சி தம்பதியினர் ராஜீவ் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவினைப் பேணிவரத் தொடங்கினர். இருகுடும்பங்களினதும் பிள்ளைகளும் மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்தனர். ராஜீவ் காந்தி அன்று இந்திய ஏர்லையின்ஸ் நிறுவனத்தில் விமான ஓட்டுனராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். இவ்விரு குடும்பங்களிடையேயும் பெறுமதியான இத்தாலிய அன்பளிப்புகள் கைமாறப்பட்டு வந்தன. சிறிது காலத்திலேயே குவட்ரோச்சி காந்தி தம்பதிகளுக்கு மிக நெருக்கமானவராக மாறிவிட்டிருந்தார். இரு குடும்பங்களினதும் பிள்ளைகள் மிக நெருக்கமாக உறவாடத் தொடங்கியிருந்ததனால், பிரதமர் அலுவலகத்தில் மிகச் செல்வாக்குக் கொண்ட ஒருவராக குவட்ரோச்சி மாறியிருந்தார். பயனியர் எனும் இதழில் அஷோக் மலீக் எனும் கட்டுரையாளர் எழுதும்பொழுது, "காங்கிரஸ் அரசியல்வாதிகள் குவட்ரோச்சியோடு சேர்ந்து நிற்பதே பாக்கியமாகக் கருதினர்" என்று கூறுமளவிற்கு அவரின் செல்வாக்கு இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் வளர்ந்திருந்தது.
ஊழல் வாரிசுகள் : ராகுல், பிரியங்கா மற்றும் மஸிம்மோ
1980 முதல் 1987 கள் வரையான இந்திரா காந்தியின் இறுதிக் காலங்களிலும், ராஜீவின் ஆரம்பக் காலத்திலும் குவட்ரோச்சி தான் நினைப்பதைச் செய்துமுடிக்கும் அதிகாரத்திலும், செய்பவற்றிலிருந்து பணம் சம்பாதிக்கும் திறமையிலும் வளர்ந்திருந்தார். அவரால் முன்வைக்கப்பட்ட எந்தவிதமான வர்த்தக உடன்பாடுகளோ, வர்த்தக முதலீடுகளோ காந்திகுடும்பத்தால் நிராகரிக்கப்படவில்லை. இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் அமைச்சர் ஒருவரின் பார்வையில் குவட்ரோச்சியினால் முன்வைக்கப்பட்ட தாவரங்களுக்கான உர முதலீடு ராஜிவுக்கும் சோனியாவுக்கும் தனிப்பட்ட ரீதியில் லாபத்தினைப் பெற்றுத்தரப்போகிறது என்று தெரிந்திருந்தும் காங்கிரஸ் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
குவட்ரோச்சியின் செல்வாக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் மந்திரிகள் வரை நீண்டிருந்ததாகவும், போர்போர்ஸ் ஊழலினை முதன் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதமரும், முன்னால் காங்கிரஸ் அமைச்சருமான வி பி சிங் தனது நீதிமன்றுக்கான வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
வி பி சிங் மேலும் கூறும்போது, அப்போது அமைச்சராகவிருந்த என்னைச் சந்திப்பதற்கு குவட்ரோச்சி பலமுறை முயற்சித்ததாகவும், ஆனால் அவற்றை தான் நிராகரித்து வந்ததாகவும் கூறுகிறார். ஆனால், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி குவட்ரோச்சியினை தான் சந்திக்க மறுத்தது தொடர்பாகக் கடிந்துகொண்டதாகவும், அவரைச் சந்திக்குமாறு தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். ஜக்டிஷ்பூர் உரக் கம்பனி அடங்கலான பல்வேறு முதலீடுகளில் குவட்ரோச்சி அரச அதிகாரிகளுடனும், அமைச்சர்கள், அரசியல்வாதிகளுடனும் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்றும், இவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் செய்யப்பட்ட முதலீடுகள் என்றும் விசாரணை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
குவட்ரோச்சி இந்தியாவில் குறைந்தது 60 முதலீடுகளை வெற்றிகரமாக தனது கம்பெனிக்கு வாங்கிக் கொடுத்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவற்றில் பிரதானமானவை கீழே தரப்பட்டுள்ளன,
1981 : 9 உரக்கம்பெனிகள் தல் வைஷெட் மற்றும் ஹஸிரா விலும் இவரால் அமைக்கப்பட்டதுடன், எரிவாயுவுக்கான குழாய்களை நிர்மானிக்கும் முதலீடும் இவருக்குத் தரப்பட்டது.
1983 : தேசிய உர நிறுவனத்தின் மூன்று தொழிற்சாலைகள் நய நங்கள் மற்றும் குனா பகுதிகளில் இவரால் நிர்மானிக்கப்பட்டன.
1984 : தேசிய விவசாயிகள் உரக் கூட்டுத்தாபபனத்தின் மூன்று தொழிற்சாலைகள் உத்தர பிரதேசத்தில் இவரால் கட்டப்பட்டன.
1987 : ஆந்திரப் பிரதேசத்தில் நாகர்ஜுனா உர மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளுக்கென இரு தொழிற்சாலைகளை இவர் கட்டினார்.
இவ்வாறான பாரிய முதலீடுகளை இவரது நிறுவனம் இந்திய அரசிடமிருந்து பெற்றுவந்ததையடுத்து, "இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமா? குவட்ரோச்சியைப் பிடியுங்கள் " என்று சர்வதேச முதலீட்டாளர்களின் செல்லப்பிள்ளையாக அவர் அன்று வலம்வந்துகொண்டிருந்தார்.
குவட்ரோச்சியின் முதலீடுகளோ அல்லது விண்ணப்பங்களோ சரியான சமயத்தில் நடைபெறாதுவிட்டபொழுது, இவ்வமைச்சுக்களுக்குப் பொறுப்பான பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் காங்கிரஸ் தலைமைப் பீடத்தால் பழிவாங்கப்பட்டனர்.
உதாரணத்திற்கு, 1985 ஆம் ஆண்டு ஜக்டிஷ்பூரில் அமைக்கப்படவிருந்த எரிவாயு குழாய்களுக்கான டென்டரில் பிரெஞ்சு நிறுவனம் ஒன்று குவட்ரோச்சியின் நிறுவனத்தைக் காட்டிலும் பல கோடி ரூபாய்கள் குறைவாக செலவினை மதிப்பிட்டு விண்ணப்பித்திருந்தது. இதனை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதற்காக இப்பேரத்தில் ஈடுபட்ட அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் உடனடியாகப் பழிவாங்கப்பட்டார்கள். அன்று இந்தியப் பெட்ரோலிய அமைச்சராகவிருந்த நவள் கிஷோர் ஷர்மா பதவியிறக்கப்பட்டு கட்சியில் செயலாளராக உப்புச் சப்பில்லாத நாற்காலிக்கு மாற்றப்பட்டார். அமைச்சரவையின் செயலாளராகவிருந்த பி கே கவுள் வாஷிங்க்டன் மாநிலத்தின் தூதுவராக தூக்கியெறியப்பட்டார். பெட்ரோலிய அமைச்சகத்தில் செயலாளராக கடமையாற்றிவந்த ஏ எஸ் கில் ஒருபோதுமே அமைச்சராகும் வாய்ப்பினைப் பெற முடியவில்லை. இந்திய எரிவாயு அதிகாரசபையின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.
போர்போஸ் பீரங்கி ஊழல் !
போர்போஸ் பீரங்கி
1984 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பாவனைக்கென்று ஹோட்டீசர் வகைப் பீரங்கிகளுக்கான டென்டர்களை இந்திய அரசு கோரியிருந்தது. இந்திய ராணுவ வல்லுனர்கள் நடத்திய ஆய்வில் பிரஞ்சுத் தயாரிப்பான சொப்மா எனப்படும் பீரங்கிகள் போர்போஸ் பீரங்கிகளைக் காட்டிலும் விலையிலும், தரத்திலும் மிகச் சிறந்தவையாகக் கணிக்கப்பட்டிருந்தன. இந்திய ராணுவம் தனது பீரங்கிகளுக்கான வீச்செல்லையாக 30 கிலோமீட்டர்களை எதிர்பார்த்திருந்தது. இதன் பிரகாரம் பிரெஞ்சுப் பீரங்கிகள் குறைந்தது 29.2 கிலோமீட்டர்கள் சூட்டெல்லையைக் கொண்டிருக்க போர்போஸ் பீரங்கிகள் வெறும் 21 கிலோமீட்டர்களையே கொண்டிருந்தன. இந்தக் காரணங்களால் அன்று இந்திய ராணுவத் தளபதியாகவிருந்த கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீ பிரெஞ்சுப் பீரங்கிகளைக் கொள்வனவு செய்வதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், போர்போஸ் பீரங்கிகளுக்கான தாக்கல் பத்திரத்தில் முதலில் குறிப்பிடப்பட்ட பெறுமதிகள் சட்டத்திற்குப் புறபான முறையில் மாற்றப்பட்டு, புதிய டென்டர்கள் கோரப்படாமலேயே, இந்திய ராணுவத்தின் கோரிக்கைகளையும் மீறி இந்திய காங்கிரஸ் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நவீனகால இந்தியாவின் நட்சத்திர பிரதமர் ராஜிவின் திருவிளையாடல் - ஏழைகள் பணத்தில் கும்மாளம்
போர்போஸ் பீரங்கிக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் முதன் முதலில் 1987 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டு வானொலியொன்றிலேயே வெளியிடப்பட்டது. இப்பீரங்கிப் பேரத்தில் பெருமளவு பணம் போர்போஸ் நிறுவனத்தால் இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்தே போர்போஸ் நிறுவனம் இந்தட் டென்டரை தனதாக்கிக் கொண்டது தெரியவந்தது. இத்தகவல்களின்படி ஏ ஈ சர்வீஸஸ் எனும் இத்தாலிய நிறுவனம் பலகோடி இத்தாலியப் பணமான லீராக்களை முற்பண லஞ்சமாகச் செலுத்தியது தெரியவந்தது. போர்போஸ் நிறுவன இயக்குனரின் பிரத்தியேக நாட்குறிப்பின்படி, இப்பேரத்தில் குவட்ரோச்சி செலுத்தியிருக்கும் ஈடுபாடும், பங்கும் வெளித்தெரியவருமிடத்து, அவரின் நெருங்கிய நண்பரான ராஜீவின் பங்கும் வெளித்தெரியவேண்டிவரலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், சுவிஸ் வங்கியில் ஆ ஏ சர்வீஸ் அமைப்பினால் வைப்பிலிடப்பட்டப்பட்ட பெருமளவு பணம் குவட்ரோச்சியின் வங்கிக் கணக்கிலேயே வைப்பிலிடப்பட்டதும் தெரியவந்தது. இந்திய உளவுப்பிரிவால் சுவிஸ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட பல ஆவணங்களில் ராஜீவ் காந்தியின் பெயரும் பரவலாகப் பதிவாகியிருந்த நிலையில், பிரதியெடுக்கப்பட்ட ஆவணங்கள் என்பதால் இவற்றினைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்திய நீதிமன்றம் மறுத்துவிட்டது !!!
நடத்தப்பட்ட பேர ஊழலின் அளவு வெளித்தெரிய ஆரம்பித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதோடு, 1989 தேர்தல்களிலும் கடுமையான சரிவைச் சந்தித்தது. 1993 ஆம் ஆண்டு சுவிஸ் அரசு தமது வங்கியில் பணத்தினை வைப்பிலிட்ட பலரின் பெயர் விபரங்களினை வெளியிட்டபோது, குவட்ரோச்சியின் பெயரும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து இந்திய உளவுத்துறை குவட்ரோச்சியினை விசாரிக்க முடிவெடுத்ததோடு, அவரது கடவுச்சீட்டையும் பறிமுதல் செய்ய அனுமதி கோரியிருந்தது. இவர் கைதுசெய்யப்படுவதற்கு சற்று முன்னர், காங்கிரஸ் கட்சியின் பலம் மிக்க அரசியல் வாதிகள் சிலரின் உதவியோடு 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி தில்லியிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு விமானம் ஏறித்தப்பித்துக்கொண்டார்.
ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடித்த ஊழல்ப் பெருச்சாளிகள் !
அன்று குவட்ரோச்சியினைத் தப்பிக்க வைத்த காங்கிரஸ் தலைவர்களாக சோனியா காந்தியும், அன்றைய பிரதமர் நரசிம்மராவும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேட்டியளித்த குவட்ரோச்சி தான் போர்போஸ் பீரங்கிப் பேரத்தில் லஞ்சம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லையென்றும், ஆ ஏ சர்வீஸஸ் நிறுவனத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும் கூறியிருந்த நிலையில், சோனியா காந்தி தனது முதலாவது பத்திரிக்கையாளர் மாநாட்டில் அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்திய உளவுத்துறை குவட்ரோச்சியினை குற்றவாளியாகச் சந்தேகித்தபொழுதும்கூட, அவருக்கெதிரான எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்க ஆர்வம் காட்டவில்லை. 1999 ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததன்பிறகே மத்திய உளவுத்துறை ஏ ஈ சர்வீஸஸ் என்பது குவட்ரோச்சியினாலும் அவரது மனைவியினாலும் நடத்தப்படும் நிறுவனம் என்றும், இதனைக் காரணமாகக் கொண்டு குவட்ரோச்சியின் மேல் குற்றப்பத்திரிக்கையினை முதன் முதலாக தாக்கல் செய்திருந்தது. சுவிஸ் வங்கியிலிருந்து பெறப்பட்ட 500 இற்கும் அதிகமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பீரங்கி ஊழலில் குவட்ரோச்சியும் அவரது மனைவியும், இன்னும் சிலரும் குற்றவாளிகள் என்று மத்திய புலநாய்வுத்துறை அறிவித்ததுடன், இந்த ஊழலில் பங்கெடுத்தவர்கள் என்கிற பட்டியலில் ராஜீவ் காந்தி உற்பட பல காங்கிரஸ் பிரபலங்களின் பெயரையும் சேர்த்திருந்தது. மேலும், இப்பீரங்கி பேரத்தில் இடைத்தரகராகச் செயற்பட்டமைக்காக குவட்ரோச்சிக்கு சுமார் 3% தரகுப்பணமாக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இன்றைய மதிப்பில் 5,200 கோடி இந்திய ரூபாய்கள்) கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
குவட்ரோச்சியை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தும் முயற்சிகள் இந்திய மத்திய உளவுத்துறையின் கையாலாகாத் தனத்தினால் தோல்வியடைந்ததுடன், 2003 ஆண்டு குவட்ரோச்சி மீண்டும் இத்தாலிக்கு சுதந்திரமாக நாடு திரும்பவும் வழியமைக்கப்பட்டது. இந்தியாவினாலும், இன்டர்போலினாலும் முன்வைக்கப்பட்ட நாடுகடத்தும் கோரிக்கைகள் இத்தாலிய அரசினால் நிராகரிக்கப்பட்டு வந்தன. அத்துடன், அவருக்கெதிரான சாட்சியங்களை இத்தாலிய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இத்தாலிய அரசு விடுத்த வேண்டுகோள்களை இந்திய உளவுத்துறை தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தி வந்தது.
2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி , காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பிறகு தில்லி உயர் நீதிமன்றம், போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில் ராஜீவ் மற்றும் ஏனைய காங்கிரஸ் பிரபலங்களுக்கெதிரான பேர ஊழல் குற்றங்களை நிராகரித்து ராஜீவ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது.
ஆனாலும், இவ்வழக்கு முடியவில்லை. மக்களை ஏமாற்றியமை, அரசுக்கு பாரிய நிதிச்சுமையை ஏற்படுத்தியமை ஆகிய காரணங்களைக் காட்டி தொடர்ச்சியாக இது நடைபெற்று வந்தது. 2005 ஆம் ஆண்டு, தில்லி உயர் நீதிமன்றம் இங்கிலாந்தில் தொழிலதிபர்களாக இருக்கும் இந்தியர்களான சிறிசண்ட், கோபிசண்ட் மற்றும் பிரகாஷ் ஹிந்துஜா ஆகியோரை "ஆவணங்களைச் சரியான முறையில் உறுதிப்படுத்தவில்லை" எனும் யுக்தியைப் பாவித்து இவர்களுக்கும் பீரங்கி ஊழலுக்கும் தொடர்பினை உங்களால் நிறுவமுடியவில்லை என்று கூறி விடுதலை செய்தது.
ஆனாலும், 2005 டிசெம்பர் மாதம் தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்ட இந்திய அரசு, சட்ட அமைச்சராகவிருந்த ஹன்ஸ்ராஜ் பரத்வாஜின் உத்தரவின்பேரில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் டத்தாவை இங்கிலாந்திற்கு அனுப்பி அவ்வங்கியிலிருந்த குற்றவாளிகளினது வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முனைந்திருந்தது. ஆனால், இந்த நடவடிக்கை இந்திய உளவுத்துறையுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
2006 ஆம் ஆண்டு பொதுமக்கள் தகவலறியும் வழக்கு ஒன்றின்மூலம் இந்த குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணம் அரசினால் இவ்வழக்குப்பற்றிய இறுதித் தீர்மானம் எட்டப்படும்வரை பாதுகாப்பாக வைக்கப்படல் அவசியம் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை அளிக்கத் தாமதித்ததையடுத்து, அக்கால இடைவேளைக்குள் சுமார் 4 மில்லியன் டாலர்கள் இக்கணக்குகளிலிருந்து காணாமல்ப் போயிருந்தது .
இது கடுமையான வாதப் பிரதிவாதங்களை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தியிருந்ததோடு, சோனியாவின் அதிகாரத்தில் கடுமையான பாதிப்பினையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆர்ஜென்டீனாவில் கைதும் தொடர்ச்சியான நிகழ்வுகளும்
இன்டர்போலின் கைது உத்தரவினையடுத்து குவட்ரோச்சி 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஆர்ஜென்டீனாவில் கைதுசெய்யப்பட்டார்.
ஜனவரி மாதம், 2007 இல், தனக்கெதிரான இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிர்ருந்தபொழுதும், இத்தாலியிலிருந்து ஆர்ஜென்டீனாவின் புவனஸ் எயர்ஸ் நகருக்கு சுற்றுலா செல்கிறார் குவட்ரோச்சி.
பெப்ரவரி 6 ஆம் திகதி, அங்கிருந்து பிரேசில் நாட்டுக்குத் தப்பிச் செல்ல முனைகையில் போலியான ஆவணங்களை கொண்டிருந்தார் என்கிற அடிப்படையிலும், இன்டர்போலின் தகவலடிப்படையிலும் அவர் தடுத்து வைக்கப்படுகிறார்.
பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி குவட்ரோச்சி தடுத்துவைக்கப்பட்டிருப்பதுபற்றி இன்டர்போல் இந்தியாவிற்கு அறிவிக்கிறது.
பெப்ரவரி 13 ஆம் திகதி கணக்குகளிலிருந்து குவட்ரோச்சியினால் பணம் பெறப்பட்டதுபற்றி நீதிமன்றுக்கு அறிவித்த உளவுத்துறை வேண்டுமென்றே அவர் ஆர்ஜென்டீனாவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் எனும் செய்தியை சொல்லாமல் மறைக்கிறது. அன்றைய உளவுத்துறை இயக்குனராகவிருந்த விஜய் ஷங்கர் இதுபற்றி விசாரணைகளை முகம்கொடுத்திருந்தார்.
பொய்களின் நாயகன் - இந்திய மத்திய உளவுத்துறை இயக்குனர் விஜய் ஷங்கர்
பெப்ரவரி 23 ஆம் திகதி குவட்ரோச்சி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிக்கைவடிவில் மத்திய உளவுத்துறை வெளியிடுகிறது.
பெப்ரவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி, குவட்ரோச்சியின் கைது பற்றிய தகவல்களை வேண்டுமென்றே காங்கிரஸ் அரசும், உளவுத்துறையும் தாமதித்து மக்களுக்கு அறியப்படுத்தியதாகவும், உத்தர்காண்டிலும் பஞ்சாப்பிலும் நடைபெற்றுவந்த தேர்தல்களில் சோனியாவின் அவமானகரமான தோல்வியினைத் தடுப்பதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.
பெப்ரவரி 26 ஆம் திகதி குவட்ரோச்சி பிணையில் விடுதலை செய்யப்படுகிறார். இப்பிணையினை எதிர்த்து வழக்குத் தக்கல் செய்ய இந்தியத் தரப்பிலிருந்து எவரும் ஆஜராகாத போதும், இத்தாலிய அரசு அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியதுடன், அவர் சார்பாக தனது நாட்டுத் தூதரையும் அனுப்பியிருந்தது.
மார்ச் மாதம் 2 ஆம் திகதி : அவரை நாடுகடத்தும் வழக்கு 7 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு வழக்கறிஞரை முதன்முதலாக மத்திய உளவுத்துறை அனுப்புகிறது.
ஜூன் மாதம் 9 ஆம் திகதி : குவட்ரோச்சியை நாடுகடத்தும் இந்திய கோரிக்கையினை பின்வரும் மூன்று காரணங்களை முன்வைத்து ஆர்ஜன்டீன நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளிக்கிறது
அ) 1997 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்து வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட பிழையான ஆவணங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வழக்கு என்றும்,
ஆ) 1997 ஆம் ஆண்டின் பிடிவிராந்து மலேசியாவில் பாவிக்கப்பட்டதனையடுத்து, இப்போது செல்லுபடியாகாதென்றும்,
இ) 1997 இல் பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்தும், நீதிமன்ற உத்தரவும் எழுந்தமேனிக்குத் தயாரிக்கப்பட்டவை என்றும், தமது கோரிக்கையினை நிரூபிப்பதற்குத் தேவையான சாட்சியங்களையும் ஆவணங்களையும் மத்திய உளவுத்துறை ஒருபோதுமே இவ்வழக்கில் சமர்ப்பிக்கவில்லை
என்றும் கூறி, குவட்ரோச்சியின் வழ்க்கிற்கான செலவினை இந்திய மத்திய உளவுத்துறையே செலுத்தவேண்டும் என்றும் கூறித் தீர்ப்பளித்தது.
குவட்ட்ரோச்சியின் மகனான மஸ்ஸிமோ மீதான குற்றச்சாட்டு :
ஆர்ஜென்டீனாவில் குவட்ரோச்சி கைதுசெய்யப்பட்டிருந்த காலத்தில், அவரது மகன் சுமார் 7 மாதங்கள் இந்தியாவிலேயே தங்கியிருந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் குவட்ரோச்சி கைதுசெய்யப்பட்ட விடயம் வேண்டுமென்றே மத்திய உளவுத்துறையினால் 16 நாட்கள் தாமதித்து மக்களுக்கு அறியத் தரப்பட்டதென்றும், இக்கால இடைவேளையினைப் பாவித்து, மஸ்ஸிமோ இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றார் என்றும் கூறப்படுகிறது. மஸ்ஸிமோ இப்பேர ஊழலில் செலுத்தியிருந்த பங்கினை மறைக்கவே அவர் வேண்டுமென்று மத்திய உளவுத்துறையினால் தப்பிக்க விடப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தாம் தாமதமாக இச்செய்தியினை வெளியிட்டதன் காரணம் ஸ்பானிய மொழியில் இருந்த செய்தியினை மொழிமாற்றம் செய்வதற்குத் தமக்குக் காலம் தேவைப்பட்டதாக இயக்குனர் விஜய் ஷங்கர் கூறையதை யாரும் அன்று ஏற்றுக்கொள்ளவில்லையென்பதும், அது அவரால் புனையப்பட்ட பொய் என்பது, செய்திக்குறிப்பு ஆங்கில மொழியிலேயே இந்திய தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதிலிருந்து தெளிவாகியது.
குவட்ரோச்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பாக காங்கிரஸ் அரசு தாமத்தித்து தீர்மானம் எடுத்து அப்பணத்தினை லாவகமாக குவட்ரோச்சி பெற்றுக்கொள்ள உதவியதும், குவட்ரோச்சி ஆர்ஜென்டீனாவில் கைதுசெய்யப்பட்டதை 16 நாட்கள் காலம் தாழ்த்தியே உளவுத்துறை உள்நாட்டில் அறிவித்ததும், மத்திய உளவுத்துறை அன்றைய காங்கிரஸ் அரசின் முக்கிய தலைவர்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கிவந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி சோனியாவின் மகள் பிரியங்கா வாத்ராவின் களியாட்ட விழா ஒன்றில் மஸ்ஸிமோ கலந்துகொண்டது பலராலும் நினைவுகூறப்பட்டிருக்கிறது. பிரியங்கா வர்தாவுக்கும் மஸ்ஸிமோவுக்குமிடையே எதுவிதமான சந்திப்புகளும் இடம்பெறவில்லை என்று காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தொடர்ச்சியாக மறுத்துவந்தாலும்கூட, மத்திய உளவுத்துறையின் அதிகாரிகள் இதுபற்றி விசாரணைகளை மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத் தக்கது.
ஆனால், சிறுவயதுமுதல் சோனியாவின் பிள்ளைகளான ராகுல் மற்றும் பிரியங்காவுடன் வளர்ந்துவந்த மஸ்ஸிமோ, குவட்ரோச்சியின் கைது மற்றும் வழக்கு ஆகிய விடயங்களில், காங்கிரஸ் உயர் பீடத்தின் செல்வாக்கின்மூலம், வேண்டுமென்றே மத்திய உளவுத்துறை தாமதமாகச் செயற்படவும், வேண்டுமென்றே போலியான ஆவணங்களை நீதிமன்றில் கையளிக்கவும், இவற்றின்மூலம் குவட்ரோச்சீ அனைத்து வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் வழிசெய்ததாக எதிர்க்கட்சிகளும் பத்திரிக்கைகளும் தொடர்ச்சியாக சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காமீது குற்றஞ்சாட்டி வந்தன.
ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை மறுத்த காங்கிரஸ் அரசு, முன்னைய அரசு மலேசியாவில் அவரைக் கைதுசெய இருந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டதனாலேயே தாம் ஆர்ஜென்டீனாவில் வழக்கை நழுவவிட்டதாக நியாயப்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு
போர்போஸ் பீரங்கி ஊழலில் குவட்ரோச்சியே முதன்மைக் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதனால், இது கட்சிக்குள் சோனியாவின் அதிகாரத்தினைக் கடுமையாகப் பாதித்திருந்தது. மேலும், இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் நீதியமைச்சர் பரத்வாஜின் நம்பகத்தன்மையினைக் கேள்விகுள்ளாக்கியதுடன், பிரதமர் மன்மோகன் சிங் சோனியாவின் கைப்பொம்மை எனும் நிலையினையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.
இன்டர்போல் குவட்ரோச்சி மீதான பிடிவிராந்தினை நீக்கிவிடுகிறது
ஏப்ரல் 2009 இல், குவட்ரோச்சிமீது அதுவரையிருந்த சிவப்பு நிலை பிடிவிராந்தினை இன்டர்போல் இந்திய மத்திய உளவுத்துறையின் வேண்டுகோளினை அடுத்து நீக்கிவிடுகிறது.
சுமார் 20 வருடங்கள் நீடித்த இந்த விசாரணையில் குறைந்தது 410 மில்லியன் இந்திய ரூபாய்கள்வரை ( இன்றைய மதிப்பில் 5200 கோடி) குவட்ரோச்சி லஞ்சமகாப் பெற்றுக்கொண்டது இந்திய வருவாய்த்துறை சிறப்பு நீதிமன்று மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள்து.
தொடர்ச்சியாக 25 வருடங்கள் நடந்துவந்த சட்ட நடவடிக்கைகளின் பின்னர், தில்லி நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பின்படி, குவட்ரோச்சி குற்றமற்றவர் என்றும், இதனால் மத்திய உளவுத்துறை தனது வழக்கினை வாபஸ் பெறவேண்டும் என்றும் கூறித் தீர்ப்பளித்தது.
ராஜீவின் ஊழலுக்கு வயது 25 !
இவ்வழக்கின் நீதிபதி வினோத் யாதவின் தீர்ப்பின்படி சுமார் 21 வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்டபோதும் மத்திய உளவுத்துறையினால், தமது வாதத்தினை நிரூபிக்க் முழுமையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லையென்றும், குவட்ரோச்சி லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் மொத்தத் தொகையான 630 மில்லியன் இந்திய ரூபாய்களைக் காட்டிலும் இவ்வழக்கினை விசாரிக்க மத்திய உளவுத்துறை அதிக செலவான 2.5 பில்லியன் இந்திய ரூபாய்களைச் செலவிட்டு அரச பணத்தை வீணாகச் செலவழித்து நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதென்றும் குற்றம் சாட்டினார்.
குவட்ரோச்சியின் இறப்பு
சோனியாவின் நெருங்கிய குடும்ப நண்பரான குவட்ரோச்சி, இறுதிவரை இந்திய உளவுத்துறையினரால் விசாரிக்கப்படாமலேயே தப்பித்ததோடு, 2013 இல் இறக்கும்வரையில் இந்தியர்கள் அவரைக் கைதுசெய்ய முடியாமல்ப் போனதற்கான காரணம் இந்திய காங்கிரஸ் கட்சியில் அதிகாரத்திலிருந்த காந்திகுடும்பமும், அவர்களுக்கு இந்த ஆயுத முகவருடன் இருந்த கொடுக்கல் வாங்கல்களும்தான் காரணம் என்றால் அது மிகையில்லை.
நவீனகால இந்தியாவின் ஊழல்கள் - உபயம் காங்கிரஸின் காந்தி குடும்பம்
No comments:
Post a Comment