பூரி, ஒடிசா மாநிலத்தில் அமைந்திருக்கும் புண்ணிய நகரம். பூரி ஜகந்நாதர் கோயில் உலகப் புகழ்பெற்றது. ‘புருஷோத்தம க்ஷேத்திரம் பூரி ஜகந்நாதம்’ என்று புராணங்களால் போற்றப்படும் அற்புதத் தலம். பல்வேறு புராண நிகழ்வுகள் இங்கு நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம். பகவான் கிருஷ்ணர் இங்கு விரும்பி வந்து கோயில்கொண்டார் என்கிறார்கள். இங்கு பகவான் விஷ்ணு வாசம் செய்வதால் பக்தர்களால் இது வைகுண்டத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறது.
பழைமையான இந்த ஆலயத்தில் பெருமைகள் மிகவும் அதிகம். இங்கு பகவான் கிருஷ்ணர் ஜகந்நாதராக இருக்க, அவரின் அண்ணனான பலராமரும் மாயா சக்தியாய்த் தோன்றிய சுபத்ராவும் அவருடன் கோயில் கொண்டுள்ளனர். இந்த ஆலயத்தின் அதிசயங்கள் பல. அவற்றுள் முக்கியமானது இங்கு பகவான் கோயில் கொண்ட வரலாறு.
பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றியது எப்படி?
பகவான் கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்தபோது அவர் உடலில் இருந்து இரண்டு பகுதிகள் மட்டும் பிரிந்து ஒன்று கடலிலும் மற்றொன்று வனத்துக்குள்ளும் விழுந்தன. வனத்தில் விழுந்த பகுதியை பழங்குடி மக்கள் கண்டெடுத்து, ‘நீல மாதவர்’ என்று வழிபட்டனர். கடலில் விழுந்த பகுதி மூன்று கட்டைகளாக மாறி மிதந்துகொண்டு இருந்தது.
இந்தப் பகுதியை இந்திரத்துய்மன் என்ற விஷ்ணு பக்தன் ஆட்சி செய்துவந்தான். அவன் ஒரு நாள் வனத்துக்குச் சென்றபோது அங்கே நீல மாதவரைப் பற்றி அறிந்து அவரை தரிசனம் செய்ய விரும்பினார். ஆனால் பழங்குடி மக்கள் அதுவரை வேறு யாரையும் அந்த விக்ரகத்தை தரிசனம் செய்ய அனுமதித்ததில்லை. மன்னன் கேட்கும்போது மறுக்க இயலாமல் அவனை விக்ரகம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சென்று பார்த்தபோது நீல மாதவர் திருமேனி மறைந்துவிட்டது. பழங்குடி மக்களும் மன்னரும் இதனால் வருத்தமடைந்தனர்.
பகவான் விஷ்ணுவுக்கு ஆலயம் எழுப்பலாம் என்று அவன் ஆசைப்பட்டு இப்படி விக்ரகம் மறைந்துபோனது அவனுள் வருத்தத்தை தந்தது. அன்று அவன் கனவில் தோன்றி பகவான் விஷ்ணு, “மன்னா வருந்தாதே... நீ எங்கே கோயில் கட்டுகிறாயோ அங்கேயே நான் கோயில் கொள்வேன். அது வைகுண்டத்துக்கு இணையான தலமாகத் திகழும்” என்று உறுதியளித்தார். இதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து பூரியில் பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினார் என்கிறது தலவரலாறு.
முழுமையடையாத விக்ரகங்கள் பிரதிஷ்டையானது எப்படி?
ஆலயம் தயாரானதும் அதற்குள் வழிபட திருமேனிகள் வேண்டும் அல்லவா... அதற்காக அவர் பெருமாளை தியானித்தார். பெருமாள் கனவில் தோன்றி “நாளைக் காலை கடற்கரைக்குச் செல். அப்போது உன் அருகே வரும் கட்டையைக் கொண்டு மூலவர் திருமேனியைச் செய்” என்று கட்டளை இட்டார். மன்னனும் அதேபோன்று காலையில் கடற்கரைக்குச் செல்ல, பல கட்டைகள் கடலில் மிதந்து சென்றன. ஆனால் எதுவும் மன்னன் அருகே வரவில்லை. மன்னன் மனத்தில் இறைவனைத் துதித்தார். அப்போது மூன்று கட்டைகள் அவன் அருகே வர மூன்றையும் எடுத்துக்கொண்டு ஆலயத்துக்குத் திரும்பினான்.
நாட்டின் சிற்பிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தான். வைகுண்டத்தில் பெருமாள் இருப்பதுபோன்று உங்களால் ஒரு திருவடிவைச் செய்யமுடியுமா என்று கேட்டான். யார் வைகுண்டம் சென்று பெருமாளை பார்த்திருகிறார்கள்... அதேபோன்று திருமேனி செய்ய?
அதனால் யாரும் முன் வரவில்லை. அப்போது வயதான ஒரு சிற்பி வந்தார். 28 நாள்களில் தான் அந்தத் திருமேனியைச் செய்வதாகவும் அந்த 28 நாள்களும் ஆலயத்துக்குள் தன்னை வைத்துப் பூட்டிவிட வேண்டும் என்று சொன்னார். மன்னரும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.
தினமும் மன்னன் ஆலய வாசலுக்குச் செல்வார். உள்ளே சிற்பி வேலை செய்யும் ஒலி கேட்கும். மகிழ்ச்சியோடு திரும்ப வந்துவிடுவார். ஆனால் 27-ம் நாள் மன்னன் சென்றபோது சத்தம் எதுவும் இல்லை. ஒருவேளை வயதான சிற்பிக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று பயந்து ஆலயத்தின் கதவைத் திறந்தான். என்ன ஆச்சர்யம், உள்ளே யாரும் இல்லை. அந்த சிற்பி மாயமாகி இருந்தார். சிற்பங்களும் கைகால்கள் இன்றி முழுமையடையாமல் இருந்தன. தான் தவறு செய்துவிட்டதை எண்ணி மன்னன் வருந்தினான்.
அப்போது பகவான் மகாவிஷ்ணு அசரீரியாக, தானே சிற்பியாக வந்ததாகவும், நிபந்தனையை மீறிக் கதவைத் திறந்ததால் சிலை வடிக்கும் பணி தடைப்பட்டுவிட்டது என்றும் கூறினார். மேலும் இதனால் பாதகம் இல்லை. இதே திருமேனியில் நான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன் என்று உறுதியளித்தார். அங்கே கறுமை நிறத்தில் உள்ள விக்கிரகம் தான்தான் என்றும் வெண்மை நிறத்தில் இருப்பது பலராமர் என்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது, கோகுலத்தில் அவதரித்த மாயா துர்கையான சுபத்திரை என்றும் சொல்லியருளியது அந்த அசரீரி. மன்னன் பெருமகிழ்ச்சி கொண்டு அவற்றை பிரத்ஷ்டை செய்து வழிபாடுகள் செய்தான்.
பூரி ஆலயத்தின் மீது பறவைகள் விமானங்கள் பறக்காதா?
பூரி ஆலயத்தின் மீது பறவைகளும் விமானங்களும் பறப்பதில்லை. இதற்குக் காரணம், இந்த ஆலயத்தை கருடபகவான் சுமந்துகொண்டிருப்பதுவே என்கிறது புராணம். கருடன் பறவைகளின் தலைவன். எனவே அவன் மீது தங்கள் நிழல்படுவது முறையன்று என்று பறவைகள் பறப்பதில்லை என்கிறது புராணங்கள்.
அறிவியலாளர்கள் அதற்குச் சொல்லும் காரணம், பூரி ஜகந்நாத் ஆலயம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் அடி உயரம் உள்ள அந்த ஆலயத்தின் மீது காற்றின் வேகம் மிகவும் கடுமையாக இருக்கும். அந்தப் பகுதியில் அந்த வேகத்துக்கு எதிராகப் பறந்து செல்லும் பறவைகள் இல்லை என்றும் கழுகு போன்ற பறவைகளாலேயே அந்த வேகத்துக்கு எதிராகப் பறக முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் இத்தனை காலத்தில் பருந்துகள் கூடக் கோயிலுக்கு மேல் பறந்ததில்லையே ஏன் என்னும் பக்தர்களின் கேள்விக்கு ‘அது இயல்பான ஒன்றாக இருக்கலாம்’ என்று சொல்கிறார்கள்.
விமானங்களும் பறப்பதில்லை!?
பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் மேற்கூரையில் எட்டு வட்டவடிவிலான உலோக யந்திரத் தகடுகள் (சக்கரங்கள்) பொறுத்தப்பட்டுள்ளன என்றும் அவை வயர்லஸ் சிக்னல்களைத் தடை செய்யும் ஆற்றலை உடையன என்றும் எனவேதான் விமானிகள் இந்த ஆலயத்தின் மீது பறப்பதில்லை என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். ஆனால் இதற்கு விமானப் போக்குவரத்துத் துறையினர், “இந்த வான்வெளி வழியாக எந்த விமானப் பாதையும் இல்லை என்பதுதான் விமானங்கள் பறக்காததற்குக் காரணம்” என்று சொல்கிறார்கள்.
ஆனால் இப்போது அல்ல, எப்போதுமே அதன் மீது விமானங்கள் பறக்க முடியாது. போர்க்காலங்களில் கூட விமானங்கள் விலகித்தான் சென்றிருக்கின்றன என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள்.
பூரி ஜகந்நாதர் திருக்கோயில் பிரசாதம்!!
இங்கு வழங்கப்படும் பிரசாதம் விசேஷமாகக் கருதப்படுகிறது. பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது என்கிறார்கள்.
300 சமையற்கலைஞர்களும், உதவியாளர்கள் 600 பேரும் ஒருநாளைக்கு 20,000 பேருக்கும் பண்டிகை நாள்களில் ஒரு லட்சம் பேருக்கும் சமைக்கிறார்கள். உலகத்தின் பெரிய சமையலறை இங்குள்ளது. 56 வகையான பிரசாதங்களுக்குப் புகழ்பெற்ற 'சப்பன் போக்’ இந்தக் கோயிலின் சிறப்பு!
சமையலறையில் சமைக்கப்பட்டு கடவுளிடம் எடுத்துச் செல்லும்போது அந்த உணவுகளுக்கு எந்த மணமும் இருப்பதில்லை. சாமிக்குப் படைக்கப்பட்டு, `ஆனந்த் பஸார்’ என்ற இடத்தில் பிரசாதங்கள் விநியோகிக்கப்படும். அப்போது அந்த உணவுகளின் வாசம் ஊரே மணக்கும். அந்த வாசனையை உணர முடிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றொரு நம்பிக்கை.
மண் பாத்திரங்களில் தான் சமைக்கிறார்கள். ஐந்து பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, அடியில் விறகுகள் வைத்துச் சமைக்கிறார்கள். சமைக்கும்போது மேலே உள்ள பானையிலுள்ள உணவு முதலில் வெந்துவிடும். இப்படியோர் அதிசயத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அதனால் மகாலட்சுமியே வந்து சமைப்பதாகவும் நம்பப்படுகிறது.
அந்த ஊருக்கான காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மட்டுமே பயன்படுத்தப் படும். ஏலக்காய், பச்சைக் கற்பூரம் கிடையாது. சேப்பங்கிழங்கு, வாழைக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீசனுக்கேற்ப இந்த மெனு மாறும்.
வெயில் காலத்தில் மோர், நீராகாரம் போன்ற வையும் பிரசாதங்களாகப் பரிமாறப்படுகின்றன. இந்தக் கோயிலில் மதிய நேரத்தில் செய்யப் படுகிற நைவேத்தியம் ரொம்பவே பிரபலம்.
இங்கு சமைக்கப்படும் உணவுகளை மகாலட்சுமியே நேரடியாகக் கண்காணிப்பதாக ஐதிகம். இதனால் இங்கே சமைக்கப்படும் உணவுகள் மிஞ்சுவதும் இல்லை பற்றாக்குறை ஏற்படுவதும் இல்லை என்கிறார்கள்.
உலக புகழ்பெற்ற பூரி ரத யாத்திரை!
இந்த ஆலயத்தில் ஒரு ஆண்டில் பல உற்சவங்கள் நடைபெற்றால் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த ரதயாத்திரை மிக முக்கியமானது!
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் வருடா வருடம் ஜுன், ஜுலை மாதங்களில் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். இதுதான், உலகிலேயே மிகப் பழமையான ரத யாத்திரையாகக் கருதப்படுகிறது. சந்திர நாள்காட்டியின்படி, ஒவ்வொரு வருடமும் மூன்றாவது மாதத்தில் இரண்டாவது வளர்பிறை சுழற்சியின் போதுதான் இங்கு ரத யாத்திரை நடைபெறும்.
இதற்கென ஒவ்வோர் ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மூன்று மூலவர்களுக்கும் மூன்று தேர்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சுவாமி ஜகந்நாதர் எழுந்தருளும் தேரான 'நந்தி கோஷம்' 45 அடி உயரத்திலும் 35 அடி அகலத்திலும், பாலபத்திரர் எழுந்தருளும் தேரான 'தலத்வாஜா' 44 அடி உயரத்திலும் சுபத்ரா எழுந்தருளும் தேரான 'தேபாதலனா' 43 அடி உயரத்திலும் புதிய தேர்கள் மரத்தால் கட்டப்படுகிறது.
தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜகந்நாதர், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.
வண்ணமயமாகக் காட்சி அளிக்கும் இந்தத் தேர்களுக்குப் பூஜைகள் செய்யப்பட்டபின் ரதயாத்திரை தொடங்கும். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவினைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே குவிவார்கள்.
பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்கு சிறிது தூரத்தில் உள்ள மவுசிமா கோயில் மற்றும் குண்டிச்சா கோயில் வரை இந்த யாத்திரை செல்லும். குண்டிச்சா கோயிலில் சுவாமி ஜகந்நாதர் தங்கியிருக்கும்போது தேவி மகாலட்சுமி சுவாமியை வந்து தரிசிப்பதாகவும் பிறகு சுவாமியோடு சேர்ந்து கோயிலுக்கு எழுந்தருள்வதாகவும் ஐதிகம்.
குண்டிச்சா கோயில் தான் பூரியில் உள்ள கடவுள்களின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இதற்காக ஜகநாதர், அவரின் அண்ணன் பாலாபத்ரா மற்றும் தங்கை தேவி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேரில் பூரியின் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வர். ஏழு நாள்களுக்குப் பிறகே இவர்கள் பூரியில் உள்ள கோயிலுக்குத் திரும்புவர். இதைக் காண உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பூரிக்கு வந்துவிடுவர்.
தற்போது ஒடிசாவில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது என்றபோதும் பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரதயாத்திரையில் கலந்துகொண்டனர்.
ரத யாத்திரையில் தங்கத் துடைப்பத்தால் சுத்தம் செய்யும் பூரி மன்னர்!
பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். இந்த வழக்கம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளதாகவும் இன்றும் அந்த நடைமுறை மன்னரின் பரம்பரையினரால் பின்பற்றப்படுகிறது. இது ஒரு காலத்தில் பூரி செல்வச் செழிப்போடு விளங்கியதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்கிறார்கள்.
உலகில் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ரத யாத்திரையை தரிசனம் செய்ய வருவார்கள். இப்படி பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் சிறப்புகளும் அதிசயங்களும் பலப்பல.
No comments:
Post a Comment